உங்கள் வருகைக்கு நன்றி

இடி விழுந்தும் முடங்காமல் சாதித்துக் காட்டியவர்

சனி, 26 மே, 2012


வாழ்க்கையில்,சிறிய அளவில் இழப்பு ஏற்பட்டாலே, எதிர்காலத்தையே தொலைத்து விட்டதுபோல், மூலையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மத்தியில், உடலின் பெரும்பகுதி செயல் இழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடனும், தளராத முயற்சியுடனும் செயல்பட்டு, சாதித்துக் காட்டியிருக்கிறார் ஒருவர். மன வலியையும், உடல் வலியையும் பொருட் படுத்தாமல், பல சாகசங்களை நிகழ்த்தி யிருக்கும் இந்த மனிதரின் செயல்பாடு, உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட வர்களின் மனதில், நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறது.
இந்த வித்தியாசமான சாதனையாளரின் பெயர், பாரி வெஸ்ட். வயது 35. பிரிட்டனின் கிழக்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில், ரக்பி, குத்துச் சண்டை போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந் தார். மிகப் பெரிய குத்துச் சண்டை வீரராக வேண்டும் என்பது இவரது கனவு. 19வது வயதில் ஏற்பட்ட விபத்து, இவரது வாழ்க்கைப் பாதையையே, ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டு விட்டது.
நண்பர்களுடன் ஜாலியாக காரில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. பாரிவெஸ்ட்டின் கழுத்தில், இரண்டு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. முதுகெலும்பிலும் பலத்த அடி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாரி வெஸ்ட்டுக்கு, அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அவரது கழுத்துக்கு கீழ் உள்ள அனைத்து உறுப்புகளும், இனி செயல்படாது என, டாக்டர்கள் கூறி விட்டனர். கால் மற்றும் கைகளை, அவரால் அசைக்க கூட முடியாது. வாழ்க்கை முழுவதும் இனி, வீல் சேரில் தான் என்றாகி விட்டது. சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய பாரி வெஸ்ட்டுக்கு, இதை ஜீரணிக்கவே முடியவில்லை. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்.

அப்போது தான், அவரது நண்பர் ஒருவர், இவரைச் சந்தித்தார். அவரும் ஒரு மாற்றுத்திறனாளி தான். "ஏன் இப்படி, வாழ்க்கையையே தொலைத்து விட்டது போல் முடங்கிக் கிடக்கிறாய். ஆரம்பத் தில், நானும் உன்னைப் போல் தான் கவலைப்பட்டேன். இப்போது ஆகாயத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் ஸ்கை டைவிங் பயிற்சி பெறுகிறேன்...' என, கூறியதோடு, தான் பயிற்சி பெறும்போது எடுத்த புகைப்படங்களையும் காட்டினார்.
இதைப் பார்த்த பாரி வெஸ்ட்டின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "நண்பர்களின் உதவியுடன் இதைச் சாதித்தேன். உன்னாலும் முடியும். முயற்சித்துப் பார்...' என, நம்பிக்கை அளித்தார், அந்த நண்பர். அவ்வளவு தான். பாரி வெஸ்ட்டின் மனதில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. நண்பர்களின் <உதவியுடன், ஸ்கை டைவிங் பயிற்சி பெற்றார். நண்பர் ஒருவரின் உடலுடன், தன் உடலை, பாராசூட் மூலமாக பிணைத்து, விமானத்தில் இருந்து குதித்து, பூமியில் தரை இறங்கும் பயிற்சியை பெற்றார். ஆரம்பத்தில் கடும் வலி ஏற்பட்டாலும், போகப் போக, பழகி விட்டது. வெற்றிகரமாக ஸ்கை டைவிங் பயிற்சியை முடித்தார்.
இதன்பின், அவரது மனம் அமைதி அடையவில்லை. பாரா கிளைடிங், கயிறு மூலம் மலையேறுதல் (வீல் சேரில் அமர்ந்தபடி), படகு ஓட்டுதல், பனிச் சறுக்கு, ஆழ் கடலில் நீந்துதல் போன்றவற்றிலும் பயிற்சி பெற்று, அவற்றிலும் சாதித்துக் காட்டினார். அதிலும், செங்கடலில், நண்பர் உதவியுடன், நீச்சல் பயிற்சி பெற்றது, இவருக்கு பெரும் சவாலாக இருந்தது. இப்போது, ஆழ் கடலில் நீச்சலுடன் கூடிய பல்டி அடிக்கும் (ஸ்கூபா டைவிங்) போட்டியிலும் தேர்ச்சி பெற்று, அதில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய அளவுக்கு தகுதி பெற்று விட்டார். இதுதவிர, வாயில் தூரிகையை பிடித்து, அட்டகாசமான ஓவியங்களை வரைவதும், இவருக்கு கை வந்த கலை. இவரது மகத்தான சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்தாண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியின்போது, ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் வீரர்களில் ஒருவராக, இவரையும் தேர்வு செய்துள்ளது, பிரிட்டன் அரசு.
சாதனையாளர் பாரி வெஸ்ட் கூறுகையில், "என்னைப் போல் முடங்கி கிடப்பவர்களுக்கு, முன் உதாரணமாக திகழ வேண்டும் என, நினைத்தேன். என்னுடைய இந்த கடுமையான முயற்சிக்காக, நான் பட்ட வலிகளும், வேதனைகளும் அதிகம். ஆனால், தற்போது அவை அனைத்தையும் மறந்து விட்டேன்...' என, கண்களில் உற்சாகம் பொங்க கூறுகிறார்.
ஒரு சிலருக்கு, தன்னம்பிக்கை எப்போதாவது ஏற்படும். இவருக்கான தன்னம்பிக்கை, இவரது உடல் முழுவதும் இரண்டறக் கலந்திருக்கிறது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets