பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்கு எது காரணம்
வியாழன், 22 நவம்பர், 2012
இதற்கு பாதிக்காரணம் பெற்றோர்கள் தான். தங்கள் பிள்ளைகளை உயர்படிப்புக்கு தயார் செய்யும் எந்திரங்களாகவே அவர்கள் வளர்க்கிறார்கள். படிப்பில் பிள்ளைகள் தங்கள் விருப்பத்தை புறக்கணித்து விட்டு பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாக வேண்டிய கட்டாயம்.
இப்படி பெற்றோரின் விருப்பம் திணிக்கப்பட்டு டாக்டராகவோ, என்ஜினீயராகவோ உருவாகும் பிள்ளைகள் தங்கள் எதிர்கால பட்ஜெட்டில் போடும் முதல் துண்டே அவர்கள் பெற்றோர் தான். இதுவே அந்தஸ்து, ஆடம்பரம், அள்ளிக் குவிக்கும் பணம் என்ற கனவில் இருந்து விடுபட்டு அவனுக்குள் அன்பை எத்தனை பெற்றோர் விதைத்திருப்பார்கள்? அப்படி விதைக்கத் தவறும்போது தான் பிள்ளைகள் வளரும் காலத்தில் பாசம் தடுமாறுகிறது.
எந்தப்பணம் இருந்தால் அது தங்கள் பிள்ளையை கடைசி வரை பார்த்துக் கொள்ளும் என்று பெற்றோர் நினைத்தார்களோ, அதே பணம் பெற்றோரின் வயதான காலத்தில் பிள்ளைகளால் அவர்களுக்கு பிச்சை போல் தரப்படுகிறது. `நீ என்னை பணம் காய்ச்சும் மரமாக்கினாய். அதில் இருந்து உனக்கும் கொஞ்சம் தருகிறேன்.
பெற்றுக்கொண்டு எங்காவது கண்காணாத இடத்தில் உன்னை பார்த்துக்கொள்' என்கிற பிள்ளைகள் இப்போது அதிகரித்து விட்டார்கள். இப்படி பெற்றோர்-பிள்ளைகள் என்ற பந்தம் அற்றுப் போகப் பண்ணுகிற வித்தையை பணம் பிரதானமாக இருந்து செய்து முடித்து விடுகிறது.