மாணவர், ஆசிரியர், பெற்றோர் உறவு
ஞாயிறு, 11 நவம்பர், 2012
அந்த காலத்தில் சொல்லப்பட்ட, "தந்தையுடன் கல்விபோம், சான்றோன் ஆக்கல் தந்தைக்கு கடனே, எழுத்தறிவித்தவன் மாதா, பிதா, குரு என்பன, தற்காலத்தில் செல்லாக் காசாகிவிட்டன. மாணவர்கள், பள்ளியில் கற்பதை விட, வெளியுலகில் வேண்டாத விவரங்கள் பலவற்றை கற்கும் சூழ்நிலையும், சுற்றுப்புறமும் அதிகரித்து விட்டது. நன்றாக படிக்கவில்லையே என்று மாணவர்களை கண்டித்தால், மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து, ஆசிரியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட வைக்கின்றனர். "மத்தளத்திற்கு இருபக்கமும் இடி' என்பதைப் போன்று, மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகி களுக்கிடையே சிக்கிக் கொண்டு, கால்பந்து உதை படுவது போன்ற நிலையில் தான், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். ஆசிரியர்களின் நிலை, வேதாளத்திற்கும், பாதாளத்திற்கும் இடையே மாட்டி சிக்கித் தவிக்கும் பரிதாப நிலையாக உள்ளது. "மாணவர்களை திட்டாதீர்கள், கொடிய சொற்களால் வையாதீர்கள், மாணவர்களின் உள்ளம் உடைந்துவிடும்' என்று, மனித உரிமை கமிஷன் கூறுகிறது. மாணவர்கள், ஆசிரியரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் போது, ஆசிரியர்கள் உள்ளம் உடையாதா; ஆசிரியர்கள் என்ன மரக்கட்டைகளா? மாணவர்களுக்கு எதிரி, ஆசிரியர்கள் என்பது போன்று, நடைமுறை உள்ளதே தவிர, கற்றுக் கொடுக்கும் நண்பர்கள், ஆசிரியர்கள் என்ற எண்ணம் மாணவர்களிடம் இல்லை. ஆசிரியர் தொழில் மேன்மையாகக் கருதப்பட்ட காலம் மாறி, ஆசிரியர் தொழில் ஆபத்தானது என்ற நிலையில், ஆசிரியர்கள் பயந்து, பயந்து பதறிப்பதறி செயல்படும் நிலை உருவாகிவிட்டது. மாணவர்கள் கெட்டுப்போக வேண்டுமென்று, எந்த ஆசிரியரும் விரும்பமாட்டார்; அப்படி விரும்பும் ஒரு சிலர், ஆசிரியர்களே அல்ல. இதற்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அடிக்கடி பெற்றோர், ஆசிரியர்களோடு தொடர்பு கொண்டால், மாணவர்கள் போக்கு நன்கு அமையும். ஒவ்வொரு மாதமும், "ஓபன் ஹவுஸ்' முறையை பின்பற்றி, பெற்றோரே நேரில் சென்று, மாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்து, கார்டில் கையெழுத்து இடுவது மிக மிக நல்லது. இதனால், மாணவனின் மனநிலை நன்றாக முன்னேறும். ஆசிரியர்களுக்கு ஆர்வமும் ஏற்படும். வருமுன் காப்பது நல்லது; வந்தபின் பார்ப்போம் என்பது அறிவீனம். இதை பெற்றோர் அறிவது நல்லது.