உங்கள் வருகைக்கு நன்றி

ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டை இப்படி பாதுகாக்க

வெள்ளி, 31 டிசம்பர், 2021

 மழைக் காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வெளிப்புறச் சுவர் நேரடியாக மழை நீரில் நீண்ட நேரம் படும்போது, அது சுவர்களில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். வெளிப்புற பூச்சு வேலை, பெயின்டிங்கின் தரம் மற்றும் வேலைப்பாடு மோசமாக இருந்தால், அது உள்சுவர்களின் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்.

நீரைத் தடுக்கும் பூச்சு செய்யப்படாவிட்டால், தண்ணீர் கசியும்; இது சுவர்களிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தும்.ஒரு வீடு; அதனுள்ளே தண்ணீர் தேங்கவில்லை; ஆனால், வெளியே வீட்டைச் சுற்றி ஓரடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்நிலையில், அந்த வீட்டின் அடித்தளத்தில் உள்ள செங்கற்களில் நீர் ஊறும். அதன் தொடர்ச்சியாக அதன் மேலுள்ள செங்கற்களிலும் நீர் ஏறி, ஊறும்; இதை, 'கேப்பிலரி' என்கிறோம்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாமலிருக்க, அடித்தளத்தில் கான்கிரீட்டுடன், 'வாட்டர் ப்ரூபிங்' ரசாயனத்தைக் கலந்து, செங்கற்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் போடுவதன் வாயிலாக, ஈரப்பதம் தங்குவதைத் தவிர்க்கலாம். வெளிப்புறச் சுவரில் சிறிய விரிசல்கள் இருந்தாலும், அது சுவரில் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்; இதுவும் பூஞ்சையை உருவாக்கும்.
ஈரப்பதம் காரணமாக உருவான பூஞ்சையை, மழைக்காலம் முடிந்த பின் உப்புத் தாள் பயன்படுத்தி தேய்க்கலாம்; அதன்பின் மறுபடியும் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம். வெளிப்புறச்சுவரில், 'டேம்ப் ஷீத் ப்ரைமர்' என்ற பூச்சை, முதல் பூச்சாக பூச வேண்டும். கட்டடம் கட்டி முடித்ததும், வெளிப்புறத்தில் 'ஒயிட் சிமென்ட்'டால் பூசுவர். அதற்கு பதில் டேம்ப் ஷீத் ப்ரைமரை அடித்தால், கட்டடத்தை ஈரம் ஊடுருவாமல் பாதுகாக்கும்
இன்று பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் விரிசல்களைப் பார்க்கிறோம். அந்த விரிசல்களின் வழியே தண்ணீர் ஊடுருவி, சுவர்களில் ஈரப்பதம் தேங்கும். ஹார்டுவேர் கடைகளில், 'க்ராக் பில்லிங் பேஸ்ட்' என்றே பிரத்யேகமாக கிடைக்கும்; சிறிய விரிசல்களில் இந்த பேஸ்ட்டை வைத்து நிரப்புவர். சற்றே பெரிய விரிசல் என்றால், சிமென்ட்டும், நீரும் கலந்த கலவையான சிமென்ட் பால் கலவையை சிறிய குழாய் வழியே விரிசலுக்குள் செலுத்துவர். அது உள்ளே பயணித்து நிரம்பி, விரிசல்களை மூடும். வீட்டை இப்படி பாதுகாக்கலாம்!

சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் எஸ்.சதீஷ்குமார்

Read more...

வயதான பின் வருந்துவதில் பயனில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க, இளமையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது என்பது தான். அலைந்து, திரிந்து வருகிறீர்கள். சற்று ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஒரு கட்டடத்தின் கீழ் அமர்கிறீர்கள். அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழும் அளவில் உள்ளது. அங்கே நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியுமா? அதுமாதிரி தான், ஒவ்வொரு மனிதரின் ஓய்வுகாலமும். ஆணோ அல்லது பெண்ணோ, 60 வயதுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்காமல், பாதுகாப்பான மனநிலையில் இருப்பது தான் நிம்மதியான ஓய்வு காலத்திற்கு அடிப்படை.ஆனால், ஓய்வு காலத்தை நெருங்குபவர்களின் நிலையும், இன்னும் சில ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறவர்களின் நிலையும் அப்படியா இருக்கிறது? அரசுத்துறை ஊழியர்களுக்காவது 'பென்ஷன்' கிடைத்து விடுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, பென்ஷன் என்று எதுவும் கிடையாது. பி.எப்.,பில் சேர்த்து வைத்த சில லட்சங்களை, வாரிசுகளின் திருமணத்திற்கு அல்லது பிற குடும்ப செலவுகளுக்கு செலவழித்து விட்டு, வெறும் கையுடன் தான் பெரும்பாலானோர் இருப்பர். வயதான காலத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் மனைவியுடன், கையில் சொற்ப பணத்துடன், மனதுக்கு பிடிக்காத வேலையுடன் தான் எஞ்சிய காலத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கும்.வாழ்நாள் முழுக்க, குடும்பத்திற்காக உழைத்து விட்டு, 60 வயதுக்கு பின் தனக்கும், தன் மனைவிக்கும் போதிய பணமில்லாமல், வாரிசுகளை நம்பி பிழைக்க வேண்டிய நிலை தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. அப்போது தான் புரியும், 'இளம் வயதிலேயே, கை நிறைய சம்பாதிக்கும் காலத்திலேயே, ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக இருக்க, போதிய பணத்தை முதலீடு செய்திருக்காமல் விட்டு விட்டோமே' என்று. அந்த எண்ணம், 60 வயதுக்கு பிறகு, 60ஐ நெருங்கும் போதோ வந்து பயனில்லை. இளம் வயதிலேயே வர வேண்டும்; ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பொதுவாக இளம் வயதில் தான் நாம் அதிகமாக சம்பாதிப்போம். அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். இதை மொத்தமாக செலவு செய்ய முடியாது; சிறுக சிறுக செய்ய வேண்டும். ஓய்வுக்கு பின், எவ்வளவு பணம் மாதந்தோறும் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சேமிப்பு, முதலீடு போன்றவற்றை செய்யவேண்டும்.இப்படி செய்தால், முதிய காலத்தில் பணத்திற்காக, பிறரிடம் போய் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது!

Read more...

எதுவாக இருந்தாலும் யோசிக்கனும்!.

வியாழன், 8 ஜூலை, 2021

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதை வாங்கணுமா என்று பல முறை யோசிப்பது சிக்கனத்திற்கான முக்கியமான வழி. ஆனால், அந்த யோசனை நம்மை வாங்க விடாமல் செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நாம் வாங்க விரும்பும் பொருட்கள் தொடர்பான தகவல்களும், விளம்பரங்களும் நம் ஆசையை தொடர்ந்து துாண்டிக் கொண்டே இருக்கும். 'ஆசையை, இன்னும் ஏழு நாட்களுக்கு தள்ளிப் போடுவோம்' என மனதில் உறுதியாக நினைத்து தள்ளி போட வேண்டும். ஒரு வாரத்திற்கு அப்படி தள்ளிப் போடும் போது, நாம் விரும்பிய, அதிக தேவையற்ற பொருள் மீதான ஆசை குறைந்திருக்கலாம் அல்லது மிகவும் அதிகரித்திருக்கலாம்.
மிகவும் அதிகரித்திருக்கும் பட்சத்தில், அந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் நாம் வாங்க நினைத்த பொருள், அதிக முக்கியத்துவம் இல்லாத பொருளாக இருந்தால், அந்த ஏழு நாட்களில் நம் ஆசை குறைந்து விடும். இந்த முறை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறை. எனவே, பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என நினைப்பவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.ஆசைப்பட்ட பொருளை ஏழு நாட்கள் கழித்து வாங்கலாம் என்று முடிவெடுத்து விட்டால், அந்த இடைவெளி நாட்களில், கிரெடிட் கார்டை இந்த பொருள் வாங்க பயன்படுத்தி தான் ஆக வேண்டுமா;  இ.எம்.ஐ., கட்ட சிரமமாக இருக்குமே என்பன போன்ற மன ஓட்டங்கள் அதிகரித்து, ஏழு நாட்கள் முடிவில், அந்த பொருள் மீதான ஆசையை அறவே துண்டித்து விடும்.அதுபோல, மற்றொரு பொருள் மீதான ஆசை, அதன்பின் வர வாய்ப்பு உள்ளது. முந்தைய பொருளை, கையில் பணம் கிடைக்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி நாட்களை தள்ளிப் போடுவதால், நல்ல பொருட்களை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, பிரபலமான பிராண்ட் ஒன்றின் பொருளை, அதிக விலைக்கு வாங்க முடிவு செய்திருப்பீர்கள். அதுபோன்ற பொருள், விலை குறைவாகவும் கிடைக்கும். இப்படி தள்ளிப் போடுவதால், விலை குறைந்த பொருளை வாங்கவும் நம்மால் முடியும். இதனால் வீணாக கூடுதல் பணம் கொடுப்பது குறைந்து விடும்.முக்கியமாக, 'ஆபர்' போட்டுள்ளனர் என்பதற்காக, பார்த்த உடனே வாங்க துடிக்க கூடாது. அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டால், ஏழு நாட்களில் அந்த ஆபர் மீதான ஆர்வம் நம்மிடம் குறைந்திருக்கும். இதுபோன்ற 'டெக்னிக்'குகளை பயன்படுத்தி, வீணான பொருட்களை வீட்டில் சேர்க்காமல் இருக்க முடியும்!

Read more...

வாகன காப்பீடு.

சனி, 19 ஜூன், 2021

இந்த கொரோனா நேரத்தில் பொது போக்கு வரத்து முடங்கியுள்ளதாலும், அதிக தொற்றுக்கு வாய்ப்பு இருப்பதாலும், தனியார் தங்கள் வாகனங்களைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் விபத்து அபாயமும், நிறுத்தியுள்ள இடத்தில் திருட்டு அபாயமும் உள்ளது. விபத்தில் வாகனம்சேதமடைந்தால், அதற்கான இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்திடம் இருந்து பெறலாம்.அதற்கு முதலில் செய்ய வேண்டியது, விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, முறைப்படி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். காவல் துறையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் தெரிவிக்கும் வரை, விபத்து நடந்த இடத்திலிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தக் கூடாது. அனுமதி கிடைத்த பிறகு வாகனங்களை எடுத்துச் சென்று பழுது பார்த்தால், அதற்கான தொகை கிடைக்கும்.ஒரு வேளை வாகனம் திருட்டு போய்விட்டது என்றாலும், உடனடியாக அந்த வாகனம் நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக திருட்டு போன வாகனம் குறித்த தகவலை, காப்பீடு செய்துள்ள நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.பின், வாகனம் திருடப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை, ஓட்டுனர் சான்று, வாகன பதிவுச் சான்று ஆகியவற்றை, காப்பீடு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். 90 நாட்களுக்கு பிறகும் வாகனம் கண்டுபிடிக்கப்படாவிட்டால், வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலை சான்றாக, காவல் நிலையத்திடம் பெற வேண்டும். அதை வைத்து விண்ணப்பித்தால் தான், 'கிளெய்ம்' நடைமுறைகளை காப்பீடு நிறுவனம் துவக்கும்.எனினும், இப்போது பல முன்னணி நிறுவனங்கள், மொபைல் போன் செயலி அல்லது இணையதளம் மூலம் உடனடியாக, 'ஸ்பாட் கிளெய்ம்' பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் வாகனம் இருக்கும் நிலையை படமாக எடுத்து, 'அப்லோடு' செய்தால், கிளெய்ம் வழங்கும் நடைமுறையை, காப்பீடு நிறுவனம் துவக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், 20 நிமிடங்களில் கூட காப்பீடு நிறுவனம், நம் வங்கிக் கணக்கிற்கு, தொகையை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.எனவே, மோட்டார் வாகன இன்சூரன்ஸ், வாகனங்களுக்கு அவசியமானது மட்டு மின்றி, இந்த காலத்தில் மிகவும் அவசியமானது!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ராமலிங்கம்: 


Read more...

உங்கள் மொபைல் எங்கேயுள்ளது ?.

சனி, 12 ஜூன், 2021

அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள விபரங்களை அழிப்பது எப்படி?  நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக, 'ஸ்மார்ட் போனும், ஆப்'களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது.எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா... கவலை வேண்டாம்; கண்டுபிடித்து விடலாம்.முதலில் போனை வாங்கியவுடன், போனின், ஐ.எம்.இ.ஐ., எண்ணை தெரிந்து கொள்ளணும். போனில், '*#06#' என்று டைப் செய்து டயல் செய்தால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வெளிப்படும்; அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான, 'இ - மெயில்' முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.போன் தொலைந்து போனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என, தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அதை, 'லாக்' செய்யவும் முடியும்; அதிலுள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்.எனவே, போனின் மாடல் எண், ஐ.எம். இ.ஐ., எண், போன் அக்கவுன்டுக்கான இ - மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற வற்றை மறந்து விடாமல் இருக்க, பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.நம் போன் காணாமல் போனால்android.com/devicemanager ' அல்லது https://findmymobile.samsung.com/' என்ற 'வெப்சைட் லிங்க்கு'கள் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.இந்த இணைய தளத்திற்கு சென்று, நம், 'ஜி - மெயில்' முகவரி மற்றும் 'பாஸ்வேர்டு' மூலம் 'லாகின்' செய்து கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில், 'ரிங், லாக், எரேஸ்' என, மூன்று விபரங்கள் இருக்கும்.'ரிங்' என்ற விபரத்தைகிளிக் செய்தால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்து எங்கிருக்கிறது என, கண்டறியலாம்.'லாக்' ன்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்து விடலாம். 'எரேஸ்' என்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய்து கொள்ளலாம்.முக்கியமாக, நம் போன் தொலைந்து விட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இ - மெயில், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிட வேண்டும்.      'காம்கேர்' கே.புவனேஸ்வரி:

Read more...

தேவையில்லாத செலவுகளை தவிர்க்க

திங்கள், 10 மே, 2021

உங்கள் குடும்ப செலவுகளை பட்ஜெட் போட்டு மேற்கொள்ளும் போது, பணத்தை திட்டமிட்டு செலவு செய்வீர்கள். அது, அனாவசிய செலவுகளை குறைக்கும்; மேலும் சேமிப்புக்கும் வழிவகுக்கும். உங்கள் பணம், எந்தெந்த விதங்களில் செலவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள, குடும்ப பட்ஜெட் உதவும். நிதி ரீதியில் பாதுகாப்பாக உணர வேண்டுமானால், குடும்ப பட்ஜெட் மிகவும் அவசியமே. ஆனால் பெரும்பாலானோர் பட்ஜெட் போட்டு செலவு செய்வதில்லை. அப்படி செய்யும் போது, தன் வருமானம் பற்றியும், வருமானத்தை செலவு செய்யும் முறை பற்றியும் தெளிவு இருக்காது.

இதே நிலை தொடர்ந்தால், அனாவசிய செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய தேவைக்குக் கூட கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு, அதிக கடன் சுமை ஏற்பட்டு, பொருளாதாரத்தில் பாதுகாப்பின்மை நிலை உருவாகி விடும்.பெரிய அளவில் வருமானம் இருப்பவர்கள் மட்டும் தான் பட்ஜெட் போட வேண்டும் என்பதில்லை. மிகக் குறைவாக வருமானம் பெறுபவர்களும், பட்ஜெட் போட்டு செலவு செய்வது தான் நல்லது. அத்தியாவசிய பொருளை வாங்குவதற்கு செலவிடுவதை விட, ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு தான் அதிக பணத்தை அடிக்கடி நாம் செலவிடுகிறோம் நம் மீது திணிக்கப்படும் விளம்பரங்களும், அந்த ஆசையை நமக்கு ஏற்படுத்துகின்றன.
இந்த சிக்கலில் இருந்து மீள, குடும்ப பட்ஜெட் மிகவும் அவசியம். விரயச் செலவுகளை கட்டுப்படுத்தி, கட்டுக்கோப்பாக குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என விரும்புவோர், அவசியம் செய்ய வேண்டிய வேலை, குடும்ப பட்ஜெட் போடுவது தான். பட்ஜெட் போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறோம்; திடீரென எதிர்பாராத செலவு வந்து விடுகிறது. அந்த நேரத்தில் பட்ஜெட் போட்டு தான் செலவு செய்வோம் என, நிற்க முடியாது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு என, ஒதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். அதில் சேர்ந்திருக்கும் தொகையை வைத்து, எப்போவாவது வரும் அவசர, எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள வேண்டும். வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் என்றில்லாமல், ஒரு காலத்தில் வயதாகப் போகும், ஓய்வுபெறப் போகும் நபர்களும், இப்போதே குடும்ப பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும். குடும்ப பட்ஜெட் போட, அதற்கான எண்ணமும், சிறிது நேரமும், பேனாவும், நோட்டு புத்தகமும் தான் வேண்டுமே தவிர, வேறு எதுவும் தேவையில்லை!- 

Read more...

வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

 

வாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து, உணர்வுசார் நுண்ணறிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 

மென் திறன், பேச்சு திறன் என்ற திறன்களுக்கு மத்தியில் இன்று தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி, உணர்வுசார் நுண்ணறிவு நம் வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் முதன்மையாக விளங்குகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி துக்கம், கோபம், பயம் , பொறாமை, அன்பு, பாசம், சினம், ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,எரிச்சல், சலிப்பு, மன உளைச்சல், அவநம்பிக்கை, தனிமை, வலி என்று பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும் போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் சூழ்நிலையை நாம் தினமும் பார்க்கிறோம்.

 

மன அழுத்தம்

 

உணர்ச்சிகளை கட்டுபடுத்தாததால் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தத்தின் பொழுது நம் நாவும், செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதன் விளைவாக பேசும் பேச்சும், நடவடிக்கைகளும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. ஆகையால் நம் வெற்றிக்கும், அமைதியான வாழ்விற்கும் உணர்வுசார் நுண்ணறிவு பெரிய பாலமாக அமைகிறது. அதை உணர்ந்து, அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றியை அடைவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உணர்ச்சி நுண்ணறிவை எளிமையான முறையில் விளக்க முடியும். உணர்ச்சி நுண்ணறிவை நம்மிலும் மற்றவர்களிடமும் உள்ள உணர்ச்சிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளும் திறன் என வரையறுக்கலாம்

 

உணர்ச்சி நுண்ணறிவு

 

உணர்ச்சி நுண்ணறிவு என்பது உணர்ச்சி புரிதலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. உணர்ச்சி நுண்ணறிவில் உணர்ச்சிகளை உணர்வது, பகுத்தறிவது, புரிந்துகொள்வது, நிர்வகிப்பது என நிலைகள் உள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகளும் புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பாகவே கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளில், உணர்ச்சி நுண்ணறிவு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாதையில் நம்மை வழிநடத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது, உணர்ச்சிபூர்வமான மேற்கோள்(EQ) ஏன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது? அதிக உணர்ச்சி நுண்ணறிவு (EI) உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், சிறந்த சம்பளத்தைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

 

மேம்படுத்துவது எப்படி

 

1.நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்

2.துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்

3.மன அழுத்த சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்

4.தோல்வி உணர்வை விரட்டுங்கள்.

5.உங்கள் பணிச்சூழலில் இருப்பவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை உணருங்கள்

6.தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை பற்றி யோசிக்கவோ பேசவோ பழகுங்கள்

7.உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறீர்களா என்று யோசியுங்கள்

8.உங்கள் செயல்கள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராயுங்கள்

9.&' கோபம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யாமல் கட்டுக்குள்வைத்திருங்கள்

10.உணர்ச்சிவசப்பட்டு எதையும் கூறவோ, செய்யவோ வேண்டாம்

11.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்

12.தியானம் செய்து பழகுங்கள்.

13.எவரிடமும் உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள்

14.மன நிலையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

15.சுய மதிப்பீடு செய்யுங்கள்.

 

பணி இடத்தில் சாதிக்க

 

நெருங்கியவர்கள் செய்யும் செயல்களால் நம் மனம் நொறுங்கி போகும். அந்த சமயத்தில் எதையும் யோசிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகள் அந்த உறவை அறவே அழிக்கும். அவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள், காரணம் இருக்கும் என்று நாம் யோசிக்க கற்று கொண்டால் அந்த முடிவை தவிர்க்கலாம். எல்லோருக்கும் அவர்கள் செயல்களுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதை அவர்களிடம் பேசினால் நியாயமாக தோன்றும். உணர்ச்சி நுண்ணறிவு மதிப்புமிக்க திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்ற திறமையும் இதுதான். பணியிடத்தில் பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் காணுங்கள். சக ஊழியர் உங்களை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது உங்கள் முதலாளி கடினமான பணியைத் தரக்கூடும். நீங்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், இவை தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணியிடத்தில் பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் சிந்தியுங்கள். மற்றவர்கள் சொல்ல வருவதை பொறுமையோடு கேட்க பழகுங்கள்.

 

சொற்களற்ற தகவல்தொடர்புக்கு கவனம் செலுத்துங்கள். ஒருவர் தங்கள் உடல் மொழி மூலம் அனுப்பும் சமிக்ஞைகள் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய தெரிவிக்க முடியும். அலுவலக அரசியலில் இறங்குவதைத் தவிர்க்கவும்.பணி இடமாக இருந்தாலும் நம் தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், பிறரோடு இணைந்து செயல்பட்டு, பிறரைப் பாராட்டி, குறைகளை ஏற்றுக் கொண்டு, நம் உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துவதின் மூலமாக வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம்.

 

-முனைவர் உஷா ஈஸ்வரன், தனித்திறன் மேம்பாட்டு ஆலோசகர்

 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets