உங்கள் வருகைக்கு நன்றி

உடலில் வலியும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடலில் வலியும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அல்சர் எதனால் வரும், நிவாரன வழிகளும்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020



வயிறு எரிவதுபோன்று பயங்கர வலி. அலட்சியமாக இருந்ததன் விளைவு, எது சாப்பிட்டாலும் வாந்தி, வயிற்றை யாரோ இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வு. அடிக்கடி  ஹோட்டலில் சாப்பிடுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவுகளை வெளுத்துக் கட்டியதும், கூல்டிரிங்ஸ் குடித்து வந்ததும் தான் இதற்குக் காரணம். அல்சர் நோய் வயிற்றைப் பதம் பார்த்துவிட்டது.  
வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது''  பலரது வயிற்றைப் பிசையவைக்கும் அல்சர் நோய் வருவதற்கான காரணங்கள், எப்படி தவிர்க்கலாம்.

அல்சர் என்றால் என்ன?'
'தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது வயிற்றில் வாழும் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியா காரணமாக வயிற்றுப் புண் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.'
'அல்சர் ஏன் ஏற்படுகிறது?'
'நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்காக, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம்உள்ளிட்ட அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பையின் சுவரைப் பாதித்து, புண்ணை ஏற்படுத்திவிடும். காலை, மதியம், மாலை நேரத்தில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உணவைத் தவிர்க்காமல், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கான வாய்ப்பைத் தவிர்க்கும். ஆஸ்பிரின், ப்ரூஃபின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தலாம்.' பெரும்பாலும் இது 20 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகமாகப் பாதிக்கிறது. 
முதல் அறிகுறி வலிதான். பற்றி எரிவது போன்ற கடுமையான வலி வயிற்றில் ஏற்படும். புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. அடி வயிறு முதல் நெஞ்சுக்கூடு வரையிலான இடத்தில் வலி ஏற்படலாம். வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகரிக்கும். வலி தொடர்ந்து இருக்கும் என்று இல்லை, ஒரு நாள் இருக்கலாம், அடுத்து சில நாட்களுக்கோ, வாரத்துக்கோ வலி இல்லாமல் இருக்கும். பிற்கு, மீண்டும் வலி ஏற்படும். தவிர, வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது, மலத்தில் ரத்தம் வெளியேறுவது, குமட்டல் அல்லது வாந்தி, காரணமின்றி உடல் எடை குறைவது, பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்''.
மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே வயிறு இரைப்பை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். என்டோஸ்கோப்பி மூலமாக இரைப்பையில் புண் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும். ரத்தப் பரிசோதனை மூலமாகவும் உறுதிப்படுத்தப் படும். மாத்திரை, மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதன்மூலம் 90 சதவிகித வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். சிலருக்கு மாத்திரை மருந்துகள் பயனளிக்காதபோது அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுகுடலின் முன்பகுதியில் அல்சர் பாதிப்பு உண்டானவர்களில் சிலருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி வாந்தி ஏற்படும். அவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். இது மிகவும் கடைசி நிலையில்தான் மேற்கொள்வார்கள். மிகவும் அரிதாக சிலருக்கு இந்த கிருமியால் இரைப்பையில் ஓட்டை விழுந்து அமிலம் வெளியேறிவிடும். இவர்களுக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யாவிட்டால், மரணம் ஏற்படும்.
வயிற்றுப் புண் பாதிப்பு உள்ளவர்கள் காரமான உணவைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப் படி மாத்திரைகளை தவறாமல் தினமும் எடுக்கவேண்டும்.
எல்லா உணவுகளையும் சரியான வேளையில் சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே, அல்சரை சமாளிக்கலாம்.'
அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறிவிடும். எனவே, அதிகம் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 
நீங்கள் ஒரு காபி பிரியரா? கண்டிப்பாக நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்என்கிறது நவீன மருத்துவம். காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆறவும் வாய்ப்புள்ளது. 
சிவப்பு இறைச்சி வயிற்றுப் புண்ணுக்கு பெரிய காரணமாக இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களைப் பழுதடையச் செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்கச் செய்யும்
காபி குடிப்பவராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக விதவிதமான குளிர்பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். 
அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். 
எவற்றை எல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்க்கும்போதே, எந்த உணவையெல்லாம் அதிகமாக உட்கொள்ளலாம் என்பதையும் பார்க்க வேண்டும். முதலில் அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம். உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பது விரைவில் அல்சர் பிரச்னையிலிருந்து மீள உதவும்.
 


Read more...

இதை சாதாரமாக நினைத்து விடாதிர்கள்.

வியாழன், 23 ஜூலை, 2020


நாக்கை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி, சென்னை அசோக் நகர், 'டென்ட் ஷைன்' பல் மருத்துவமனையின்டாக்டர் ப.சிவகுமார்: உணவின் வாசனையை நுகர்வது வேண்டுமானால் மூக்காக இருக்கலாம். ஆனால், அந்த உணவின் சுவையை, நாக்கு தான் உறுதி செய்கிறது. மனிதகுலம் ஒவ்வொன்றும், வெவ்வேறு மொழிகள் பேச, நாக்கு தான் உதவுகிறது.மனிதனின் நாக்கு, தொண்டை பகுதியில் துவங்கி, நுனி வரை, ௭ - ௮ செ.மீ., இருக்கும். நாக்கு, எட்டு தசைகளால் ஆனது. நாக்குக்கு நரம்புகள் உண்டு என்பது தான் உண்மை.நாக்கின் மேல் புறத்தில் மொட்டு போன்ற சுவை அரும்புகள் இருக்கும். அவை தான், உணவின் சுவையை உணரச் செய்கின்றன. அதே நேரத்தில், நாக்கின் கீழ்ப்புறத்திலும், மொட்டுகள் இருக்கும். அவை, சுவை அரும்புகள் கிடையாது. அடிப்படையான சுவைகளான இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு போன்றவற்றை, நாக்கு தான் உணர்கிறது. முன்புறம் இனிப்பு, பின்புறம் கசப்பு என சொல்வதெல்லாம் தவறு. நாக்கின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து விதமான சுவைகளை அறிய முடியும். நாக்கில் உள்ள சுவை அரும்புகள், என்னென்ன சுவை என்பதை, மூளைக்கு எடுத்து செல்கின்றன. ஆனால், சுவை நரம்புகள் மூலம் காரம், மூளைக்கு செல்வதில்லை. அதற்கு மாறாக, அதில் உள்ள அதிக வெப்பம் மற்றும் காரம், நரம்பின் மூலமாகத் தான், மூளைக்கு செல்கிறது.இதனால் தான், அதிக காரமான உணவை உட்கொள்ளும் போது, கண்களிலும், மூக்கிலும் நீர் வந்து விடுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல் உபாதைகளை, நாக்கை வைத்தே கண்டுகொள்ளலாம். இதனால் தான், டாக்டர்கள், நாக்கை நீட்டு என்கின்றனர். ஆரோக்கியமான நாக்கு, இளம் சிகப்பு நிறத்தில், சற்றே சொரசொரப்பு தன்மையுடன் இருக்கும்.நாக்கின் நிறமோ, வடிவமோ மாறுபட்டால், அது ஏதோ ஒரு வகை நோயின் அறிகுறி என்பதை அறிந்து கொள்ளலாம். நாக்கில் வெள்ளை படலம் அதிகம் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் குறைந்து விட்டது என்பதை அறியலாம். சிகப்பாக இருந்தால், வைட்டமின் - பி சத்து குறைபாடு உள்ளது என்பதை அறியலாம். கறுப்பு நிறத்தில் இருந்தால், மோசமான வாய் பராமரிப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.நாக்கை பராமரிப்பது எளிது. ஒவ்வொரு முறை, சாப்பிட்ட பிறகும், வாயை நன்கு கொப்பளித்து துப்பி, நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயை உலர்ந்த நிலையில் வைக்காமல், அடிக்கடி தண்ணீர் குடித்து, நாக்கை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கில் ஆறாத புண், வலி போன்றவை இருந்தால், டாக்டரிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்!

Read more...

துாங்கும் போது வியர்ப்பது.

வியாழன், 5 மார்ச், 2020


உடல் உழைப்பில் ஈடுபட்ட பின், வியர்ப்பது இயல்பு. உடல் வெப்பம் அதிகமாகும் போது, நரம்பு மண்டலத்தின் துாண்டுதலால், வியர்வை சுரப்பிகள், தங்கள் பணியை செய்ய துவங்கும்; அதைத்தான், 'வியர்க்கிறது' என்கிறோம். ஆனால், உடல் உழைப்பில்லாமல் ஓய்வில் இருக்கும்போது வியர்வை அதிகரிக்கிறது என்றால், அது இயல்பானதல்ல. குறிப்பாக, சிலருக்கு இரவில் உறங்கும்போது, அதிகமாக வியர்வை வெளியேறும். இப்படி, தவறான நேரத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பது, ஆரோக்கிய குறைபாடின் அறிகுறி. உடலில், 'ஹார்மோன்' மாற்றம் நிகழ்பவர்களுக்கு, அதன் காரணமாக வியர்வை வெளியேற்றம் அதிகரிக்கும். பூப்பெய்திய துவக்க காலம், கர்ப்பிணிகள் மற்றும் 'மெனோபாஸ்' நிலையிலிருக்கும் பெண்களுக்கு, ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். பொதுவாக, காய்ச்சலோடு தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புகள், அதிக வியர்வைக்கு காரணமாக இருக்கும். தொற்று பாதிப்புகள் ஏற்படும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். இயல்பை விட, இரவில் தான் அது அதிகமாக இருக்கும். காசநோய், எலும்பு அழற்சி போன்றவை இருந்தால், துாக்கத்தின்போது அதிகம் வியர்க்கும்.ஒருவர் உறங்கும்போது, உடலில் ரத்தச் சர்க்கரை அளவு குறையத் துவங்கினால், வியர்வை அதிகம் வெளியேறும். ஒவ்வாமை உள்ள மருந்துகளை உட்கொண்டால், பக்கவிளைவாக, வியர்வை வெளியேறுவது அதிகமாகும். உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உண்டாகும். அதோடு துாங்க சென்றால், எரிச்சல் அதிகரித்து வியர்க்க ஆரம்பிக்கும்.
ஏற்கெனவே நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி பதற்றமடைவர். பக்கவாதம் இருப்பவர்களுக்கு, அது தீவிரமடைந்தால், உறக்கத்தில் வியர்ப்பது அதிகரிக்கும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், உடல்நலச் சிகிச்சையோடு சேர்ந்து, உளவியல் சிகிச்சையும் எடுக்க வேண்டும். முறையான மருத்துவ ஆலோசனையைக் கட்டாயம் பெற வேண்டும்.


Read more...

விழுவதை சாதாரமாக நினைக்க வேண்டாம்.

திங்கள், 23 டிசம்பர், 2019


கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு.
வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். கீழே விழுவதால் தலையில் அடிபடுவது, தோள்பட்டை மற்றும் கைகளில் முறிவு, முதுகெலும்பில் முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் கீழே விழுவதில் சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். அதையும் மீறி விழுந்தவர்களுக்கு பலமான காயங்கள் ஏற்படலாம். அதற்கான சிகிச்சைக்காக பல மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரலாம்.
கீழே விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களில் 65 வயதை கடந்த முதியவர்களே அதிகம். தவறி கீழே விழுபவர்களின் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. அவர்களில் பெண்களே அதிகம். இடுப்பெலும்பு முறிவு ஏற்படும் நபர்கள் பெரும்பாலும் அதிலிருந்து முழுமையாக விடுபடுவது இல்லை. பலரும் அதற்கு பிறகு நடக்க முடியாமல் முடங்கிப் போகின்றனர். இன்னும் சிலருக்கு கைத்தடி அல்லது வாக்கர் உதவியின்றி நடமாடுவது சிரமமாகிறது. சில நேரங்களில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்குள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

எனவே கீழே விழும் வாய்ப்பை அதிகரிப்பதில் முதுமைக்கு முக்கிய பங்கு உண்டு. பார்வைத் திறன் குறைவது, உடலில் சக்தியே இல்லாமல் இருப்பது போல் உணர்வது போன்றவை இயல்பு. இவை எல்லாமே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பவை.

உடல் இயக்கம் இல்லாமை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்றவை உடலின் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கும். எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். புகை மற்றும் மது பழக்கங்கமும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிப்பவை. குறிப்பாக மதுப்பழக்கம் ஒருவரது நிலைத்தன்மையை பெரிதும் பாதித்து கீழே விழும் வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும்.

வழுவழுப்பான தரை, ஈரமான தரை, வெளிச்சமற்ற வீடு, கால்களுக்கு சரியான பிடிமானத்தை தராத காலணிகள், நடமாடும் இடங்களில் இடறி விழும் அளவுக்கு பொருட்களை அடைத்து வைப்பதால் முதியவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தவறி விழுகிறார்கள். மாடி படிகளில் ஏறி இறங்கும்போதும், சமையலறையில் வேலை பார்க்கும்போதும், குளியலறை மற்றும் கழிவறைகளிலும் இவர்கள் கீழே விழுவது அதிகமாக நடக்கிறது.


Read more...

கழுத்து வலி வரலாம் எச்சரிக்கையாக இருங்கள்.

புதன், 4 டிசம்பர், 2019

* கழுத்து வலிக்கான காரணம்
அலைபேசியை பார்ப்பதால் கழுத்து வலி ஏற்படுகிறது .கழுத்தை குனிந்து கொண்டே தொடர்ந்து அலைபேசியை பயன்படுத்தும் போது வலி துவங்குகிறது.
அலைபேசியில் கேம்ஸ் விளையாடுவதால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

*
கழுத்துவலி எவ்வாறு பரவும்
கழுத்து வலி முதலில் கழுத்தில் உணர்ந்தாலும் முதுகெலும்பு பிரச்னைகளாலும் ஏற்படலாம். கழுத்து, மேல் முதுகு இரண்டிலும் தசை இறுக்கம் அல்லது முதுகெலும்பிலிருந்து வெளிப்படும் நரம்புகளை ஜவ்வு அழுத்துவதன் காரணமாக கழுத்து வலி ஏற்பட்டு வலி பரவும்.


*
வேறு எந்த விதத்தில் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
நமது தலை நேராக இருக்கும் போது 4 கிலோ எடை உள்ள எலும்புகளை நமது கழுத்து பகுதி தாங்கி கொள்ளும். இதுவே 15 டிகிரியில் கழுத்து குனியும் போது 12 கிலோ எடை, 30 டிகிரியில் 17 கிலோ, 45 டிகிரியில் 20 கிலோ, 60 டிகிரியில் 27 கிலோ எடையை கழுத்து சுமக்கிறது. வேறுபட்ட அதிக அளவு எடையானது கழுத்திலுள்ள தசை நார்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கிறது.   இதனால்தான் கம்ப்யூட்டர், அலைபேசியை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு அதிக அளவில் கழுத்து வலி ஏற்படுகிறது.


*
கழுத்துவலிக்கான அறிகுறிகள்
தலை முன்னோக்கி நகர்ந்திருப்பது, சிலருக்கு பின் கழுத்தில் மேடான பகுதி உருவாகியிருப்பது (வலியில்லாத வீக்கமான பகுதி), தோள்பட்டை வழக்கத்தை விட முன்னோக்கி நகர்ந்திருப்பது, சில நேரங்களில் கழுத்து இயக்கத்தில் ஏற்படும் வலி, தோள்பட்டை, கை, விரல்களில் ஏற்படும் மதமதப்பு, தலைவலி, தலை சுற்றல் கழுத்து வலியின் அறிகுறிகளாகும்.

*
இதை தவிர்ப்பது எப்படி
அலைபேசியை பயன்படுத்துபவர்கள் தலையை நேராக வைத்து கொண்டு கண்ணிற்கு நேர் எதிராக வைத்து பயன்படுத்த வேண்டும். தசைகள் இறுக்கத்தை குறைக்க, தளர்வடைய செய்யும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பலவீனமான தசைகளை பலப்படுத்த பயிற்சி செய்ய வேண்டும். நாற்காலி அல்லது கீழே அமரும் போது சரியான உடல் மற்றும் முதுகெலும்பு அமர்வை மேற்கொள்வது அவசியம். அன்றாட செயல்களில் கழுத்தை கவனித்து கொள்வது அவசியம்.

டாக்டர் சி.டேவிட் பிரேம் குமார்
பிசியோதெரபி்ஸ்ட்
அருப்புக்கோட்டை
96777 24772

Read more...

ஆரோக்கியம் என்பது எதில் உள்ளது ?.

வெள்ளி, 29 நவம்பர், 2019


* பல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்
எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்றாலும், அந்த தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது. வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப் படுகிறது. எனவே வாயையும் பற்களையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*
குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க தொடங்க வேண்டும்
குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்தில் பல் முளைக்கத் துவங்கும். அப்போதிருந்தே பல் துலக்கி விடுவதை துவங்க வேண்டும். ஐந்து வயது வரை பெற்றோர் உதவியுடன் பல் துலக்க வேண்டும்.

*
வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன
பீடி, சிகரெட் பிடித்தல், புகையிலை, பாக்கு போடுதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். இதனால் உதடு, கன்னம் தசைகளில் நெகிழித்தன்மை குறைந்து வாய் திறக்க முடியாமலும் போகும். அதிகமான காரம், புளிப்பு உணவுகளாலும் வாயில் எரிச்சல் தன்மை கூடி வாய்ப்புண் ஏற்பட வழிவகுக்கும்.

*
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்
வாயில் உள்ள அழுக்குகளே காரணம். வாயிலும், பற்களிலும் உணவு துகள் தங்குவதால் ஏற்படும் பாக்டீரியாக்கள், உணவு துகள்களுடன் சேர்ந்து கெட்டுப்போய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கதினமும் இரண்டுமுறை பல் துலக்குவதுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாய் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

*
தெத்துபற்களால் பாதிப்பு உண்டா
தெத்துப்பற்கள், பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகம் உள்ள பல் அமைப்பு, நெருங்கிய பற்கள் ஆகியவற்றால் பல் ஈறு நோய் ஏற்படும். வாய் திறந்தபடி துாங்குதல், உதடு கடித்தல், நாக்கு மூலம் பற்களை தள்ளுதல், கீழ் உதடை உள்ளிழுத்து கடித்தல், ஆகியவற்றாலும் மரபு ரீதியாகவும் தெத்துப்பற்கள் உருவாகும். இதனால் பல் மற்றும் முக அமைப்பு மாறிவிடும். எனவே வளரும் பருவத்திலேயே இவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும்.
*
சொத்தை பற்களை எடுக்காமல் விடலாமா
கெட்டுப்போன சொத்தைப்பற்களை எடுக்காமல் விட்டால் தோல் நோய்கள், மூட்டு, இடுப்பு வலி, மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை மற்றும் இருதய நோய் கூட ஏற்படலாம்.

*
பல் சொத்தை வராமல் முன்கூட்டியே தடுக்கலாமா
பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம் பற்களை பாதித்து பல்சொத்தை எற்படுகிறது. பற்களில் சொத்தை வருவதை தடுத்தல் என்பது கடினமான செயல். ஏனெனில் நமது பற்களின் அமைப்பு, உணவுமுறை, துலக்கும் முறைகளை பொறுத்தே பல் சொத்தை ஏற்படுவதால் அதை துல்லியமாக முன்கூட்டியே வராமல் தடுக்க முடியாது.

*
செயற்கை பல் கட்டுவது பற்றி...
விபத்தால் பல் உடைதல் உள்ளிட்ட காரணங்களால் பற்களை இழக்க நேரிடும் போது பல் கட்டுதல் அவசியமாகிறது. இரண்டு முறைகளில் பல் கட்டப்படுகிறது. தேவைக்கேற்ப அகற்றக்கூடிய அளவிலும் அல்லது நிரந்தமாக பொருத்தியும் பல் கட்டப்படுகிறது.

*
பற்களை பாதுகாப்பது எப்படி

காலை, இரவு பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை குச்சி, ஊசிகளை கொண்டு எடுக்கக்கூடாது. பிரஷ்களையே பயன்படுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஒட்டும் தன்மை கொண்ட மாவுச்சத்து பொருட்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றால் பல் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
டாக்டர். மா.ஆறுமுகம்
பல் மருத்துவர்
திருப்புத்துார்
98426 56617

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets