உங்கள் வருகைக்கு நன்றி

பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

சனி, 21 டிசம்பர், 2013


டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இந்த பிரச்சனையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்... 

* உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம் இந்த டீன் ஏஜ்.. இந்த வயதில் அவர்களுடன் அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன்வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம். 


* உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 


* இந்த டீன் ஏஜ் பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். 


* குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப்பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர். உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள். 


* உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.

Read more...

பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும் !

செவ்வாய், 11 ஜூன், 2013

பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. நல்ல வளர்ப்பால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான்.  இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்... பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி,  உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரியாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.

"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.
ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் சீஎன்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். 

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)


அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும். பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம். 

Read more...

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

வியாழன், 23 மே, 2013

மனித உயிரினங்கள் இல்லாமல் உலகம் தனது சுய நிலையில் இயங்கியது. அவ்வப்போது புதுப்பித்தும் கொண்டது. உலகில் கடைசியாகத் தோன்றிய மனித உயிரினம், மற்ற உயிரினங்கள் மீது ஆளுமை செலுத்தி வருகிறது. அதனால், இப்போது மனிதன் இல்லாமல் வெறும் உலகத்துக்கு என்ன வேலை என்றுகூட கேட்கத் தோன்றி விட்டது. அந்த அளவுக்கு உலகத்துடன் பிரிக்க முடியாத ஒன்றாக மனித இனம் உருமாறிவிட்டது.
ஒவ்வொரு உயிரினத்திலும் ஏற்படும் பாலினப்பெருக்கம்தான், அந்த உயிரினங்களை உலகில் பிரவேசிக்கவும், நிலை நிறுத்தவும் செய்கிறது. இது ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
ஆறறிவு படைத்த மனிதன் மற்ற உயிரினங்களைவிட பாலினப்பெருக்கத்தில் தன்னை மாற்றி தகவமைத்துக் கொண்டான். அதிலும் ஒரு வரைமுறை வேண்டும் என்று கருதிய நம் மூதாதையர்கள், திருமணம் என்ற எல்லைக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். அதன் மூலம் ஏற்பட்ட குடும்பம் என்ற கட்டமைப்பு, இன்றுவரை தன்னுடைய இனத்தைப் பெருக்கிவர உதவுகிறது.
கல்வியறிவு பரவலாக எட்டப்படாத காலத்தில் திருமணத்துக்கு எவ்வித வரைமுறையும் வகுக்கப்படவில்லை. அதனால், குழந்தைத் திருமணம் பல்கிப் பெருகியது. இருப்பினும், கல்வியறிவு ஏற்பட்டபின் திருமணத்துக்கான வயது நிர்ணயிக்கப்பட்டது. முற்காலத்தில் மணமகனைப் பார்க்காமலே திருமணம் நடந்தது. இது எத்தகைய முறையாக
இருப்பினும், அதை ஏற்றுக் கொண்ட பெண்கள் இல்லற வாழ்க்கையை சிறப்புடன் வழி நடத்தினர். அதனால்தான் இன்றுவரை "மானுட உற்பத்தி', எவ்விதத் தடையுமின்றி வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆனால், இன்றைய நிலை முற்றிலும் மாறி விட்டது. என்ன தேவை என்பதை அறிந்து தங்களது முடிவுகளை பெண்கள் துணிந்து எடுக்கின்றனர். அது பொருளாதாரம் சார்ந்த ஒன்றில் வெற்றி அளித்தாலும், மண வாழ்வில் என்னவோ அவர்களுக்குப் பின்னடைவை அளிக்கிறது. அதற்கு தக்க உதாரணம், குடும்ப நீதிமன்றங்களில் அதிகரித்துவரும் விவாகரத்து வழக்குகள்.
சமகாலத்தில் திருமணம் சார்ந்த வாழ்வியலின் அடிப்படை முடிவுகளை எடுப்பதில் பெண்களைவிட, அவர்களது பெற்றோர்களிடம் பெரும் தடுமாற்றம் காணப்படுகிறது. அந்தத் தடுமாற்றம் நல்ல வரனுக்காக என்றானாலும் பரவாயில்லை. ஆனால், "விலையுயர்ந்த மணமகன்' (அதிக சம்பளம்) என்ற நோக்கத்துக்காக இருப்பதில் என்ன நியாயம் அடங்கியுள்ளதோ?
திருமண வாழ்வு சிறக்க வேண்டும் என்று எண்ணிய நம் முன்னோர்கள், விலையுயர்ந்த மணமகன் என்ற அந்தஸ்தைத் தவிர்த்து பல்வேறு சடங்குகளில் கவனம் செலுத்தினர்.
மணமகனிடம் அவர்கள் எதிர்பார்த்தது நல்ல குணத்தையும், உழைக்கும் திறனையும் மட்டும்தான். சந்தையில் அதிக விலைக்கு யாராவது கேட்டால் பொருள்களை அளிக்கும் வியாபாரியின் மனநிலைக்கு பெற்றோர்கள் வந்து விட்டனர். இதனால், குறிப்பிட்ட வயதில் திருமணம் நடைபெறுவதில்லை. இது ஓர் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது.
 தங்களுக்கு வரப்போகும் மருமகன் அல்லது மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்கள் பெருகி விட்டனர். இவர்கள், தங்களது திருமணம் எவ்வாறு, எதனடிப்படையில் நடந்தது என்பதை நினைக்கத் தவறுவது ஏன்? இன்றைய பெற்றோர்கள் விதிக்கும் கட்டுப்பாடு, அன்றைக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு திருமணம் நடந்திருக்குமா என்று சிந்திப்பது நலம்.
அன்றைக்கு, வரதட்சிணை என்ற பெயரில் பல பெண்ணின் பெற்றோர்கள் சீரழிக்கப்பட்டனர். ஆனால், இப்போது அது எதிர்மறையாகி விட்டது. மணமகன் வீட்டார் பெண்ணுக்கு வரதட்சினை அளிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அன்று பெண்களை ஆண்கள் அடிமைகளாக நடத்தினார்கள். அதிக சம்பளம் வாங்கும் ஒருவரை ஒரு பெண் தேர்வு செய்வதும் அடிமைத்தனம்தானே!
உலகில் மனித உயிர்கள் சரியான பால் விகிதத்தில் இருக்க திருமண வாழ்வு முக்கியமானது. இதில் இடைவெளி ஏற்பட்டால், எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படும்.
பெண் சிசுக் கொலைகளினால், பால் விகிதத்தில் இன்றளவும் ஏற்றத் தாழ்வு இருந்து வருகிறது. 2012-ம் ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்களே உள்ளனர். இக்குறைப்பாட்டை எப்போது ஈடு செய்வது என்று தெரியவில்லை.
பருவத்தே செய்வது பயிரை மட்டுமல்ல, திருமணத்தையும்தான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்; அதற்கும் முன்னாலே..

Read more...

முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.

புதன், 30 ஜனவரி, 2013


பீச், பார்க்குகளில் குடைக்குள் புகுந்தபடியும், பைக்கின் பின் துப்பட்டா மறைவில் காதல் செய்யும் காதல் ஜோடிகள் நமக்கு பல ஆண்டுகளாக பழக்கம்.
ஆனால், சென்னையில் கடந்த சில வருடங்களாக இவ்வாறு மறைந்து இருக்கும் பெண்களில் பலர் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.
முன்பெல்லாம் பார்க், பீச்சுகளில் விளையாட மட்டுமே வந்த இந்த பள்ளிக் குழந்தைகள் இப்போது காதல், செக்ஸ் என்ற மாயவலையில் சிக்கி வருகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் அதை விட ஒரு படி மேலே கருக்கலைப்புக்கு வந்து  நிற்கிறார்கள் இந்த யூனிபார்ம் அம்மாக்கள்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டியில் ஒருநாளில் 2 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கும் அதே நேரத்தில் இந்த விற்பனையில் சிங்காரச் சென்னைநம் பர் 1 இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாணவச் சமுதாயமே என்பது கவலை தரும் அம்சம்.
இது பற்றி மனநல ஆலோசகர் டாக்டர் சொல்கிறார்கள்.‘‘இந்த பருவ நிலை காதலுக்கு ஹார்மோன் கோளாறு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி... சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை மற்றும் பெற்றோர் களின் வளர்ப்பு முறை என எல்லாவற்றையும் சார்ந்தது.
அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தான் இப்போது உள்ள குழந்தைகள் வளர்கிறார்கள். வேலையில் உடன் பணியாற்றும் சக ஆண் நண்பருடன் வெளியே செல்வது, போனில் பேசுவதை பார்த்து வளரும் குழந்தைகள்  தடம் மாறிப்போக ஒரு காரணமாகிறது. 
இப்போது பெரியவர்கள் முதல் டீன் ஏஜ் குழந்தைகள் வரை எல்லாரையும் கட்டிப் போட்டுள்ளது செல்போன். கேமரா, மெமரி கார்டு, ஈமெயில், படங்களை டவுண்லோட் செய்வது என பல வசதிகள் கொண்ட  செல்போன் மார்க்கெட்டில்  உள்ளது. இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது. மேலும் அவர்களின் உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் அசாத்திய மனநிலை மாற்றங்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன.  
குழந்தைகள் ஒரு களிமண். அதை நாம் அழகான ஒரு பொம்மையாக மாற்றி அமைக்கலாம். அதன் முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.

பெற்றோர்களே காரணம்

மனோகரன் (போலீஸ் அதிகாரி) கடந்த வாரம் ஒரு இளம் ஜோடியை பிடித்து காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். இருவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி ஸ்டேஷன் வரச் செய்தோம். அவர்கள் கூறியதை கேட்டு திடுக்கிட் டோம். ‘‘என்ன சார் இது சிம்பிள் மேட்டர். என்னமோ திருடனைப் பிடித்தது போல சொல்கிறீர்கள். இந்த பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘‘ என்று கூறியதோடு அந்த மாணவர்களை பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச்  செல்லாமல்  வீட்டுக்கு போங்கள், எங்களுக்கு வேலை இருக்கிறது என்று கூறி சென்றனர்.  பெற்றோர்கள்  மனது வைத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.

மனரீதியில் பாதிப்பு...
சரஸ்வதி (அரசு பள்ளி ஆசிரியர்) பொதுவாக தனியார் பள்ளியில் இம்மாதிரி பிரச்னை அதிக அளவில் இருப்பதில்லை. அரசு பள்ளியில் மட்டுமே இந்த நிலை அதிகம் இருக்கிறது. கடந்த வாரம் எனது பள்ளி மாணவ  மாணவி ஜோடி அதி காலையில் சீருடையுடன் பீச் சென்றுள்ளனர். அவர்கள் 4வது முறையாக போலீஸ்  வசம் பிடிபட்டுள்ளனர். கடந்த 3 முறை பெற்றோர் இடத்தில் சொல்லி பயனில்லை என்பதால் பள்ளிக்கு தகவல் அனுப்பினர். அவர்களை பள்ளிக்கு வரச்  செய்து  இருவரையும் தனித்தனியாக விசாரித்தேன். அப்போது மாணவி கூறியது கேட்டு திடுக்கிட்டேன். மாணவி கூறியதாவது:
‘‘பிழைப்பை தேடி கிராமத்திலிருந்து நாங்கள் சென்னை வந்துள்ளோம். தாய், தந்தை இருவரும் மரம் வெட்டும் வேலை செய்கின்றனர். காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்குதான் வீடு திரும்புவார்கள். நான்தான்  சமையல் செய்வேன். காலையில் செய்யும் சாப்பாட்டை இரவிலும் சாப்பிடுவேன்.
மதியம் பள்ளியில் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பதால் ஆதரவின்றி இருப்பதாக உணருகிறேன். உடல் நிலை சரியாக இல்லாத நேரத்திலும் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் மனரீதியாக பாதிப்படைகிறேன். சக மாணவர் என்மீது  அதிக அக்கறை செலுத்துவதால் அவன் மீது பாசம் வைத்துள்ளேன். பீச் செல்வது தவறு என்று தெரிந்தும் என்னால் அவனுடன் செல்வதை தவிர்க்க முடியவில்லைஎன்றாள்.
எனவே, இந்த பிரச்னைக்கு காரணம் பெற்றோர்களே. தனியார் பள்ளிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெற்றோர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. மதிய உணவுக்காக பிள்ளைகளை படிக்க வைப்பவர்கள் இன்னும் இருக்கத்தான செய்கின்றனர். அந்த நிலை மாறினால் மட் டுமே இது போன்ற பிரச்னை முடிவுக்கு வரும்.

Read more...

வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது?.

புதன், 19 டிசம்பர், 2012

சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய்.
 ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.பிளஸ் 2வில் சாதனை ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார்.சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார்.பார்வை பெற்றது போல் மகிழ்ச்சிமுதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது.தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:

அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ரஞ்சனா கூறினார்.காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets