உங்கள் வருகைக்கு நன்றி

மக்கள் பிரச்சினைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் பிரச்சினைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பத்திரம் பத்திரம்! சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால், செய்ய வேண்டியது குறித்து கூறும், 'ட்ரைஸ்டார் ஹவுசிங் அண்டு டெவலப் மென்ட்ஸ்' நிர்வாக இயக்குனர், ஜார்ஜ் பீட்டர் ராஜ்: சொத்து ஆவணங்கள் தொலைந்து போனால், முதலில், வழக்கறிஞர் மூலம், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில், பத்திரம் காணாமல் போனது பற்றிய, பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதில், சர்வே எண், விஸ்தீரணம், பட்டா எண், அதன் நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உட்பட, அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும். அசல் பத்திரத்தை வைத்து, தவறான வழியில், அடமானம், கடன் பெறுதல் போன்றவை செய்யக் கூடாது என்றும், இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஏழு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், அதில் குறிப்பிட வேண்டும்.பொது அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்கு பின், 20 ரூபாய் பத்திரத்தாளில், உறுதிமொழிப் பத்திரம் தயார் செய்ய வேண்டும். அதில், அந்தப் பத்திரம் எங்கு, எப்படி தொலைந்தது என்ற தகவலையும், சொத்து விபரங்களையும் குறிப்பிட்டு, பத்திர எண், பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விபரம், யாரிடமிருந்து வாங்கினோமோ, அவருடைய பெயரையும் குறிப்பிட வேண்டும். அந்த உறுதிமொழிப் பத்திரத்தில், நாம் கையொப்பம் இடுவதோடு, 'நோட்டரி பப்ளிக்' ஒருவரிடமும் கையொப்பம் பெற வேண்டும். பின், நாம் எந்தப் பகுதியில், அசல் பத்திரத்தை தொலைத்தோமோ, அந்தப் பகுதி காவல் நிலைய, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம், ஆவணங்களின் நகல்களை இரண்டு தொகுப்பு இணைத்து, புகார் அளிக்க வேண்டும்.நாம் புகார் கொடுக்கும் இடம், மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்தால், அது, குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், மற்ற இடங்களில் அமைந்தால், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்துக்கும் அனுப்பப்படும். நாம் அனுப்பிய ஆவணங்களை பரிசீலித்து, உண்மை தன்மையை கண்டறிந்து, குற்றம் மற்றும் நிகழ்வுத்தாளில் பதிவு செய்து, அதற்கு ஓர் இலக்கம் கொடுத்து, திரும்பவும் நாம் புகார் கொடுத்த காவல் நிலை யத்துக்கு அனுப்புவர். காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், நமக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார். அந்த சான்றிதழை வைத்து, சொத்து பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தில், நாம் -தொலைத்த, தவறவிட்ட பத்திரத்தின் நகலுக்கு விண்ணப்பம் செய்து, நகலைப் பெற்று கொள்ளலாம். முக்கியமாக, பத்திரம் தொலைந்து விட்டாலும் நகலைப் பெற, சொத்து சம்பந்தமான விபரம் நமக்கு தெரிய வேண்டும். அதற்கு, சொத்துப் பத்திரத்தின் நகல், நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் சொத்துப் பத்திரங்களை ஒரு நகல் எடுத்து, அதை அசல் பத்திரங்களுடன் வைக்காமல், தனியாக வைக்க வேண்டும்.

Read more...

கொண்டாட்டம் திண்டாட்டமாகி விடும்.

புதன், 31 அக்டோபர், 2018

பண்டிகைகள் தித்திக்க, திட்டமிடல். கீழ், நடுத்தர மக்களுக்கு சிறுசேமிப்பு என்பது, மிகவும் அவசியம். கடன் வாங்காமல் இருப்பது தான், முதல் சேமிப்பு. வரும் வருமானத்தில் குடும்பம் நடத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வது தான் முக்கியம்.கூடிய வரை, கடன் வாங்காமல் எப்படி சமாளிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, கடன் வாங்கி முழிக்கக் கூடாது.அது, தேவையற்ற மன உளைச்சல், நெருக்கடி, கடனை அடைப்பதற்காக, குறுக்கு வழியில் பணம் ஈட்டும் எண்ணங்களுக்கு வழி வகுக்கும். எனவே, கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இப்போது அரசு அலுவலகங்கள், சிறு சிறு தனியார் நிறுவனங்களில், ஊழியர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, 'பண்ட்' பிடிக்கின்றனர். அவர்களுக்குள்ளேயே கடன் கொடுத்து, அந்த சேமிப்பை பெருக்குகின்றனர். இந்தத் திட்டத்தில் இணைந்து, பண்டிகை போன்ற காலங்களில் வெளியே கடன் வாங்காமல் தவிர்க்க முடியும். பண்டிகைகள் என்பது, ஆண்டு தோறும் வரும் செலவினம். அதை, முன்கூட்டியே தீர்மானித்து, வழி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், சில நேரங்களில் உபரியாக கிடைக்கும் பணம், வருமானத்தை செலவழிக்காமல் சேமிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிலிருந்து, சில ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அதை எடுத்து, 'ஜாலி'யாக செலவு செய்யக் கூடாது.அந்தப் பணத்தை, தனியாக எட்த்து வைப்பது தான் புத்திசாலித்தனம். அத்தியாவசிய செலவான கல்விக் கட்டணம்,   பண்டிகை காலங்களுக்கு, அந்தப் பணத்தை செலவிடலாம். சிறு சேமிப்பு என்பது, அந்த நேரத்தில் ரொம்ப சின்னதாக இருக்கும். ஆனால், முதிர்வடையும் போது,  மலைப்பான தொகையாக தெரியும். உறவும், நட்பும் எல்லா காலகட்டத்திலும் உதவி செய்வர் என்று எதிர்பார்க்கக் கூடாது. எந்த வேலையிலும், உத்தரவாதமும் கிடையாது என்ற நிலையில், சுய சம்பாத்தியத்தில் சேமிப்பது அத்தியாவசியம். பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட நினைத்தால், கொண்டாட்டம் திண்டாட்டமாகி விடும். எது நமக்கு சந்தோஷம் தருகிறதோ, அதை செய்ய வேண்டுமே தவிர, நம்மை சுற்றி இருப்பவர்களை ஈர்க்க வேண்டும் என்பது, கட்டாயம் இல்லை. சிக்கனமாக செலவு செய்தால், அடுத்த ஆண்டு கடன் வாங்காமல் கொண்டாடலாம்.

Read more...

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி

புதன், 8 நவம்பர், 2017

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி!!!
# அதன் முக்கியத்துவம்!!!
வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.
# வாரிசுச்சான்றிதழ் முக்கியத்துவம்!!!
அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார்.
முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.
சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது.
நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.
இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.
ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன.
எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது
ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை.
தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை
# யாரெல்லாம் வாரிசுகள்!
ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள்.
இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.
ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது.
அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும்.
இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .
இதனைப் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் இறந்தவருடைய வாரிசுகள்
அனைவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பண
பலன்களை அல்லது வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித
ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு
சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம்.
இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.
குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.
குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.
போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
--- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்


Read more...

சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டுவோம் !

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்   பட்டுள்ளது.

புகார் பதிவு முறை :
 புகார் மனுவில், புகார் தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், நஷ்ட ஈட்டின் விவரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
* பாதிப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவிற்கான கட்டணத்தை, டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, கட்டணம் செலுத்த தேவை இல்லை.

* நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மற்றும் சான்று அளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ புகாரை பதியலாம்.


யாரை அணுகனும்? : நுகர்வோர் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பின், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 20 லட்சம் முதல், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 1 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுக வேண்டும். அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு, எந்த நிலையிலும் நீதி கிடைக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெறலாம்.


புகார் பதிவு கட்டண விவரம்:

பொருட்களின் மதிப்பு கட்டணம்
(ரூபாயில்) (ரூபாயில்)
1 லட்சம் வரை 100

1 - 5 லட்சம் 200

5 - 10 லட்சம் 400

10 - 20 லட்சம் 500

20 - 50 லட்சம் 2,000

50 - 1 கோடி 4,000

1 கோடிக்கு மேல் 5,000 

Read more...

பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது !.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கல்லூரி படிப்பில் இறுதி யாண்டில் காலடி பட்டதும் வேலை கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரி வாசலுக்கு படையெடுக்கின்றன. திறமையும்படிப்பும்கையில் பாஸ்போர்ட்டும் இருந்தால் வெளிநாட்டில் வேலை ரெடி. ஆனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றாலே முகத்தில் கவலை ரேகை படர்ந்து விடுகிறது. பாஸ்போர்ட் வாங்குவது எளிதான விஷயமே. விண்ணப்பத்தில் சரியான தகவல்களை கொடுத்தால் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் கிடைக்கிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தை இணையதளத்திலேயே டவுன்லோடு செய்யலாம். சாதாரண முறை யில் பாஸ்போர்ட் வாங்க முகவரி சான்றுக்கு 2 இணைப்புகள்(ரேஷன் கார்டுவங்கி கணக்கு பாஸ் புத்தகம்வாக்காளர் அடையாள அட்டைடிரைவிங் லைசென்ஸ் இவற்றில் ஏதாவது 2), தட்கல் முறையில் வாங்க 3 சான்று தேவைப்படும். கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து போட்டோவுடன் கூடிய அத்தாட்சி சான்றுஎஸ்எஸ்எல்சி அல்லது பிளஸ் 2 சான்று, 1989க்கு பிறகு பிறந்தவர்களாக இருந்தால் பிறப்பு சான்று(பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்கவேண்டும்)கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்கவேண்டும். சான்று ஆய்வுக்கு செல்லும்போது அசல் சான்றுகளை கொண்டு செல்லவேண்டும்.

இவற்றுடன் முன் சரிபார்ப்பு உறுதி செய்ய மாவட்ட எஸ்.பிகுடியிருக்கும் பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது தாசில்தாரிடம் கூட சான்று பெற்றிருந்தால் பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது. சாதாரண முறையில் பாஸ்போர்ட்டுக்கு ரூ.ஆயிரமும்தட்கல் முறையில் பெற யீ2500ம் கட்டணமாக செலுத்தவேண்டும். தமிழகத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் சென்னைதிருச்சிகோவைமதுரை ஆகிய இடங்களில் உள்ளன.

Read more...

சொத்து பத்திரங்கள் தொலைந்து போனதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க.

புதன், 18 செப்டம்பர், 2013

சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொண்டாலும் கூட, சொத்து ஆவணங்கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வுகளின் போது அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு உங்களுக்கு  தேவைப்படும் நேரத்தில், நீங்கள் தான் சொத்து உரியாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், சொத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும். இருப்பினும், சொத்து ஆவணங்களை இழப்பதனால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமையாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நகல் சொத்து ஆவணங்களை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகியவை தேவை.

எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்

சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புகார் பற்றிய நகலை சொத்து உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அடமான சொத்து ஆவணங்கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும் கூட, புகார் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

செய்திதாளில் விளம்பரம் செய்தல்

சொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்றும் பிராந்திய மொழி தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரும் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.

என்ஓசி மற்றும் நகல்

பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவதற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்க முடியும். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில்லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக்ஷன் சர்டிபிக்கேட் பெற்றுகொள்வது அவசியம்.

தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல் 

சொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகியவை அடங்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவதற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்டரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல் 

பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரத்தை வழங்கும். நியாயமாக ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டும். 

இந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற முடியும். ஆகவே, ஒருவேளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலைத்து விட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்களைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். 
Dinakaran

Read more...

விஷச் செடியை நெருங்க வேண்டாம்.

சனி, 10 நவம்பர், 2012


குதிரையின் கண்களின் ஓரங்களில் சேணம் கட்டப்பட்டிருப்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சேணம் இல்லையென்றால் என்னாகும்? நாலாபுறமும், குதிரை தன் பார்வையைத் திருப்பி, சவாரி செய்பவரை, சாக்கடையில் தள்ளிவிடும். குதிரைக்கு சேணம் போன்றது தான், திரைத் துறைக்குத் தணிக்கைத் துறை.ஆனால், இந்த தணிக்கை என்ற சேணம், கண்ணாடியால் மாற்றப்பட்டு விட்டதோ என்று தான், அண்மைக்கால சில திரைப்படங்களை பார்க்கிற போது நினைக்கத் தோன்றுகிறது.

ஆபாச, வன்முறைக் காட்சிகள், கற்பனைக்கும் எட்டாத அளவில் கொடிகட்டிப் பறப்பதைப் பார்த்தால், வேறு என்ன எண்ணுவது? ஒரு கலையின் வடிவம் என்பது, பார்க்கும் மனிதரின் மனங்களை மாறுதல் ஏற்படுத்தும் அதி அற்புத சக்தி வாய்ந்தது. சிறு வயதில் நாடகம் பார்த்தவர்கள் பின்னாளில், சிறந்தவர்களாக மாறிய வரலாற்றின் பின்னணியில், அங்கம் வகிக்கிறது.  ஒரு கலையின் வலிமைக்கு இதைவிட வேறு சான்று ஏதும் தேவையில்லை.கலை என்பது ஒரு விதை. அந்த விதை ஒரு விஷச் செடியை விளைவிக்கும் என்று தெரிந்தால், அதை அழித்து விடுவதா... வளரட்டும் என்று மண்ணில் விதைத்து விடுவதா? 80, 90 வரை வீரிய விதையாக செயல்பட்ட திரைப்படங்கள், இப்போது விஷ விதைகளாக மாறிப் போக யார் காரணம்?"பல கோடிகள் போட்டு, படம் எடுக்கும் எங்களுக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்றால், ஆபாசம், வன்முறைக் காட்சிகளும் தான், எங்கள் கையில் கிடைத்த ஆயுதம்...' என்று சம்பந்தப்பட்ட பலர் கூறுகின்றனர். அவர்களின் கருத்தை ஒதுக்க முடியாது தான். முதலீடு திரும்பக் கிடைக்கவில்லை என்றால், மூலையில் முக்காடு போட்டு முடங்க வேண்டியதுதான். சரி... சமுதாயம்?"அது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?' என்று, இதன்மூலம் அவர்கள் சொல்லும் மறைமுக பதிலை, அப்படியே வரவு வைத்துக் கொள்ளலாமா?

வர்த்தகம் என்பது என்ன? விற்கப்படும் பொருள், விற்பவருக்கு லாபத்தையும், வாங்குவோருக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். அதன் பெயர் தான் வணிகம்!"விற்பவர் வானாகட்டும்; ஏற்பவர் வீணாகட்டும்' என்றால், அது வியாபாரம் அல்ல.திரைப்படங்கள் தோன்றிய ஆரம்பக் காலங்களில், வரலாறு, ஆன்மிகம், புராணம் உள்ளிட்ட சம்பவங்களின் கதைகள் தான், மூலாதாரமாக விளங்கின. அவைகள் பொய்யோ, கற்பனையோ... ஆனால், மனித குலத்தின் ஆணிவேர்களான சத்தியம், தர்மம் உள்ளிட்ட கொள்கைகளை அவைகள், ஆராய்ச்சி மணி போல் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன என்பதை மட்டும், எவராலும் மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது."பழம் பஞ்சாங்கம்' என்று கூறி, சமுதாயக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள், அதன் பின் உலா வரத் தொடங்கிற்று.அப்படி வெளியான சமுதாயக் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள், பல வியத்தகு விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் தோற்றுவித்ததையும், ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்."வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்...' என்று சொல்வது போல, அதே சமூகக் கதைக் களங்கள், இப்போது மக்களை எங்கே இழுத்துக் கொண்டு பயணிக்கிறது? திரைப்படத் தொடர்புடையோர் நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.

தாய், தந்தையருக்கு அடங்கி நடந்த இளைஞர்கள், யுவதிகள், இப்போது கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். பெரியோர்களை மதிக்கும் பண்பு, இருபாலாரிடமும் இல்லை. இப்போதெல்லாம் பாச உணர்ச்சிகள் மங்கிப் போய், பாலுணர்ச்சிகள் மேலோங்கி விட்டது. இதற்குப் பெரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான், திரைப்படங்கள் இருக்கின்றன. காரணம், மனிதரோடு இரண்டறக் கலந்து விட்ட சாதனம், "சினிமா'வைத் தவிர வேறு எதையும் இங்கே கோடிட்டு காட்ட முடியாதே. பந்தம், பாசம், வீரம், விவேகம், அன்பு, பண்பு போன்ற அம்சங்கள், கடலில் கரைத்து விடப்பட்ட பெருங்காயம் போலத் தான். அதுவும் சில படங்களில் தான், ஊறுகாய் போல் பயன்படுத்தப்படுகின்றன. உப்புக் கடலில் ஒரு சொட்டு, நல்ல தண்ணீர் விட்டால், கடலின் கரிப்பு மாறி விடுமா? திரைப்படம் சார்ந்த அனைவருக்கும், இது தெரியாமல் இல்லை என்றாலும், அவர்கள் மாறத் தான் தயார் இல்லை. "சமுதாயம் நாறட்டும்' என்ற எண்ணம் இருந்தால், அவர்களாக மாறட்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். காரணம் கடிவாளம் இல்லாமல் விடிகாலம் மலரப் போவது இல்லை.

அண்மையில், "கடைகளின் பெயர் பலகைகள், தமிழில் தான் இருக்க வேண்டும்' என அறிவிப்புப்படி, கிட்டத்தட்ட 99 சதவீதத்தினர், தமிழில் பெயர் பலகைகளை மாற்றி விட்டனர். ஆகா, அரசின் வேண்டுகோளுக்கு அவ்வளவு மரியாதையா? அது தான் இல்லை. தமிழ் ஆர்வலர்கள் பலர், கல்லூளிமங்கன் போல் இருந்த பல கடைக்காரர்களின் பெயர் பலகைகளை பதம் பார்த்ததால் ஏற்பட்ட மாற்றம் தான் அது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி எல்லாரும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.ஆக சட்டம் என்பது, எழுத்து வடிவில் மட்டுமே இருந்தால், அதை சட்டம் போட்டு வீட்டில் மாட்ட வேண்டிய நிலை தான் ஏற்படுமே தவிர, மாற்றம் வரும் என்று மட்டும் நினைத்து விடக் கூடாது. அதுபோலத் தான், சினிமா விஷயத்திலும் சிந்தனையாளர்கள் ஒரு தீவிர முடிவெடுக்க வேண்டும். இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இனி வெளிவரும் திரைப்படங்களுக்குத் தான், கறுப்புத் திரை கண்டிப்பாகத் தொங்க விட வேண்டும்.

அந்த திரைப்படத்தில் மட்டும் இப்படி ஒரு காட்சி அனுமதிக்கப்பட்டிருக்கிறதே. அதை முன் மாதிரியாகக் கொண்டு தான் நாங்கள், எங்கள் படத்தில் இப்படி ஒரு காட்சியை அமைத்தோம். எங்களுக்கு மட்டும் என்ன பாரபட்சம்?' என்று புதிதாக வரும் யாரும் வாதிட்டு, தங்களின் குறையை நியாயப்படுத்தி வெற்றி பெறும் வண்ணம் இருக்க முடியாத அளவிற்கு தணிக்கைத் துறையில் கடும் சட்டங்களை அமல்படுத்தியே ஆகவேண்டும்.முன் வருமா மத்திய, மாநில அரசுகள் 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets