உங்கள் வருகைக்கு நன்றி

விழிப்புணர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேவையில்லாத செலவுகளை தவிர்க்க

திங்கள், 10 மே, 2021

உங்கள் குடும்ப செலவுகளை பட்ஜெட் போட்டு மேற்கொள்ளும் போது, பணத்தை திட்டமிட்டு செலவு செய்வீர்கள். அது, அனாவசிய செலவுகளை குறைக்கும்; மேலும் சேமிப்புக்கும் வழிவகுக்கும். உங்கள் பணம், எந்தெந்த விதங்களில் செலவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள, குடும்ப பட்ஜெட் உதவும். நிதி ரீதியில் பாதுகாப்பாக உணர வேண்டுமானால், குடும்ப பட்ஜெட் மிகவும் அவசியமே. ஆனால் பெரும்பாலானோர் பட்ஜெட் போட்டு செலவு செய்வதில்லை. அப்படி செய்யும் போது, தன் வருமானம் பற்றியும், வருமானத்தை செலவு செய்யும் முறை பற்றியும் தெளிவு இருக்காது.

இதே நிலை தொடர்ந்தால், அனாவசிய செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய தேவைக்குக் கூட கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு, அதிக கடன் சுமை ஏற்பட்டு, பொருளாதாரத்தில் பாதுகாப்பின்மை நிலை உருவாகி விடும்.பெரிய அளவில் வருமானம் இருப்பவர்கள் மட்டும் தான் பட்ஜெட் போட வேண்டும் என்பதில்லை. மிகக் குறைவாக வருமானம் பெறுபவர்களும், பட்ஜெட் போட்டு செலவு செய்வது தான் நல்லது. அத்தியாவசிய பொருளை வாங்குவதற்கு செலவிடுவதை விட, ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு தான் அதிக பணத்தை அடிக்கடி நாம் செலவிடுகிறோம் நம் மீது திணிக்கப்படும் விளம்பரங்களும், அந்த ஆசையை நமக்கு ஏற்படுத்துகின்றன.
இந்த சிக்கலில் இருந்து மீள, குடும்ப பட்ஜெட் மிகவும் அவசியம். விரயச் செலவுகளை கட்டுப்படுத்தி, கட்டுக்கோப்பாக குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என விரும்புவோர், அவசியம் செய்ய வேண்டிய வேலை, குடும்ப பட்ஜெட் போடுவது தான். பட்ஜெட் போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறோம்; திடீரென எதிர்பாராத செலவு வந்து விடுகிறது. அந்த நேரத்தில் பட்ஜெட் போட்டு தான் செலவு செய்வோம் என, நிற்க முடியாது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு என, ஒதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். அதில் சேர்ந்திருக்கும் தொகையை வைத்து, எப்போவாவது வரும் அவசர, எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள வேண்டும். வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் என்றில்லாமல், ஒரு காலத்தில் வயதாகப் போகும், ஓய்வுபெறப் போகும் நபர்களும், இப்போதே குடும்ப பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும். குடும்ப பட்ஜெட் போட, அதற்கான எண்ணமும், சிறிது நேரமும், பேனாவும், நோட்டு புத்தகமும் தான் வேண்டுமே தவிர, வேறு எதுவும் தேவையில்லை!- 

Read more...

தொழில் உரிமம் பெறுவது எப்படி?

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

யாருக்கு தொழில் உரிமம் தேவை?

ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.

தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை வகைப்படுத்துகிறது சட்டம்.

உரிமம் பெறும் நடைமுறை

விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

ஏன் வாங்க வேண்டும்

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைமுறை என்ன?

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமையாளரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடைமுறைகளை வைத்துள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும்.

அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

 

Read more...

சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால்

பத்திரம் பத்திரம்! சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால், செய்ய வேண்டியது குறித்து கூறும், 'ட்ரைஸ்டார் ஹவுசிங் அண்டு டெவலப் மென்ட்ஸ்' நிர்வாக இயக்குனர், ஜார்ஜ் பீட்டர் ராஜ்: சொத்து ஆவணங்கள் தொலைந்து போனால், முதலில், வழக்கறிஞர் மூலம், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில், பத்திரம் காணாமல் போனது பற்றிய, பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதில், சர்வே எண், விஸ்தீரணம், பட்டா எண், அதன் நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உட்பட, அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும். அசல் பத்திரத்தை வைத்து, தவறான வழியில், அடமானம், கடன் பெறுதல் போன்றவை செய்யக் கூடாது என்றும், இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஏழு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், அதில் குறிப்பிட வேண்டும்.பொது அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்கு பின், 20 ரூபாய் பத்திரத்தாளில், உறுதிமொழிப் பத்திரம் தயார் செய்ய வேண்டும். அதில், அந்தப் பத்திரம் எங்கு, எப்படி தொலைந்தது என்ற தகவலையும், சொத்து விபரங்களையும் குறிப்பிட்டு, பத்திர எண், பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விபரம், யாரிடமிருந்து வாங்கினோமோ, அவருடைய பெயரையும் குறிப்பிட வேண்டும். அந்த உறுதிமொழிப் பத்திரத்தில், நாம் கையொப்பம் இடுவதோடு, 'நோட்டரி பப்ளிக்' ஒருவரிடமும் கையொப்பம் பெற வேண்டும். பின், நாம் எந்தப் பகுதியில், அசல் பத்திரத்தை தொலைத்தோமோ, அந்தப் பகுதி காவல் நிலைய, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம், ஆவணங்களின் நகல்களை இரண்டு தொகுப்பு இணைத்து, புகார் அளிக்க வேண்டும்.நாம் புகார் கொடுக்கும் இடம், மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்தால், அது, குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், மற்ற இடங்களில் அமைந்தால், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்துக்கும் அனுப்பப்படும். நாம் அனுப்பிய ஆவணங்களை பரிசீலித்து, உண்மை தன்மையை கண்டறிந்து, குற்றம் மற்றும் நிகழ்வுத்தாளில் பதிவு செய்து, அதற்கு ஓர் இலக்கம் கொடுத்து, திரும்பவும் நாம் புகார் கொடுத்த காவல் நிலை யத்துக்கு அனுப்புவர். காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், நமக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார். அந்த சான்றிதழை வைத்து, சொத்து பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தில், நாம் -தொலைத்த, தவறவிட்ட பத்திரத்தின் நகலுக்கு விண்ணப்பம் செய்து, நகலைப் பெற்று கொள்ளலாம். முக்கியமாக, பத்திரம் தொலைந்து விட்டாலும் நகலைப் பெற, சொத்து சம்பந்தமான விபரம் நமக்கு தெரிய வேண்டும். அதற்கு, சொத்துப் பத்திரத்தின் நகல், நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் சொத்துப் பத்திரங்களை ஒரு நகல் எடுத்து, அதை அசல் பத்திரங்களுடன் வைக்காமல், தனியாக வைக்க வேண்டும்.

Read more...

பொதுமக்களுக்கு உதவ இணையதளம் !

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் தொலைந்தால், புகார் செய்யும் இணைய தள சேவை.   லைசென்ஸ் போன்ற முக்கியமான அடையாள அட்டையை தொலைந்தாலோ, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களால், இன்சூரன்ஸ் பணத்தையோ, புது அடையாள அட்டையோ வாங்க முடியும். அப்படியே புகார் கொடுத்தாலும், ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைய வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு வாகன விபத்து வழக்கிற்கு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தால், வழக்கு பதிவு செய்வர். இதற்கே ஒருநாள் ஆகிவிடும். பின், மோட்டார் வாகன வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தகவல் அளித்து, விபத்து நடந்த இடம், வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் கடிதம், சிகிச்சை பெற்ற மருத்துவமனை உள்ளிட்ட, 12 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக தீர்ப்பு வந்ததும், அதை இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, வாங்க வேண்டும். இதற்குள் பல மாதங்கள் ஆகிவிடும். அதேபோல் தான், லைசென்ஸ் தொலைந்தாலும், அலைந்து திரிந்து வாங்க வேண்டும்.  பொதுமக்களுக்கு உதவ, www.tnpolice.gov.in என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளார்கள்.     செப்., 1ம் தேதி 2017 முதல், இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர், தங்கள் பெயர், முகவரி, புகார் போன்ற விபரங்களை கொடுத்துவிட்டால் தானாக பதிவாகிவிடும். பின்னர் போலீசார் அனைத்தையும் கவனித்து கொள்வர். பாஸ்போர்ட், ஆதார், லைசென்ஸ் போன்ற அடையாள அட்டையை தொலைத்தவர்களுக்கு உடனடியாக, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' கிடைத்துவிடும். விபத்து ஏற்பட்டால் மட்டும், ஒரே முறை போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தால் போதுமானது. பின் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டும். கோர்ட்டிலும், பிற இடங்களில் ஒப்படைக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் போலீஸ் சேகரித்து விடும்.
அதை சரியான நேரத்தில், அந்த இணையதளத்திலும் காவல் துறையால் பதிவு செய்யப்படும். ஆவணங்களை பெற விரும்பினால், அந்த இணையதளத்தில் நம் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்தால், ஓ.டி.பி., வரும். அதைப் பயன்படுத்தி நாமும் அதை பார்க்கலாம். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி, பயனீட்டாளர்கள் ஓர் ஆவணத்திற்கு, 10 ரூபாயும், இன்சூரன்ஸ் கம்பெனிகள், 100 ரூபாயும் கட்டி இணையத்தில் இருந்து, பிரின்ட் எடுத்து கொள்ளலாம். அதன்பின் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுவதோடு, நேரமும் மிச்சப்படும். இந்த நடைமுறையை புரிந்து கொள்ள முடியாதவர்கள், அருகில் உள்ள காவல் நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் சொல்லி பதிவு செய்யலாம். இதுதவிர, போன் மற்றும், 'இ - மெயில்' முகவரி இரண்டும் இல்லாதவர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களின் முகவரியை தரலாம்.

Read more...

நீங்கள் சோம்பல் பட்டால் அவ்வளவுதான் குழந்தைகள்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மாக்களுக்கு மனது நிறைவதேயில்லை. 'நிறைய சாப்பிட்டால் தான் குழந்தை நன்றாக வளரும்' என நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, கிட்டத்தட்ட எல்லா அம்மாக்களுமே, குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணிக்கவே செய்கின்றனர். ஆனால், இப்படித் திணிப்பது குழந்தைகளுக்கு சாப்பாட்டின் மேல், வெறுப்பை ஏற்படுத்தி விடும்.எனவே, ருசியாக சமைத்து கொடுக்கலாம்; பீட்ரூட், கேரட், ஆரஞ்ச் என, இயற்கையான நிறம் சேர்த்து, கலர் கலராக சமைத்து கொடுக்கலாம். திராட்சை கண்கள், பாதாமில் மூக்கு என்று, இட்லியில் டெகரேட் செய்து, அவர்களை சாப்பிட துாண்டலாம். காலையில் குழந்தை சாப்பிடவில்லை என்றால், லஞ்ச் சரியாக சாப்பிட்டு விடும்;  இது இயல்பானது. குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் பருப்பும், நெய்யும், காயும் கலந்து தருவது வழக்கமாக உள்ளது. அதே கிண்ணத்திலேயே மிச்சமிருக்கும் சாதத்தில், தயிரும் கலந்து தருவதும் நடக்கிறது. இப்படி காய்கறி, தயிர், குழம்பு என எல்லாவற்றையும் ஒரே கிண்ணத்தில், உங்களுக்கு கலந்து கொடுத்தால் சாப்பிடுவீர்களாஅதேபோல,  ஒரே மாதிரியான உணவுகளை திரும்பத் திரும்ப கொடுத்து, உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விட வேண்டாம். காக்கா, நாய் என்று பிள்ளைகளுக்கு காட்டி, பாட்டிகள், சாப்பாட்டை வாயில் திணித்து விட்டனர். இந்த கால அம்மாக்கள், 'டிவி' மற்றும் மொபைல்போனை குழந்தைகள் கையில் கொடுத்து, தன்னை மறந்து அதை பார்க்கிற சமயத்தில், உணவை திணித்து விடுகின்றனர். இந்த இரண்டுமே குழந்தைகளை ஏமாற்றி, உணவை வாயில் திணிக்கிற, 'டெக்னிக்' தான். அதற்கு பதிலாக, சாப்பிடும் நேரங்களை குழந்தைகளுக்கு ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுக்கலாம். ஓடியாடும்படி, பாட்டு பாடும்படி அல்லது விளையாட்டு காட்டி, கதை சொல்லி என்று சாப்பிடும் நேரத்தை, 'எஞ்ஜாய்' பண்ண வைக்கலாம்.அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டபடியே, குழந்தைக்கு சாதம் ஊட்டலாம். விஷயங்களை சொல்லும் சுவாரஸ்யத்தில், குழந்தை சாப்பாட்டை சமர்த்தாக சாப்பிடும்.குழந்தைகளின் முன் நீங்கள், 'டிவி' பார்த்தபடி சாப்பிடக் கூடாது; குழந்தையும் அதையே பின்பற்றும், சரியாகவும் சாப்பிடாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உணவு பிடிக்கும். சிலருக்கு இட்லி, சிலருக்கு எப்போதும் தோசை அல்லது சப்பாத்தி. எனவே, குழந்தைகளுக்கு பிடித்ததை, செய்து கொடுக்கலாம்.இன்றைக்கு எல்லா குழந்தைகளுக்குமே நுாடுல்ஸ் பிடிக் கிறது. அதனால், இதை மொத்தமாக தவிர்க்க முடியாது. அதற்கு பதிலாக, மாலை நேர சிற்றுண்டியாக மாற்றி கொஞ்சமாக கொடுக்கலாம்.
குழந்தைகளை நன்றாக சாப்பிட வைக்க வேண்டுமென்றால், குழந்தைகளின் ஒன்றரை வயதில் இருந்தே, அவர்களை தானாக அள்ளிச் சாப்பிட பழக்குவதே, முதல் தீர்வு.
குழந்தைகள் சிந்தியபடி தான் சாப்பிடுவர். சிந்தியதை சுத்தப்படுத்த, நீங்கள் சோம்பல் பட்டால், அவர்களை சாப்பிட பழக்க வைக்க முடியாது.



Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets