உங்கள் வருகைக்கு நன்றி

நாம் என்ன செய்தோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் என்ன செய்தோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நம்மில் பலருக்கும் பணக்காரர் ஆக வேண்டும்; லட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்முடைய ஆசை நிறைவேறுகிறதா... கனவு நினைவாகிறதா என்றால், நிச்சயம் இல்லை. தினமும் அந்த வேலை, இந்த வேலை எனச் சிறிய சிறிய வேலைகளுக்காகவே நாயாக, பேயாக உழைக்கிறோமே தவிர, நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள, வசதியை மேம்படுத்திக்கொள்ளப் பெரிதாக நினைப்பதுமில்லை; நினைப்பதை நிறைவேற்றவும் முடிவதில்லை. 

`பணம் இருந்தால் மட்டும் பணக்காரர் ஆகிவிட முடியாது. சிக்கனம், சேமிப்பு, முதலீடு, திட்டமிடலும் இருந்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும்; தொடர்ந்து லட்சாதிபதியாக நிலைக்க முடியும்'' என்கின்றனர் சிகரத்தைத் தொட்டவர்கள். அதே சமயம் ``40, 50 வயதில் பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை 40, 50 வயதில் யோசிப்பதைவிட, 10, 20 வருடங்களுக்கு முன்பே அதுகுறித்து நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழ்க்கையை வழிநடத்தினால் வெற்றி கிட்டும்'' என்கின்றனர் அனுபவசாலிகள். 
அறிஞர்கள் அருளிய எளிய வழிகள் உங்களுக்காக...
வருமானத்தைப் பெருக்கிக்கொள்! 
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணக்காரர் ஆவது, அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால், அதற்கான முதல் படி ஒவ்வோர் ஆண்டும் நாம் வளர்வதைப்போல, நம்முடைய வருமானமும் வளர வேண்டும். அது மாத சம்பளதாரராக இருந்தாலும் அல்லது ஏதேனும் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் வருமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவில்லையெனில், திறமையை வளர்த்துக்கொண்டு, உங்கள் துறையில் எங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதைப் பார்த்து அங்கு மாறிக்கொள்வது சிறந்தது. உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வது நல்லது. 
இரண்டாவது வேலை! 
உங்களுக்கு என ஒரே பணி, ஒரே சம்பளம், ஒரே வருமானம் என வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை நடத்தாதீர்கள். எந்த வழியில் எல்லாம் வருமானம் ஈட்ட முடியுமோ, அந்த வழியில் எல்லாம் முடிந்த வரை வருமானம் ஈட்டத் தயாராகுங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் காலத்தைக் கடத்தாதீர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஆகையால், சிறிய வேலையாக இருந்தாலும் சரி, பெரிய வேலையாக இருந்தாலும் சரி முடிந்த வரை உங்களை வளைத்து வேலை செய்யுங்கள், வருமானத்தை ஈட்டுங்கள். 
சேமிக்கப் பழகு! 
உங்களுடைய முதல் மாதச் சம்பளம் அல்லது உங்களுடைய இப்போதைய வருமானத்திலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். சேமிப்பு என்பதற்காக அந்தப் பணத்தை உண்டியலிலோ, பீரோ லாக்கரிலோ போட்டு வைப்பது சேமிப்பாகாது. இதனால் எந்த ஒரு பலனும் இல்லை. மாறாக, உங்களுக்கு நன்கு தெரிந்த, விருப்பமான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். தேவையில்லாத, அநாவசியமான செலவைக் குறைத்து நல்ல முதலீட்டுத் திட்டத்தில் நீண்டகாலத்துக்கு முதலீட்டை மேற்கொள்ளுங்கள். 
இலக்கை நிர்ணயிக்காதீர்கள்! 
வாழ்க்கையில் இலக்கு என்பது மிக அவசியம். ஆனால், வருமானம் விஷயத்தில் மட்டும் இலக்கு என எதையும் நிர்ணயிக்காமல், கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராமல் ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே அதிக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணத்துக்கு, ஆண்டுக்கு `ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என இலக்கு நிர்ணயித்து ஓடாமல், `10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என ஓடி உழையுங்கள். வருமானத்தைப் பொறுத்தவரை அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அதே சமயம் அதற்காகப் பல மடங்கு பாடுபடுங்கள். 
நேரம் ஒதுக்குங்கள்! 
தினமும் தூங்குவதற்கு முன்போ அல்லது வேறு ஒரு நேரத்திலோ குறைந்தது 5 அல்லது 10 நிமிடம், இன்று என்ன செய்தோம் என்பதை யோசியுங்கள். வாழ்க்கையை வளமாக்குவதற்காக இதுவரை சரியாகச் செய்தோமோ, செய்துவருகிறோமோ என உங்கள் பாதையை நீங்களே பின்னோக்கிப் பாருங்கள். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என உங்கள் பாதையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பயணியுங்கள். இதில் ஏதாவது தவறு இருந்தால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே. 
நல்ல நண்பர்கள்! 
பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை, நம்முடைய உழைப்பு மற்றும் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது. பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம். ஆகையால், என்னதான் உங்களுக்கு வேலை அல்லது தொழில் பிரச்னையாக இருந்தாலும் அதை வேறு ஒருவரிடம் காட்டாமல், மென்மையான அணுகுமுறையையே என்றும் கையாளுங்கள். ஏனெனில், பிறருடைய ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியாது; லட்சத்தையும் சம்பாதிக்க முடியாது.
  நன்றி - விகடன்


Read more...

மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பாத்திமா தாகிரா... சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் 'இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை' எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார்.
"மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்ததுஎன்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா.

படங்கள்: ந. வினோத் குமார்

"சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பேயாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாதுஎன்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு.
இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக 'ஜனாசா' எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன்.
தாய் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன்வரமாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள்.
எங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு.
பெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார்.
இறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா.
நன்றி - தி ஹிண்டு

Read more...

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்ட இளைஞர்!

புதன், 3 ஜூலை, 2013

"கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண் கிருஷ்ணமூர்த்தி:

சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன. பின் குப்பை கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. நன்கு படித்து, "கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை, என்னுடன் இணைத்தேன். 2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக் கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில் செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம் நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள் எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன். ஏரிகளை சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் பணி துவங்கும். மொபைல்: 99402 03871

Read more...

ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும்.

புதன், 5 ஜூன், 2013

ஜூன் 5-ந்தேதி சுற்றுப்புற சூழல் சுகாதார தினம். இயற்கையின் எல்லா பிரிவுகளோடும் மனிதனுக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது. தான் வாழும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. சிறு சிறு அலட்சியங்களால் மாசுபடுத்தப்படும் சுற்றுப்புறம் இன்று பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கிறது.

சுற்றுப்புறச்சூழலில் மாசு உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சவால் உலக வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் ஒத்துக்கொண்டிருக்கின்றன. பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு காலநிலைச் செய்தி போல வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. இது மிகப் பெரிய மாற்றங்களை பூமியில் ஏற்படுத்தி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

1995க்குப் பிறகு பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தை பெருமளவுக்கு மீறியிருப்பது கவலைக்குரிய செய்தி. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின் வெப்பமும் பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

முதலாவதாக உலக வெப்பம் அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு. பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது.

வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற பல இயற்கைச் சீற்றங்களுக்கும் இது காரணமாகி விடுகிறது. ஒழுங்கற்ற மழையும், கோடையில் அதிக வெப்பமும், பனிக்காலத்தில் கடும் பனியும் இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும். தற்போதைய வெப்ப அளவு இது வரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த கரியமில வாயு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வளையத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப்பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

இந்த செயல் தொடர்ச்சியாக நடக்கும் போது பூமி முழுவதும் ஒருநாள் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் உண்டு. பசிபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் 1950களுக்குப்பின் பெருமளவில் வெப்பமடையத் துவங்கியிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் கடந்த 45 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்திருக்கிறது. கார்பன்டை ஆக்ஸைடின் அதிகப்படியான தேக்கம் கால நிலையில் பெரும் மாறுதலை உருவாக்கியிருக்கிறது.

மரங்கள் குறைவாக இருப்பது காலநிலை மாற்றத்தின் காரணிகளில் ஒன்று. நானூறு ஆண்டுகளுக்கு முன் மரங்களை வெட்டியதற்காக மன்னனால் மரண தண்டனை பெற்ற ராஜஸ்தான் பஷானியர்களைப் பற்றிய குறிப்பே நமக்கு சுற்றுப்புறச்சூழல் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழைய தகவல். வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும்போது நோய்களின் கூடாரத்தைச் சென்றடைகிறான். நாடு என்பது வீடுகளின் கூட்டம். வீடும் அதைச் சுற்றிய இடங்களும் தூய்மையாக இருக்கும்போது ஒட்டுமொத்த நாடும் தூய்மையாகிறது.

அமெரிக்காவில் ஓடும் வாகனத்திலிருந்து எதையேனும் வெளியே எறிந்தால் $ 500 அபராதம் செலுத்தவேண்டும். எனவே அங்கே யாரும் பொது இடங்களை அசுத்தமாக்குவதில்லை. அமெரிக்காவில் இருக்கும்போது சுற்றுப்புறத்தை சுத்தமாய் வைத்திருக்கும் இந்தியர்கள் கூட, இந்தியா வந்ததும் அதை மறந்து விடுவது தான் வேதனை. மரங்கள் நடுவது பரவலாக செயலாக்கத்தில் இருக்கும் ஒரு வழிமுறை. இது ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை அதிக அளவில் உள்ளிழுப்பதால் பூமியின் கரிய மில வாயு அளவு குறைகிறது. இது பூமியின் வெப்ப அளவை சற்று குறைக்கிறது.

வெப்பத்தையும், காற்றையும் வேறு சக்தியாக மாற்றும் பல புதுப்புது முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றார்கள். இது பூமியின் வெப்ப அளவை சற்றே மட்டுப்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு. மக்கள் தொகைப்பெருக்கமும் பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். வாகனங்களின் பெருக்கமும், அவை சரியான பராமரிப்புகளில் இல்லாததும் பூமியில் கரியமில வாயுவின் பெருக்கத்தை அதிகரிக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவும், இந்தியாவும் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. மாசுகளை பல வகைகளாக பிரிக்கலாம். தூய்மையான இயற்கை காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதும், தூசுகள் மிகுந்திருப்பதும், ஆலைகளின் புகைகளால் காற்று தன்னுடைய தூய்மையை இழப்பதும் காற்றை மாசுபடுத்தும் வகையில் சேர்கின்றன.

தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுபடச் செய்யும் காரணிகளை உள்ளடக்கியது. தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போகும் பட்சத்தில் தண்ணீர் மாசுபடுகிறது. கதிரியக்கம் போன்றவற்றால் சுற்றுப்புறம் மாசு அடைவது ஒரு வகை. தொழிற்சாலை அமிலங்களினால் சுற்றுப்புறங்கள் அசுத்தமடைவது இன்னொரு வகை. சாலை, விமான, தொழிற்சாலை சத்தங்களால் உடைக்கப்படும் இயற்கையான மௌனம் கூட ஒரு வகையான மாசு தான்.

அதிகப்படியான வெளிச்சத்தினாலும், வெளிச்சம் சார்ந்தவற்றாலும் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் இன்னல்களை வெளிச்ச மாசு என்றழைக்கிறார்கள். தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், மின்பொருள் கழிவுகள், உணவு, தண்ணீர் என எல்லா வகையான கழிவுகளும் நம்மை சிக்கலுக்குள்ளாக்குகின்றன. ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய், மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கேட்கும் திறன் குறைதல் போன்ற பல நோய்கள் சுற்றுப்புறம் தூய்மையின்மையால் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் தண்ணீர் மாசு காரணமாக ஆண்டுக்கு 14,000 பேர் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. தூய்மையான காற்று சட்டம், தூய்மையான தண்ணீர் சட்டம் என துறை வாரியாக இவை பெயரிடப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அமில மழையைப் பெய்ய வைக்கிறது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெய்யும் அமில மழை ஏரிகளையும், நிலங்களையும் பாதிப்படையச் செய்கிறது. ஜெர்மனி, ஸ்காண்டினேவியா போன்ற இடங்களில் பெய்த அமில மழை காடுகளிலுள்ள மரங்களின் இலைகளையும், ஏன் வேர்களையும் கூட அழித்திருக்கிறது. பூமியின் கரியமில வாயு பெருக்கம், கடலின் கரியமில வாயு அளவை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறது.

கடல்நீர் மாசுபடுவதற்கு 60% விழுக்காடு சாக்கடை கடலில் கலப்பதே காரணமாகிறது. எண்ணைத் தன்மையும், சோப்பு போன்ற பிற ரசாயனங்களும் கடலில் தொடர்ந்து செல்வதால் கடல் அசுத்தமடைந்து கொண்டே இருக்கிறது. சுமார் இரண்டரை லட்சம் கடல் பறவைகள் இதன் மூலம் இறந்து விட்டதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நிலம் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பதறிவோம்.

நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்துவிடுகிறது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே குடிநீர். அந்த தண்ணீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். உலகையே அச்சுறுத்தும் இந்த பிரச்சனையில் தனி மனித ஈடுபாடே ஒரு தீர்வை நல்க முடியும். எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயலாக்கவும் ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும். அதுவே வருங்கால தலைமுறையினருக்கு தரமான பூமியை நல்கும் -  

நன்றி மாலைமலர்

Read more...

விதிவிலக்காக நிற்கிறார் டாக்டர் வித்யா.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013


பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலமிது. மருத்துவத்தை சேவையாகப் பார்த்தமனோபாவம்  மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்! 

தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல  மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான  அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல்நலமில்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை  செய்து வருகிறார் வித்யா!

Mobile Clinic!

மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம்பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ  வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.

‘‘நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான்.  விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக  வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு. 

ஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது.  அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும், சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்...  பணம்  பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி  கிளினிக் தொடங்கினேன். 

என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷன்ட்தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா  சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில,  ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டாங்க. 

அவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன்.  அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட  ‘மொபைல் கிளினிக்ஐடியாவுக்கு அஸ்திவாரம்...பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத  நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார். 

மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை!  பற்களை சுத்தம்  செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன். 

வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம  கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக்  கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க. 

முதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை  முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது...’’ - அன்பொழுகப்  பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்! (தொடர்புக்கு - 9941664635)  


நன்றி -தினகரன் 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets