உங்கள் வருகைக்கு நன்றி

மாணவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை பல்கலை, தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது.

புதன், 4 ஜூலை, 2018

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சென்னை பல்கலை சார்பில்தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் வழிகாட்டும் வகையில், சென்னை பல்கலை நடத்தும், இலவச மாணவர் சேர்க்கை, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.பல்கலையின் பெரும் முயற்சியால், 80க்கும் மேற்பட்ட முன்னணி
கல்லுாரிகள், இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்க்க முன்
வந்துள்ளன.சென்னை பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி, பதிவாளர் சீனிவாசன் மேற்பார்வையில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் தலைமையிலான இலவச மாணவர் சேர்க்கை கமிட்டியினர், இலவச திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த திட்டத்தில், 2017ம் ஆண்டில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, ஜூன், 29 முதல், சென்னை பல்கலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் தேர்வு நடந்து வருகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து, இந்த வார இறுதியில் இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மூன்று ஆண்டுகளும், கல்விக் கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டண சுமையை, அவர்கள் படிக்கும் அந்தந்த தனியார் கல்லுாரிகளே ஏற்றுக்கொள்கின்றன.மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை, தங்கள்இணைப்பு கல்லுாரிகளில் செயல்படுத்தினால், மாநிலம் முழுவதும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், தரமான உயர் கல்வியை இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் திரும்ப கிடைக்கும் : இலவசக் கல்வி திட்டத்தில், லயோலா கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ், விவேகானந்தா, எத்திராஜ், டி.ஜி.வைஷ்ணவா, குருநானக், ஏ.எம்.ஜெயின் என, முன்னணி கல்லுாரிகளில், பி.காம்., - பி.எஸ்சி., என, முன்னணி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் தேர்வாகும் மாணவர், ஏற்கனவே ஒரு கல்லுாரியில், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால், அவர் இலவச கல்வி திட்டத்தில் தேர்வாகும் போது, அந்த கல்லுாரி இடத்தைவிரும்பினால் அவருக்கு ஒதுக்கப்படும். அந்தகல்லுாரியில், அவர் செலுத்திய கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெளிப்படைத்தன்மை' : இலவசக் கல்வி திட்டத்தில், மிக வெளிப்படைத் தன்மையுடன், எந்த சிபாரிசுக்கும் இடமின்றி, மாணவர்களை தேர்வு செய்கிறோம். அதனால், இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் நிர்ணயித்துள்ள தகுதிக்கு உரியவர்களே, பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர். மற்ற வசதியுள்ள மாணவர்கள், தாங்களாகவே விண்ணப்பிப்பதில்லை. இந்த திட்டத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்

துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

Read more...

பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இன்றைய கல்வி முறை, மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையாக மாறி விட்டது. பல பள்ளிகளில் பாடங்களைச் சரிவர நடத்தாமலே, கேள்வி-- பதில்களை மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெற வைக்கின்றனர். விளையாட்டு, வேடிக்கை எதுவும், இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இல்லை. குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்ற, முயற்சிக்காதீர்கள்    மத்திய அரசின் மனிதவள துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம். இங்கு, ஆரம்ப, அடிப்படை கல்வி, 8ம் வகுப்புக்கு சமமானது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம். இதில், நமக்கு பிடித்த பாடங்களை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. 10ம் வகுப்பிலேயே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி முதலான, 17 மொழிகளில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மொழிகளை தேர்வு  செய்யலாம். கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல், ஓவியம், கணக்குப் பதிவியல் போன்ற, 11 பாடங்களில், 3 - 5 வரை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேல்நிலையில் ஒன்பது மொழிகளும், 33 பாடத் துறைகளும் உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில், நம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில், 5 - 7 பாடங்களில் தேர்வு எழுதலாம்.  இந்த முறை படிப்பால் நேரம், தாங்கள் விரும்பியவற்றை கற்கும் வசதியும், சுதந்திரமும் இருக்கிறது. இந்திய மெடிக்கல் கவுன்சில், ஐ.ஐ.டி., முதலான பொறியியல் கல்லுாரிகளுக்கான குழுமம், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது. எனவே, இங்கு, 10ம் வகுப்பு முடித்தவர்கள், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளியிலும், பிளஸ் 1 சேர முடியும். மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திற்கேற்ப, மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியல் சார்ந்த படிப்புகளையோ தொடர முடியும். இந்தாண்டு, சென்னையில் இருந்து, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர் தான். தங்கள் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பழக வாய்ப்பு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.   குழந்தைகளை வீட்டில் இருந்தே படிக்க வைக்கலாம். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனிமையில் இருக்க நேரும் குழந்தைகளுக்கு, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். இல்லையெனில், இதற்காக தனி வகுப்புகள் ஏற்பாடு செய்ய நேரிடும்.  

Read more...

அறிவியல் பாடப்பிரிவையும், கலைப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யும் கலாசாரம் எதனால்

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

உயர்கல்வியில், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு, மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் இல்லை எனவும், இதன் காரணமாகவே பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுவான பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பின்பே, மாணவர்கள் எதிர்கால வாழ்வின் அஸ்திவாரத்தை, விழிப்புணர்வுடன் அமைக்க வேண்டும். ஆனால், 60 சதவீத மாணவர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில், துறைகளை தேர்வு செய்வதால், உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, அரசு மற்றும் கிராமப்புற மாணவர்களே அதிகளவில், இந்த சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர். பிளஸ் 2 தேர்வுக்கு பின்பு, மாணவர்களுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமிருந்து, உயர்கல்வி தேர்வு குறித்த ஆலோசனை கிடைக்கிறது. ஆனால், மேல்நிலை வகுப்பு தேர்வுகளில், பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.
அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், அறிவியல் பாடப்பிரிவையும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் கலைப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யும் கலாசாரமே நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, உயிரியல், அறிவியல், கம்ப்யூட்டர் அறிவியல், வணிக கணிதம், கலை பாடப்பிரிவுகள், தொழில்கல்வி உள்ளிட்ட துறைகளின் கீழ், 32 பாடங்கள் உள்ளன. பிரிவுகளுக்கு தகுந்தபடி, பாடங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம். இதில், மாணவர்கள் சிந்தித்து கவனமாக தேர்வு செய்வது அவசியம்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறுவதாவது: மேல்நிலை வகுப்புகளில், மாணவர்களின் விருப்பம் மற்றும் உயர்கல்விக்கு ஏற்ப பாடப்பிரிவை சிந்தித்து, தேர்வு செய்வது அவசியம். பொதுவாக, 450க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே, உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆகிய பாடங்கள் அடங்கிய முதல் குரூப் வழங்கப்படுகிறது.
இதில், மாணவர்களின் ஆர்வம், இத்துறையை அவர்களால் படிக்க முடியுமா? என்பதை பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் சிந்திப்பதில்லை. பத்தாம் வகுப்பில், கணித பாடத்தில், 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில், கணித பாடத்தில் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு, காரணம் அம்மாணவர்களுக்கு கணித பாடத்தில் நாட்டம் இல்லை என்பதே. ஆர்வமில்லாமல், அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மட்டும், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை தேர்வு செய்யவேண்டும் என்று கட்டாயம் இல்லை. குறிப்பாக, பெற்றோர்கள் மாணவர்களின் ஆர்வத்தை உணர்ந்து, கலை அல்லது அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும்.

பத்தாம் வகுப்பில், சரியான பாடப்பிரிவை ஆர்வத்தின் அடிப்படையில், தேர்வு செய்தால், பிளஸ்2 தேர்வுகளை எளிமையாக எதிர்கொள்வதுடன், உயர்கல்வி வாய்ப்பும் பிரகாசமாக அமையும். 

Read more...

திரையில் பார்ப்பதை மாணவர்கள், யதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றனர்.

சனி, 7 செப்டம்பர், 2013


கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் செய்திகள், சமீபகாலமாக அதிகளவில் வெளியாகின்றன. இந்த வன்முறைக்கு பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்ப தாக, "மோதல்' மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான மோதல்களுக்கு, "பஸ் ரூட்' பிரச்னையே தொடக்கப் புள்ளியாக உள்ளது. குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள், பேருந்தில் "கானா' பாடி செல்வது வழக்கம்.அப்போது, மற்றகல்லூரி மாணவர்களை தரம் தாழ்த்தி, தங்கள் கல்லூரியின் புகழை பாடுவர். இதனால், அந்த பேருந்தில் இருக்கும் மற்ற கல்லூரி மாணவர்களுடன் கை கலப்பு ஏற்படுகிறது. அதே போல, ஒரே பேருந்தில், வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் செல்லும் போது, குறிப்பிட்ட கல்லூரி மாணவியரை கிண்டல் செய்யும் போது, மோதல் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள்; தங்கள் கல்லூரியிலும், மற்ற கல்லூரிகளிலும், தங்கள் "பஸ் ரூட்டின்' பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக, நண்பர்களையும், அந்தந்த பகுதியில் வசிக்கும் அரசியல் சார்புடையவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்கின்றனர். இதனால், இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் இடையே பிரச்னை வரும் போது, அந்தந்த மாணவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள் போர்வையில், ஆயுதங்களோடு மோதலில் ஈடுபடுகின்றனர். மோதல் முற்றும் போது, கல்லூரி மாணவர்களையும் ஆயுதம் எடுக்க அவர்களே ஊக்கம் கொடுக்கின்றனர்.
எந்த பேருந்து வழித்தடத்தில், அதிக மாணவர்கள் பயணிக்கின்றனரோ, அவர்களே கல்லூரிதேர்தலில், வேட்பாளர்களை நிறுத்துவர்.தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு, வெகுஜன அரசியல் கட்சிகளில், பொறுப்பும், நிதியும் வழங்கப்படுவதால், கல்லூரி தேர்தல், பொதுத்தேர்தலுக்கு இணையான வகையில் நடக்கிறது. மாணவர் தேர்தல் நடப்ப தற்கு நான்கு மாதங்களுக்கு முன், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆள் மற்றும் பண பலத்தை வழங்கி, ஒட்டுமொத்த தேர்தல் செலவையும் ஏற்றுக் கொள்கின்றன. அரசியல் கட்சிகளின் பின்புலம் இருப்பதால், ஏற்கனவே, "வானளாவிய' சுதந்திரம் பெற்ற மாணவர்கள், எதையும் துணிந்து செய்யும் தைரியத்திற்கு வந்து விடுகின்றனர்.
மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது குறித்து,  மாநில கல்லூரி மாணவர் கூறியதாவது:
ஒரு ஏரியாவுக்கும், அடுத்த ஏரியாவுக்கும் பிரச்னை வருகிற போது, எப்படி ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார்களோ, அது போலவே, நாங்களும் சண்டை போடுகிறோம். கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் சண்டை போடுவது எப்போதும் நடக்கும். சமீபகாலமாக, ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுவதால், பொதுமக்கள் புதிதாக பார்க்கின்றனர். மற்றபடி இதெல்லாம் சாதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவர் கூறுகையில், ""எங்கள் "பஸ் ரூட்' மாணவர் பாதிக்கப்பட்டால், அது ரூட்டில் வரும் அனைத்து மாணவர்களின் மானப் பிரச்னை. அதனால், ஆயுதங்களுடன் மோதுகிறோம். போலீசார் எங்களை கைது செய்தாலும், பெரும்பாலும், எதிர்காலம் கருதி, வழக்கு பதிவு செய்வதில்லை. அதனால் தைரியமாக, மோதலில் ஈடுபடுவோம்,'' என்றார்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வகைவன்முறை அதிகரித்து வந்ததை அடுத்து, அப்போதய சென்னை போலீஸ் கமிஷனர், அனைத்து கல்லூரி களின் முதல்வர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கேட்டனர்.முதல்வர்களும் கண்ணீர் வடித்தபடி, மாணவர்களின் லீலைகளை எடுத்துக் கூறினர். உடனே, அன்றைய கமிஷனர், "பஸ் டே"யால் பல பிரச்னைகள் வருவதை கருதி, "பஸ் டே'க்கு தடை விதித்தார்.அதன் பிறகு, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். சிறிது நாள் தொடர்ந்த நடவடிக்கை, பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.மாணவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்திருந்தால், இப்படி சாலையில் மோத மாட்டார்கள் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
வன்முறை கலாசாரம் குறித்து, உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா கூறியதாவது: 
மாணவர்களின் இந்த நிலைக்கு சினிமாவே காரணம். எதையும் பசுமரத்தாணி போல் உள்வாங்கும் பருவத்தில் இருப்பதால், சினிமா முன்வைப்பதை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். கல்லூரி மாணவர் என்றால், திமிராக திரிய வேண்டும்; கட்டாயம் காதலி இருக்க வேண்டும்; எதற்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும் என, சினிமா காட்டுகிறது. திரையில் பார்ப்பதை மாணவர்கள், யதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளுக்கு நாள், கல்லூரி மாணவர்கள் பற்றிய கவலை, பெற்றோர்களிடம் குறைந்து வருகிறது. இந்த இரண்டும்மாறினால், மாணவர்களிடம் மாற்றம் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.  

Read more...

100 பேரில் ஒருவரை தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும்.

புதன், 3 ஜூலை, 2013


தமிழகத்தில், ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மாணவர்கள், பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
ஒரு பொறியாளர் வேலைக்கு, 17 பேர் போட்டியிடுவதாக, சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வரும் மாணவர்கள், வேலைக்குரிய தகுதியை வளர்த்து கொள்வதில்லை. இதனால், முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்காத நிலை நிலவுகிறது. வேலை தேடுபவர்கள், கூடுதல் திறமைகளை வளர்த்து மட்டுமே, தனித்து நிற்க முடியும்.
ஒரு நிறுவனத்தில், 100 பேரில் ஒருவரை, வேலைக்கு தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில், பாடத்தில் கூடுதல் அறிவு, தகவல் தொடர்பு திறன் வளர்த்தல் உள்ளிட்ட கூடுதல் திறமைகளை வளர்த்து கொண்டால், வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புடன், ஸ்மார்ட் போனில், அப்ளிக்கேஷன் டெவலப் செய்ய தெரிந்தால், கூடுதல் திறமைக்காக இத்துறையில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். அது போல, சிவில் இன்ஜினியரிங் படிப்புடன், "ஆட்டோ கேட்" படிப்பையும் முடித்தால், வேலை வாய்ப்புகளை பெறலாம்.
படிப்பு சார்ந்த தொழில் திறனை வளர்த்து கொண்டால் எளிதில் முன்னேறலாம். உபயோகப்படும் ஒரு பொருளை கஷ்டப்பட்டு தேடி, தேடி தேர்ந்தெடுப்பதை போல, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரிகளை தேர்வு செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும். 
கடந்த 1970ல், 10 சதவீதம் மாணவர்கள், சொந்த செலவில் வெளிநாட்டு சென்று கல்வி கற்றனர். தற்போது, 90 சதவீதம் மாணவர்கள் சொந்த செலவிலும், 10 சதவீதம் பேர் வங்கி கடனில், படிக்க செல்கின்றனர். வெளிநாட்டு சென்று கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர்.
சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மோசமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே, 100 சதவீத வேலை கிடைக்கும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகம் குறித்து, இணையதளங்களில் தரும் தகவல்களை நம்பி, வெளிநாடு செல்ல கூடாது. பல்கலைக்கழகம் குறித்து முழுவதும் விசாரித்து விட்டு செல்ல வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.எம்.,ல் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
ஜப்பானில், 4,000 பல்கலைக்கழகமும், அமெரிக்காவில் 3,700 பல்கலைகழகமும், சீனாவில் 2,500 பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான பல்கலைக்கழகங்கள் இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இளங்கலை பட்டம் படிக்க, 15 லட்சம் வரையும், முதுகலை பட்டம் படிக்க, 40 லட்சம் ரூபாய் வரையும் செலவாகிறது. பிரான்ஸ், ஹங்கேரி பான்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets