உங்கள் வருகைக்கு நன்றி

விவசாயத் தொழில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயத் தொழில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திட்டமிட்டு செய்ததால் வெற்றி,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, விண்ணமங்கலம் கிராமத்தில், ஒருங்கிணைந்த விவசாய பண்ணை நடத்துவது பற்றி ஜெகன் வின்சென்ட்: அமெரிக்கா வில், மென்பொருள் துறையில், வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அங்கே, கொஞ்ச விவசாய நிலத்தில், நிறைய லாபத்தை விவசாயிகள் பார்த்தனர். குறிப்பாக, சிறிய இடத்தில், மீன் குட்டை போட்டு, அதில் மீன் வளர்ப்பர்; அதன் மேல் தொட்டிகள் கட்டி, செடிகள், பயிர்களை வளர்ப்பர்.இது போன்ற விவசாயத்தை, 'அக்வாபோனிக்ஸ்' என்றும், 'ஹைட்ரோபோனிக்ஸ்' என்றும் அழைக்கின்றனர். 2003ல், நாடு திரும்பியதும், இந்த, 1.25 ஏக்கர் இடத்தை வாங்கி, நவீன விவசாயம் செய்யத்

துவங்கினேன்.முதலில், 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட, மீன் தொட்டி அமைத்தேன். அதன்மேல், கான்கிரீட் இணைப்புகளை ஏற்படுத்தி, அதில் சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகளில் செடிகள், பூக்கள், பயிர்களை வளர்க்கத் துவங்கினேன்.அப்படியே படிப்படியாக, மீன் தொட்டியின் அளவை, 70 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது போல, அதன் மேல் உள்ள வாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து உள்ளேன். மேலும், உயர் மட்டத்தில் வளரும் செடிகள், கொடிகள் போன்ற வற்றை வளர்த்து, அதன் மூலம் காய்கறிகளை பயிரிடுகிறேன்.
கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா என, ஒன்பது வகையான மீன்களை வளர்க்கிறேன். அது போல, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளையும் பயிரிடுகிறேன். தரையில் கிடைக்கும் மகசூலை விட, பக்கெட்டில் வளரும் செடிகள் மூலம், கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
இதில் பல நன்மைகள் உண்டு. ஒரு பக்கெட்டில் வளரும் செடியில் நோய் தாக்கினால், அந்த பக்கெட்டை மட்டும் அப்புறப்படுத்தி வைத்து விட முடிகிறது; இதனால், பிற செடிகளுக்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இது போன்ற, பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நல்ல விளைச்சல் மட்டும் லாபம் சம்பாதிக்கிறேன். இந்த பண்ணையை துவக்க, இதுவரை, 35 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்து உள்ளேன். ஆனால், ஆண்டுதோறும், அந்த தொகையை விட, அதிக லாபம்
சம்பாதிக்கிறேன்.ஆண்டிற்கு, 30 டன் மீன் கிடைக்கிறது. இதிலிருந்து மட்டுமே, 54 லட்ச ரூபாய் கிடைக்குது. அது போல, மாதம், 3 டன் காய்கறிகளும் உற்பத்தியாகின்றன. அந்த லாபம் தனி. இது போக, கடக்நாத் கோழிகளையும் வளர்க்கிறேன்.
இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வதால், 7 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும், விளைச்சல் மற்றும் லாபத்தை, 1.25 ஏக்கரில் எடுக்கிறேன்!

Read more...

தேன் பெட்டிகள் வைத்து, 'முருங்கைத்தேன்'

ஞாயிறு, 28 ஜூன், 2020


துாத்துக்குடி மாவட்டம்ஏரல் அருகில் உள்ள, சாயர்புரம் முருங்கைத் தோட்டத்தில், தேன் பெட்டிகள் வைத்து, 'முருங்கைத்தேன்' உற்பத்தி செய்து வரும் ஆனந்த்: அடிப்படையில விவசாயக் குடும்பம் தான். சின்ன வயசுலயே சொந்தமா ஏதாவது தொழில் செய்யணும்னு ஆர்வம் இருந்துச்சு. பி.ஏ., பொருளாதாரம் படிச்சு முடிச்சதும், காளான் பண்ணை வைக்கலாம்னு, அதுக்கான பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். மதுரையில், காளான் பண்ணை ஆரம்பிச்சேன். அறுவடை செஞ்ச காளான்களை ஒரே நாள்ல விற்பனை செய்துடணும். ஆனா, விற்பனை செய்ய முடியல. அதனால, காளான்கள் வீணாகி, நஷ்டம்
ஆகிடுச்சு.இனிமேல் விவசாயம் செஞ்சாலும் சரி, உற்பத்தி செஞ்சாலும் சரி, அதன் மூலமா கிடைக்கிற பொருளை இருப்பு வெச்சு தான் விற்பனை செய்யணும்னு முடிவு எடுத்தேன். அப்படியொரு தொழிலைத் தேடினேன். அப்போது தான், தேன் வியாபாரம் செய்யலாம்னு யோசனை தோணுச்சு. கோயம்புத்துார் மாவட்டம், விவசாயம் நிறைஞ்ச பகுதி. அதனால அந்தப் பகுதியில தேன் உற்பத்தி செய்றவங்ககிட்ட, தேனை வாங்கி, விற்பனை செய்ற தொழிலை ஆரம்பிச்சேன்; ரெண்டு வருஷம் போச்சு.
கோயம்புத்துார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்பு குறித்த ஒரு வாரப் பயிற்சியில கலந்துகிட்டேன். பிறகு, நண்பர் ஒருவர் தோட்டத்துல, 10 பெட்டிகளை மட்டும் வெச்சு, வளர்த்துப் பார்த்தேன். பிறகு, பெட்டிகளை அதிகமா வைக்க ஆரம்பிச்சேன். பெட்டிகளோட எண்ணிக்கையும், உற்பத்தியும் அதிகமாகிடுச்சு. இப்ப, 'மதுரம் இயற்கை தேனீ பண்ணை'ங்கற பேர்ல கோயம்புத்துார்லயும், துாத்துக்குடியில இருக்கும், என் சொந்த நிலத்துலயும், 950 பெட்டிகள் மூலம் தேன் உற்பத்தி செய்துட்டு வர்றேன்.
புதிதாகக் கூடு கட்டி,தேன் அறுவடை செய்ய, மூன்று மாதங்கள் ஆகும். வாரம் ஒருமுறை கட்டாயம் பெட்டிகளைத் திறந்து, ஒவ்வொரு சட்டகத்தையும் எடுத்துப் பார்க்க வேண்டும். தேனீக்கள் சரியாகக் கூடு கட்டுகிறதா; நோய்கள் ஏதும் தாக்கியுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஜனவரி முதல், மார்ச் வரையிலும், ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலும் அதிகமாகப் பூப்பூக்கும். இந்த மாதங்களில் அதிகமாகத் தேன் சேகரிக்கலாம். ஏப்ரல் முதல், மே வரையிலும், செப்டம்பர் முதல், டிசம்பர் வரையிலும் பூக்கள் குறைவாகப் பூக்கும். தேன் உற்பத்தியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துல, ஆறு மாதம் தான் அதிக உற்பத்தி நடக்கும். மழைக்காலம் உள்ளிட்ட மற்ற, ஆறு மாதங்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். என்கிட்ட இருக்கும், 950 பெட்டிகள் மூலமா, ஒரு வருஷத்துக்குச் சராசரியா, 12 ஆயிரம் கிலோ தேன் கிடைச்சுக்கிட்டு இருக்கு; 31 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது!

Read more...

புதன், 20 மார்ச், 2019


வான்கோழி வளர்ப்பில் வருமானம் ஈட்டி வரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, சாலமன்: கல்லுாரி படிப்பை முடித்து, அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, 4 ஏக்கரில், நெல், நிலக்கடலை என, சாகுபடி செய்து வந்தேன். அதே நேரத்தில், தரிசு நிலத்தில் நாட்டுக் கோழிகளை வளர்த்து, முட்டைகளை உற்பத்தி செய்ய நினைத்தேன்.அதற்காக, பல பண்ணைகளை பார்த்த போது தான், வான்கோழி பற்றி தெரிந்தது. தமிழகத்தில் அந்தளவு வான்கோழி பண்ணைகள் இல்லாததால், இதில் இறங்க முடிவு செய்தேன். அண்ணனுடன் சேர்ந்து, தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி, வான்கோழி பண்ணை ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில், ஒரு மாதமான, 550 வான்கோழி குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்தோம். ஒரு மாத குஞ்சுகளை வாங்கினால், இறப்புகள் அதிகமாக இருக்காது. ஐந்தாறு மாதம் வளர்ந்தவுடன், ஆண் வான்கோழிகளை குறிப்பிட்ட அளவில் மட்டும் வைத்து, 300 வான்கோழிகளை விற்பனை செய்தோம். 15 கோழிகள், சண்டை மற்றும் வெப்பம் தாங்காமல் இறந்தன.இப்போது, 200 பெட்டை, 35 ஆண் வான்கோழிகள் உள்ளன. அத்துடன், 35 நிகோபாரி கோழிகளையும் வளர்த்து வருகிறோம்.வான் கோழிகள் எட்டு மாதத்தில், முட்டையிட ஆரம்பிக்கும். 30 மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு வான்கோழியிலிருந்து, ஆண்டுக்கு, 60 முட்டை கிடைக்கும். இந்த முட்டைகளுக்கு, விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கிறது.வான்கோழிகள் பொதுவாக அடை காப்பதில்லை என்பதால், 'இன்குபேட்டர்' கருவியில், முட்டைகளை வைத்து, குஞ்சுகளை வளர்க்க உள்ளோம். இரண்டாம் ஆண்டு கிடைக்கும் முட்டைகளுக்கு, குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக இருக்கும். எனவே, இந்த தாய்க்கோழிகளை, ஓராண்டு கழித்து, விற்பனை செய்து விடுவோம்.வான் கோழிகளுக்கு, 4 கிலோ சமச்சீர் உணவு கொடுத்தால், 1 கிலோ அதிகரிக்கும் என்பர். அதன்படி, தினமும் காலை, மக்காச்சோளம், தவிடு, அரிசி, கருவாட்டு துாளும்; மதியம், 'கோ-4, கோ5, சூப்பர் நேப்பியர்' மற்றும் அரைக்கீரை, பாலக்கீரை என, பசுந்தீவனங்களை கொடுக்கிறோம். மாலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவோம்.கொட்டகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும், தாகம் எடுக்கும் கோழிகள் தேவையான அளவு குடித்துக் கொள்ளும்.இறைச்சி மற்றும் முட்டை வாயிலாக, 2.49 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில், குஞ்சுகள் வாங்கியது, தீவனம், மருத்துவச் செலவு போக, 1.55 லட்ச ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இப்போது, எங்களிடம் இருக்கும் வான் கோழிகளின் மதிப்பு, கிட்டத்தட்ட, 3 லட்ச ரூபாய்க்கு இருக்கும். இன்னும் ஓராண்டில், இந்த வான்கோழிகள் மூலமாக முட்டைகள் கிடைக்கும். அதெல்லாம் அப்படியே லாபம் தான்.தொடர்புக்கு: 89394 39480

Read more...

செம்பருத்திப்பூவை சாகுபடி செய்து வருமானம் ஈட்டலாம்.

திங்கள், 3 டிசம்பர், 2018


மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன். அதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது. அதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும்.
தொடர்புக்கு: 99430 06666.

Read more...

வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி

புதன், 4 ஜூலை, 2018


வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டம், கடகுளம் கிராமத்தை சேர்ந்த டெல்சன்: 5 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் முருங்கை போட்டுள்ளேன். இயற்கை விவசாயம் செய்யும், 30 ஏக்கர் முருங்கைத் தோட்டங்களை, கடந்தாண்டு குத்தகை எடுத்து, கீரை பறித்தோம். இந்தாண்டு, குத்தகையின்றி, அதே தோட்டங்களில் இருந்து, 1 கிலோ கீரை, 15 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு ஈர்க்கு முருங்கை இலையை பறித்து, ஒரு மணி நேரம் வைத்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால், இலை உதிரக்கூடாது. பறித்த இலைகளை தண்ணீர் தெளித்து, பாலித்தீன் கவரில் வைத்து, ஐஸ் பாக்சில், 24 மணி நேரம் வைப்போம். அப்போதும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்க வேண்டும்.செடி முருங்கை கீரைகள், ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல; மர முருங்கை கீரை தான் பறிப்போம். பறித்த கீரைகளை பருத்தி துணியில் கட்டி, 'பேக்கிங்' கூடம் எடுத்து வருவோம். தார்பாலின் ஷீட்டில், தண்ணீர் தெளித்து கீரைகளை, அரை அடி உயரத்துக்கு அடுக்கி, லேசாக தண்ணீர் தெளிப்போம்.

அதன்பின், காய்ந்த மற்றும் பழுப்பு இலை, பூக்களை நீக்கி, 150 கிராம் அளவு, பாலித்தீன் கவருக்குள் வைத்து, ரப்பர் பேண்டு போடுவோம். அடுத்து, 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகளில், மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து, அதன் மேல் தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரித்து, 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதன் மேல் ஐஸ் கட்டி, 25 கீரை கட்டு, மூன்றாவது அடுக்காக, 10 கீரை கட்டு என, மேலேயும் ஐஸ் கட்டி வைத்து, ஒரு பெட்டியில், 60 கட்டு கீரை அடுக்குவோம்.
மாதத்தில், 10 நாட்கள் துபாய், எட்டு நாள் கத்தார், ஐந்து நாள் ஓமன், இரண்டு நாள், லண்டன் என, தினமும், 400 கிலோ முருங்கைக் கீரையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இவ்வாறு, 25 நாட்களில், 10 ஆயிரம் கிலோ முருங்கைக் கீரை ஏற்றுமதி வாயிலாக, நான்கு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கீரை கொள்முதல், பறிப்பு, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமான கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ்கட்டி, மின் கட்டணம் அனைத்தும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாய் செலவு போக, மாதம், 1.30 லட்சம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கேரள மாநிலம், கொச்சின் பேக் ஹவுசுக்கு போய், சுங்கத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நேரம், செலவு அதிகமாகிறது. 
தமிழகத்தின் விமான நிலைய பகுதிகளில், பேக் ஹவுசை கொண்டு வந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும்; ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் முடியும். அந்த வசதி கிடைத்தால், நானே, 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவு முருங்கைக்கீரைக்கு தேவையுள்ளது.

தொடர்புக்கு: 90806 60084.

Read more...

மதிப்புக் கூட்டல் தொழில்,

புதன், 20 ஜூன், 2018


மதிப்புக் கூட்டல் தொழில், அதற்கான பயிற்சி குறித்து கூறும், தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர், முனைவர், அனந்த ராமகிருஷ்ணன்: விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய கருவிகளை கண்டுபிடிப்பதுடன், தொழில் முனைவோருக்கு தேவையான மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்களையும், நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம். தொழில் முனைவர்களை விட விவசாயிகள், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டினால், நல்ல லாபம் பார்க்கலாம். மதிப்புக் கூட்டல் சம்பந்தமான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, ஒரு நாள் பயிற்சி நடத்துகிறோம். பல்வேறு கட்டணப் பயிற்சிகளும் இங்கு தரப்படுகின்றன. மேலும், மதிப்புக் கூட்டல் தொழிலை உடனே துவக்கும் வகை யில், பல நுட்பங்களை யும் சொல்லி தருகிறோம்.உதாரணமாக, தக்காளி விலை குறையும் போது, விவசாயிகள் பலர், சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். தக்காளி விலை குறையும்போது, எங்களிடம் தெரிவித்தால், விவசாயிகளுடைய இடத்திலேயே மிஷினை கொண்டு வந்து, மதிப்புக் கூட்டல் செய்து கொடுக்கிறோம். விவசாயிகள் எங்களிடம் பொருளை ஒப்படைத்தால், விற்பனையும் செய்து தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் மதிப்புக் கூட்டல் தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு, தொழில் துவங்க ஏற்பாடு செய்து தருகிறோம். அதிகபட்சமாக, 35 சதவீத மானியத்துடன், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற்றுத் தருகிறோம்.இவை தவிர, நாங்களே பொருளுக்கான சந்தை வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கிறோம். மதிப்புக் கூட்டலில் இன்று இருக்கும் சவால், சந்தை வாய்ப்பு தான். உதாரணமாக, பாலில் இருந்து, 15க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்ய முடியும். விவசாயிகளிடம் இருந்து வாங்கி, விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், மதிப்புக் கூட்டலில் முக்கியமானது தரம். அதை முழுமையாக கையாள்வதில் தான், மதிப்புக் கூட்டல் தொழிலின் வெற்றி ரகசியமே, அடங்கி இருக்கிறது. தொழில் முனைவருக்கான வாய்ப்புகளையும், உருவாக்கிக் கொடுக்கிறோம்.மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த, 2017 - 20ம் ஆண்டு வரை, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம், விளை பொருட்களைப் பாதுகாக்கும் குளிர்ப்பதன நிலையத்தை உருவாக்க, 40 சதவீத மானியமும், உணவைப் பதப்படுத்தும் தொழில்களுக்கு, 30 சதவீத மானியமும் வழங்கப்படும்.இதுபோன்ற திட்டங்கள், பயிற்சிகள் குறித்த விபரங்கள் தேவைப்படும் விவசாயிகளும், தொழில் முனைவோரும், எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகலாம்.தொடர்புக்கு: 94804 - 42807.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets