உங்கள் வருகைக்கு நன்றி

எங்க பள்ளிக்கூட வாத்தியார்

சனி, 10 மார்ச், 2012

மாதா, பிதா, குரு எனப் பெற்றோருக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படுகின்றனர் ஆசிரியர்கள். வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ள பலர், தங்கள் உயர்வுக்குக் காரணம் எனக் கூறித் தங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை நினைவுகூர்வதுண்டு.
எத்தனை வயதானாலும் நம்மில் பலருக்கு ஆசிரியர்களை நேரில் பார்த்தால் மரியாதை கலந்த பாச உணர்வு தோன்றும். சில விஷயங்களில் யார் சொல்லியும் கேட்காத பெற்றோர்கூட "பள்ளிக்கூட வாத்தியாரய்யா' சொன்னால் மறுபேச்சுப் பேச மாட்டார்கள். அந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மதிப்பு உள்ளது.

ஆனால், ஆசிரியர்கள் தண்டிப்பதால், கண்டிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் குறித்த சமீபகாலச் செய்திகள் கவலை அளிக்கின்றன.

ஆசிரியை அடித்ததால் கை பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் அடித்ததால் பார்வை இழந்த மாணவி, ஆசிரியை அடித்ததால் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட மாணவி, உடல் முழுவதும் பிரம்பால் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் என வெளியான செய்திகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
அண்மையில் திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் மூவர், பேருந்தில் ஏறிச் சென்று மதுரை அருகே திருமங்கலத்தில் இறங்கி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என வகுப்பில் ஆசிரியர் கண்டித்ததால் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்கக்கூட வழியில்லையா? ஆம், இப்போது நிலைமை அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் சிலர் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை அடித்து நொறுக்கும் இயல்பை இன்னும் கைவிட்டபாடில்லை.

பள்ளிகளில் மாணவரை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்கிற அரசின் தடை உத்தரவையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அரசுப் பள்ளிகளைவிடத்  தனியார் பள்ளிகளில் இந்த நிகழ்வுகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

எந்த ஆசிரியரும் மாணவரை வேண்டுமென்றே அடிப்பதில்லை. தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் செய்யாமல் வந்தாலோ, பள்ளிக்குத் தாமதமாக வந்தாலோதான் தண்டிக்கின்றனர்.

இருப்பினும், ஒரு வேகத்தில் ஆசிரியர் அடிக்கும்போது கண் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டுவிட்டால் அந்த மாணவரின் எதிர்காலமே பாழாகிவிடுகிறது.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் குறைந்த ஊதியத்திற்கு அனுபவம் குறைந்தவர்களை ஆசிரியர்களாக பணியில் அமர்த்துகின்றன. மாணவர்களை, குழந்தைகளை எப்படி கையாளுவது என்கிற பயிற்சி இல்லாத அந்த ஆசிரியர்கள், கோபத்தில் சிறு  குழந்தைகளுக்குக்கூடக் கடுமையான தண்டனைகளை அளிக்கின்றனர்.

கைவிரல்களை திருப்பிவைத்து அடிப்பது, பிரம்பைத் தூக்கி எறிவது, இருக்கை மீது மணிக்கணக்கில் நிற்கவைப்பது, வகுப்புக்கு வெளியே நிற்கவைப்பது, முழங்கால்போட்டு நிற்கச் செய்வது போன்ற தண்டனைகள் மாணவர்களை உடல்ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் துன்புறுத்துகின்றன.

சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ராணுவம் போன்று கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.

மாணவர்கள் சிறு தவறு செய்தாலும் பெரிய தண்டனைகளை அப் பள்ளி ஆசிரியர்கள் அளிக்கின்றனர். அது மாணவர்களுக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
மேலும், இக் கால மாணவர்களும் சரி, குழந்தைகளும் சரி, எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக உள்ளனர். தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளும், கணினியில் புகுத்தப்பட்டுள்ள வன்முறை விளையாட்டுகளும் அவர்களை அப்படி ஆக்கிவிட்டன.

ஆசிரியர் கண்டிப்பதோ, தண்டிப்பதோ நம் நன்மைக்குதானே என்கிற எண்ணம் எல்லா மாணவர்களுக்கும் ஏற்படுவதில்லை. மாறாக, தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக  நினைக்கின்றனர். இதன் விளைவுதான் மாணவர்கள் சிலர் எடுக்கும் விபரீத முடிவு.

மாணவர்களை சிறந்த குடிமகனாக உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்குதான் உள்ளது.

மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள்தான் இருக்க முடியும். மாணவர்கள் எத்தகைய தவறு செய்தாலும், தண்டனையைக் கைவிட்டு அன்பால், அறிவுரையால் அவர்களைத் திருத்திவிட முடியும். ஆசிரியர்-மாணவர் உறவு அன்பினால், மரியாதையால் பிணைக்கப்பட்டது. அதில்  தண்டனைக்கு இடம் கூடாது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets