ஆண், பெண் பேதமில்லாமல் மரணமடையும் விகிதம் அதிகரித்துள்ளது !
செவ்வாய், 6 மார்ச், 2012
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பலரிடம் மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்கு முன்னதாக நெஞ்சு வலி ஏற்பட்டதே இல்லை என்று கூறியுள்ளனர். இதில் இருந்து, நெஞ்சு வலி ஏற்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்பதோ, இதுவரை நெஞ்சு வலியே வந்ததில்லை என்று கூறுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்பதோ உறுதியில்லை என்பது தெளிவாகிறது.
ப்ளோரிடா நெஞ்சக மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 42% பெண்களும், 30.7% ஆண்களும், இதுவரை தங்களுக்கு நெஞ்சு வலி வந்ததே இல்லை என்று கூறியுள்ளனர்.
இதய நோய் நிபுணர் அஸ்வின் மேதா கூறுகையில், இந்தியாவில் 20 முதல் 30 சதவீத பேருக்கு வலியே இல்லாத மாரடைப்பு ஏற்படுகிறது. மயக்கமடைந்து விழுதல், பலவீனமாவது போன்ற காரணங்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பரிசோதித்துப் பார்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இருப்பவர்களுக்கு வலியற்ற மாரடைப்பு ஏற்படுவதும் உண்டு. வலியற்ற மாரடைப்பு ஏற்படுவதால், அவர்களுக்கு சரியான மருத்துவம் உடனடியாக கிடைக்க வாய்ப்பு குறைகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என்றார்.
மேலும், இதய நோய் பேராசிரியர் அனில் குமார் கூறுகையில், உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவும் உள்ளவர்களுக்கு லேசான மயக்கம், பலவீனமாக உணர்தல் போன்றவை ஏற்பட்டால் கூட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். இவர்களுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், 1980களில் மாரடைப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் வியாதியாக இருந்தது. அதனால், இதய நோய் குறித்த ஆய்வுகள் அனைத்தும் ஆண்களை மையப்படுத்தியே செய்யப்பட்டன. ஆனால் தற்போது ஆண், பெண் பேதமில்லாமல் மாரடைப்பால் மரணமடையும் விகிதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.