உங்கள் வருகைக்கு நன்றி

பெற்றோறே, மாணவ, மாணவிகளே இது உங்களுக்குத்தான்

சனி, 24 மார்ச், 2012

கொட்டிக் கிடக்குது கோடி வாய்ப்புகள்

பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் டாக்டர், என்ஜினீயர் ஆக வழிவகுக்கும் மருத்துவம், பொறியியல் படிப்பை மட்டுமே தங்களது உயர் கல்வி நோக்கமாகக் கருதுகின்றனர். இதையும் கடந்து என்னென்ன உயர் கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பதை பலரும் தீவிரமாக ஆய்வு செய்வதில்லை. பெற்றோர்களும் இந்த மாயையிலிருந்து விடுபட்டு விருப்பமான துறைகளைப் பிள்ளைகள் தேர்வு செய்ய அனுமதிப்பதில்லை. இதர துறைகளில் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கக் கூடிய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இது குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் சென்னையில் உள்ள "டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்" கல்வி ஆலோசனை மையத்தின் தலைமை நிர்வாக அலுவலர் தா. நெடுஞ்செழியன்.

பிளஸ் 2-வுக்குப் பின் மாணவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப படிக்கும் வகையில், அகில இந்திய அளவிலான எண்ணற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதில்லை. அகில இந்திய அளவில் இப்போது, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட கல்வி வாரியங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வி வாரியங்களில் அந்த மாநில மொழி வழியிலும் (மீடியம்) மாணவர்கள் பயிலுவதால், இவர்கள் பிளஸ் 2 தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை ஒரே தர வரிசையில் ஒப்பிட இயலாது. இதனால், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் நடத்தும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்கின்றனர்.

ஒரு மாணவரின் தனித் திறமையை ஒரே ஒரு தேர்வின் மூலம் மட்டுமே துல்லியமாக மதிப்பிட முடியாது. தேர்வு எழுதும் போது 3 மணி நேரத்துக்குள் மாணவரின் நினைவுத் திறன் எப்படி அமையும் என்பதை உறுதியாகக் கணிக்க இயலாது. பெற்றோர்கள் அல்லது குடும்பச் சூழலின் காரணமாக ஒருவித மன அழுத்தத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேர்வை சரியாக எழுத இயலாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற மன அழுத்தம் ஏதும் இல்லாத நிலையில், இதே மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்று உயர் கல்வி வாய்ப்புகளை எளிதாகப் பெற முடியும். அனைத்து மாணவர்களுக்குமே 7 வகையான பன்முக அறிவுத் திறன்கள் உள்ளன. அதாவது மொழியறிவு, எண்ணறிவு, இசையறிவு, உடல் திறனறிவு, காட்சி-வடிவியல் அறிவு, தொடர்புத் திறன், தன்னறிவு உள்ளிட்ட பன்முகத் திறன்கள் மாணவர்களிடம் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஓரிரு திறன்களைத் தங்களது குழந்தைகளிடம் கண்டறிந்து அத்திறன்கள் வளரும் வகையில் பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கின்றனர். எனினும், மாணவர்களின் இதர திறன்கள் அவர்களிடம் உறங்கிக் கிடக்கும். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் வாழ்வில் இந்தத் திறமைகள் தாமாகவே வெளிப்படும். அப்போது, மாணவர்கள் சுடர்விட்டு பிரகாசிக்கக் கூடும்" என்கிறார் உலகின் தலைசிறந்த ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்வர்ட் கார்ட்னர். இது நமது மாணவர்களுக்கும் பொருந்தும்.
பொதுவாக பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மாணவர்களுக்கு அவர்களின் திறன்களைக் கண்டறிந்து, விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுக்க யாரேனும் வழிகாட்டினால் அந்தத் துறைகளில் மிகச் சிறந்த வல்லுநர்களாக முத்திரை பதிக்க முடியும். கல்லூரி பருவத்தில்தான் மாணவர்களின் சிந்தனை, ஆராய்ச்சி, தனித் தன்மை, மனித வள மேம்பாடு ஆகியவற்றில் முழுத் திறன் பெற முடியும். இதுவே, மாணவர்களின் இனிய, வளமான வாழ்வுக்கு அடித்தளமாகிறது. மாணவர்களின் திறன்களை வளர்த்து, அரங்கேறச் செய்யும் மேடையாக கல்லூரிகள் அமைய வேண்டும். அத்தகைய கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர்களும் அவர்களுக்கு உதவ வேண்டும்.

ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் படிப்புகள்:
உயர் கல்வி வாய்ப்புகளைச் சிறப்பாகத் தேர்வு செய்வதன் மூலம் மட்டுமே உன்னதமான வாழ்வுக்கு வழி வகுக்க முடியும். கைநிறையச் சம்பாதிக்க வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக வடிவமைப்பு (டிசைனிங்) துறையில், ஆடைகள், பொருள்கள், அனிமேஷன் திரைப்படம், கிராபிக்ஸ், கண்காட்சி, செராமிக்-கண்ணாடி, பொம்மை, ஆட்ட மொபைல்ஸ், அப்பேரல், பர்னிச்சர் டிசைன் என்று வேலைவாய்ப்பு மிகுந்த பல்வேறு படிப்புகள் உள்ளன. பொருள்கள் உள்ளிட்ட எந்த சாதனத்தையும், கருவியையும் சிறப்பாக வடிவமைத்து சந்தையில் பெரிய வரவேற்பு கிடைத்தால், பெருமளவு சம்பாதிக்க முடியும். தங்களது சிறந்த வடிவமைப்புகளுக்கு, பேட்டன்ட் உரிமையைப் பெறலாம். இதற்கு தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்.ஐ.டி.) உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களை அணுகலாம்.

உலக அரங்கில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுத் துறையில் இந்தியா வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதே போல கட்டட வடிவமைப்பு (ஆர்கிடெக்சர்) துறையிலும் முன்னணியில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தத் துறையில் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர், தியாகராயர் பொறியியல் கல்லூரி ( மதுரை-திருப்பரங்குன்றம்), தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (திருச்சி) ஆகியவை மிகச் சிறந்து விளங்குகின்றன. பிரமாண்டமான பல்நோக்கு வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு அரங்குகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுடன் கூடிய நகரியங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய போக்குவரத்து வளாகங்கள் அனைத்தும் இந்தத் துறையின் (ஆர்க்கிடெக்சர்) நிபுணர்களின் கைவண்ணத்தில் உருவாகின்றன. பொறியியல் துறையில் அதிகமாக அறியப்படாத பல பிரகாசமான படிப்புகள் உள்ளன. இதன் விவரம்: புவி தகவலியல் (ஜியோ இன்ஃபர்மேட் டிக்ஸ்), ரப்பர்-பிளாஸ்டிக் பொறியியல், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பெட்ரோலிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருந்து தொழில்நுட்பம், விவசாயம்-பாசன பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், மெட்டீரியல் சயின்ஸ் என்ஜினியரிங், உற்பத்தி பொறியியல் (புரொடக்ஷன் என்ஜினியரிங்), தயாரிப்பு பொறியியல் (மேனுஃபேக்சர் என்ஜினியரிங்). இவற்றை தேர்வு செய்வதின் மூலம் வளமான எதிர்காலத்தை மாணவர்கள் எட்டாலாம்.

மதிப்பெண்கள் குறைந்தாலும் மங்காத வாய்ப்புகள்: உயிரியல் பாடத்தை எடுத்துப் படித்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும் பரவாயில்லை. அவர்கள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெறலாம். இதன் விவரம்: அனஸ்தீசியா டெக்னீசியன் (மயக்கமருந்து தொழில்நுட்ப பணியாளர்)., இ.சி.ஜி. டெக்னீசியன், எமர்ஜென்சி கேர் டெக்னீசியன், டயாலிசிஸ் டெக்னீசியன், ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னீசியன், அறுவை சிகிச்சைக்கூடம் தொழில்நுட்ப பணியாளர், முடநீக்கியல் பிரிவு தொழில்நுட்ப பணியாளர், மருந்தக ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டயப் படிப்பு உள்ளிட்டவை அவை இந்தப் படிப்புகளை முடித்து மருத்துவமனைகளில் உடனடியாக வேலை வாய்ப்பையும் பெறலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான பின்னர் இப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம்.
வேலை வாய்ப்பை அள்ளித் தரும் வேளாண்மைத் துறை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பின்வரும் பி.டெக். படிப்புகளில் சேருவோருக்கு உத்தரவாதம் அளிக்கும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் விவரம்: வேளாண் பொறியியல், வேளாண் உயிரி தகவலியல், உணவு பதப்படுத்துதல் பொறியியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம், வேளாண் உயிரி தொழில்நுட்பம், வேளாண் தொழில் வணிக நிர்வாகம், சக்தி-சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் பி.டெக் படிப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால் போதும். வேலைவாய்ப்பு உங்கள் வீடுதேடி வரும்.
போட்டிகள் குறைந்த அறிவியல் பட்டப் படிப்புகள்: நாடு முழுவதும் பொறியியல், மருத்துவப் படிப்புகள் மீதான மோகம் குறையவில்லை. இதனால், பி.எஸ்சி., உள்ளிட்ட அறிவியல் இளநிலை பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பி.எஸ்சி பட்டப் படிப்பில் சிறப்பிடம் பெற்றால் அனைத்து ஐ.ஐ.டிக்களிலும் போஸ்ட் பி.எஸ்.சி. படிப்புகளில் சேரலாம் மேலும் எம்.எஸ்சி மற்றும் பி.ஹெச்.டி ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால படிப்பில் சேரலாம். இதற்கு போட்டி அதிகம் இராது. பி.எஸ்சி (இயற்பியல்) படிப்பில் சிற்ப்பாகத் தேர்ச்சி பெற்றால், பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்சி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ், சென்னை கணித நிறுவனம் ஆகியவற்றில் உயர் கல்வித் துறையில் அரிய வாய்ப்புகளை பெற முடியும்.

மாணவர்கள் திறன்களை வளர்த்து, அரங்கேற்றச் செய்யும் மேடையாக கல்லூரிகள் அமைய வேண்டும். அத்தகைய கல்லூரிகளை மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு, அனுபவம் பெறும் வகையிலாவது அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்கள் எழுதித் திறன் பெற வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கடிதம் கிடைத்தவுடன், உங்களுக்கு அதிக விருப்பமான, எதிர்கால நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் படிப்புகளைத் தேர்வு செய்தால் மட்டும் போதாது. தரமான கல்வி நிறுவனத்தையும் தேர்வு செய்வதால்தான் உங்கள் வாழ்வை மலரச் செய்யும் தரமான கல்வி வாய்ப்புகளைப் பெறலாம். (தினமணி)
மேலும் விவரங்களை அறிய இணையதள முகவரி:
www.indiacollegefinder.com
www.indiacollegefinder.org
044-4230 3300, 4230 3344

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets