எல்லாருக்கும் எப்போதும் டென்ஷன்,டென்ஷன்.
வியாழன், 1 மார்ச், 2012
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறுகச் சிறுக குருவி சேர்க்கிற மாதிரி சேமித்து வைப்பது எதற்காக? தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தானே? ஆனால் சேர்த்து வைத்த பணம் எல்லாம், ஏதோ ஒரு நோய் வந்து அதற்கு மருத்துவம் பார்ப்பதற்காகச் செலவழிந்து போகிறது என்றால்?... அப்படியானால் இவ்வளவு நாட்கள் பட்ட துன்பத்துக்குப் பொருளே இல்லையா?
இப்போதுள்ள மருத்துவச் செலவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தால், இந்தக் கேள்வி ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எழுவதைத் தவிர்க்கவே முடியாது.
அதிலும் சிறுநீரகத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு வாரத்துக்கு இருமுறையோ, மூன்று முறையோ டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால்...
பொதுவாக ஒருமுறை டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 2,500 ரூபாய் ஆகும். வாரத்தில் இரண்டு நாட்கள் என்றால் ஐந்தாயிரம் ஆகும். மாதத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஏழைகளால் இப்படிச் செலவு செய்ய முடியுமா? இல்லை மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்குபவரால் கூட முடியுமா?
அப்படியானால் என்ன செய்வது? நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க வேண்டியதுதானா? என்று கலங்குபவர்களுக்கு ஆறுதல் கரம் நீட்டி அரவணைக்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்.
ஒருமுறை டயாலிஸிஸ் செய்வதற்கு வெறும் 500 ரூபாயை மட்டுமே கட்டணமாக வாங்கி,பெரும் சமூகப் பணி ஆற்றி வருகிறது அது.
இந்த டயாலிஸிஸ் சென்டரை நடத்தி வரும் "நந்தலாலா மெடிகல் பவுண்டேஷனின்' மூல ஊற்று "நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை'. அந்த அறக்கட்டளை உறுப்பினரான லலிதா பாலசந்தர்.
தெற்காசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக இந்தியாவில்தான் சர்க்கரை வியாதி அதிகம். நமது வாழ்க்கைமுறை, உணவுமுறை மாறிவிட்டதே இதற்குக் காரணம். இயந்திரத்தனமான மனித வாழ்க்கையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் எப்போதும் டென்ஷன்... டென்ஷன். இதுவே சர்க்கரை வியாதி அதிகம் வரக் காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை வியாதி வந்தால், உடலின் பிற உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதயம், சிறுநீரகம் போன்றவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விட்டால் மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும். மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு அதிகச் செலவு ஆகும். மேலும் பொருத்தமான மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பதும் சிரமம். இந்தச் சூழ்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வாழ வேண்டுமானால், வாரத்துக்கு இருமுறையோ அல்லது மூன்று முறையோ டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நமது நாடு ஏழைகள் அதிகம் உள்ள நாடு. டயாலிஸிஸ் செய்து கொள்வதற்கோ அதிகம் செலவாகும். அப்படியானால் ஏழைகள் என்ன செய்வார்கள்? மேலை நாடுகளில் அங்குள்ள அரசுகளே இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்தி, ஏழைகளும் குறைந்த செலவில் டயாலிஸிஸ் செய்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன. ஆனால் நம்நாட்டில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார் நந்தலாலா சேவா சமிதியின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ மதிஒளி ஆர். சரஸ்வதி. அவருடைய முயற்சியால் உருவானதுதான் ஏழைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் டயாலிஸிஸ் செய்யும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்.
2005 ஆம் ஆண்டு வெறும் ஆறு டயாலிஸிஸ் செய்யும் இயந்திரங்களுடன் இந்த சென்டர் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இல் மேலும் மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இப்போது ஆண்டுக்கு சுமார் 5,400 பேருக்கு டயாலிஸிஸ் செய்யும் அளவுக்கு இது திறன் கொண்டதாக இருக்கிறது.
டயாலிஸிஸ் செய்து கொள்ளும்போது தேவைப்படும் பொருட்களை வாங்க இங்கே கட்டணம் எதுவும் வாங்கப்படுவதில்லை.
சிலநேரங்களில் இயந்திரப் பழுது காரணமாக ஒருவேளை டயாலிஸிஸ் பாதியில் நின்றால் அதற்குக் கட்டணம் வாங்குவதில்லை. முழுமையாக டயாலிஸிஸ் செய்தால் மட்டுமே இந்தக் குறைந்த கட்டணத்தை வாங்குகிறோம். பிற டயாலிஸிஸ் செய்யும் இடங்களில் இந்த நடைமுறை இல்லை. ஒரு மணி நேரம் டயாலிஸிஸ் செய்தாலும் முழுக்கட்டணத்தையும் வசூலித்துவிடுவார்கள்.
இந்த டயாலிஸிஸ் சென்டரை நடத்துவதால் மாதம் ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. எங்களுடைய சேவையைத் தெரிந்து கொண்டு உதவும் நல்ல மனமுடைய பலரின் உதவியாலும் ஒத்துழைப்பாலும்தான் இந்த இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. தொடர்ந்து செயல்பட முடிகிறது. மேலும் ஒவ்வோராண்டும் நன்கொடை திரட்டுவதற்காக கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். நந்தலாலா மெடிகல் பவுண்டேஷனில் பல தொண்டுள்ளம் உள்ள மருத்துவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். இந்த டயாலிஸிஸ் சென்டரை டாக்டர் ஆர்.வெங்கட்ராமன் கவனித்துக் கொள்கிறார்.
நந்தலாலா மெடிகல் பவுண்டேஷன் இந்த டயாலிஸிஸ் சென்டரை மட்டுமல்ல, பல மருத்துவப் பணிகளையும் செய்து வருகிறது. திண்டிவனம் அருகில் மாம்பட்டு எனும் கிராமத்தில் உள்ள 600 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச மருத்துவமுகாம் நடத்தி வருகிறது.
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பாகவும், எலும்புத் தேய்வு நோய் தொடர்பாகவும் விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறது'' என்ற அவரிடம், இங்கு டயாலிஸிஸ் செய்து கொள்ள வருகிறவர்களை ஏழைகள் என்று எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.
அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. டாக்டர்கள் பலரும் சொல்லித்தான் டயாலிஸிஸýக்காக இங்கே வருகிறார்கள். டாக்டர்கள் நோயாளிகளைப் பற்றி விசாரிக்காமல் இங்கே அனுப்பமாட்டார்கள். மேலும் ஒருவரிடம் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாலே அவர்களைப் பற்றித் தெரிந்துவிடும்'' என்கிறார் சிரித்துக் கொண்டே லலிதா பாலசந்தர்.
நன்றி - தினமணி