உங்கள் வருகைக்கு நன்றி

உங்களிடம் இந்த நோய் இருந்தால் உடனே கட்டுப்படுத்துங்கள்

செவ்வாய், 6 மார்ச், 2012

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 

1.       இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:  கோபம் ஷைத்தானிடமிருந்துள்ளது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரால்தான் அணைக்கப்படும். எனவே உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்தால் அவர் உளுச் செய்யட்டும்.(அபூதாவூத்,அஹ்மத்)

2.       அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், உங்களில் ஒருவருக்கு அவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து விடட்டும். கோபம் அகன்றுவிட்டால் சரி. இல்லாவிடில் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். (அஹ்மத்)

3.       அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும் கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 


4.       அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்

5.       நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

6.       நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உங்களிடம் இந்த நோய் இருந்தால் உடனே கட்டுப்படுத்துங்கள்

ஒருவனை குற்றவாளியாக்குவது எது என்று கேட்டால் சூழ்நிலை, வறுமை, வன்முறை   என பல விஷயங்களைக் கூறலாம். ஆனால் இதன் காரணமாக ஏற்படும் கோபமே ஒவ்வொரு குற்றவாளிகளையும் உருவாக்குகிறது என்பதுதான் உண்மை. உடலில் இருக்கும் பல நோய்கள் நம் உடலை மட்டுமே பாதிக்கும். ஆனால் நமது கோபமோ உறவுகளையும் சேர்த்து பாதித்துவிடும்.
நாம் கட்டுப்படுத்த வேண்டிய மிக முக்கிய நோயாக கோபம்தான் உள்ளது. அதனை கட்டுப்படுத்தினால், பல நோய்கள் தானாகவே கட்டுப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு மனிதனால் எப்போதுமே சிரித்துக் கொண்டு இருக்க முடியாது. அவ்வப்போது நாம் எதிர்பாராத வகையில், நமக்கு பிடிக்காத பேச்சு அல்லது செயல் வெளிப்படும் போது நமக்கு கோபம் வரும். கோபப்படாமல் இருந்தால் ஒரு மனிதனை மனிதனாகக் கூட மதிக்க மாட்டார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு அளவிலேயே இருக்க வேண்டும். அதிகமான கோபம் நமக்குள்ள மதிப்பையேக் கெடுத்து விடும். உடலை வெகுவாக பாதிக்கும். குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும்.
கோபத்தை அளவிட முடியுமா என்று கேட்கலாம்.. நிச்சயமாக.. ஒரு சின்ன செயலுக்கு இரண்டு வார்த்தைகளில் கோபமாக பேசிவிட்டு, பிறகு அதனை சரி படுத்தும் வார்த்தைகளுக்குச் சென்றுவிட வேண்டும். ஆனால் அதை விடாமல், தொடர்ந்து கோபமாகப் பேசுவதால், தவறு செய்தவருக்கு வருத்தம் உண்டாவதற்கு பதிலாக உங்கள் மீது வெறுப்புத்தான் உண்டாகும்.
எதையும் பொறுமையாகவும், நிதானமாகவும் செய்தால் தவறு ஏற்படாது. மற்றவரை கனிவாக எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டால் நம்மை கோப நோய் தாக்கவே முடியாது. தவறு நடந்து விட்டது என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காமல், பொறுமையாக அது எவ்வாறு நடந்தது என்று கண்டறிந்து அதனை சரி செய்யும் வழியைக் காண வேண்டும்.
தற்போதைய அவசர உலகத்தில் யாருக்குமே எதற்குமே பொறுமை இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் பலருக்கும் தற்போது அதிகமாக கோபம் உண்டாகிறது. நாம் எண்ணிய வேலை எண்ணிய நேரத்திற்குள் ஆகவில்லை என்ற இயலாமை காரணமாக மற்றவர்கள் மீது எரிந்து விழுவது, தனது குற்றத்தை மற்றொருவர் மீது போடுவது போன்ற குணங்கள் அதிகரித்துவிட்டது.
இவை அனைத்துமே நமது தன்னம்பிக்கையை குறைத்து குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திவிடும். எனவே, கோப நோயைக் கட்டுப்படுத்த உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள், நிதானமாக முடிவெடுங்கள், அதிகாலையில் எழுந்து உங்கள் பணிகளை துவக்குங்கள், திட்டமிட்டு செயல்படுங்கள். அவ்வப்போது கோபத்தை குறைக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். கொப்பளிக்கின்ற கோபத்தை மென்று விழுங்கிவிட்டால் ஏற்படுகின்ற சந்தோஷத்திற்கு நிகர் ஒன்றும் இருக்க முடியாது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets