உங்கள் வருகைக்கு நன்றி

தினமும் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் ?

வியாழன், 1 மார்ச், 2012

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம் போன்ற எத்தனையோ பிரச்சினைகள் வரும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வருகிற நிலையில், தற்போது நினைவாற்றல் குறையும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது.
பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் குறைபாடு, அதிகமாக அல்லது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு குறைந்த வயதிலேயே அல்லது விரைவிலேயே வந்து விடுகிறது என்று அந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அவர்களை மூன்று பிரிவாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு குறிப்பிட்ட கலோரி உணவுகள் கொடுத்து அவர்களது நினைவாற்றலை தொடர்ந்து ஓராண்டுகளாக கண்காணித்து வந்ததன் அடிப்படையில் இந்த விஷயம் வெளியாகியுள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களிடம், நினைவுப்படுத்தி கூறும் வகையிலான கேள்விகள் கேட்டும், அவர்களது மூளையை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தும் இந்த ஆய்வு சில விஷயங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
குறைவான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்பவர்களின் நினைவாற்றலை விட, அதிக கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்பவர்களின் நினைவாற்றல் மிகக் குறைவாக இருந்துள்ளது. தினமும் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை நிச்சயமாக ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக வயதில் பெரியவர்கள், தங்களது உணவை சீரான அளவில் வைத்துக் கொள்ள வேண்டியதும், எடுத்துக் கொள்ளும் கலோரிகள் குறித்து அறிந்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. 
  1. நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
  2. வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
  3. பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்
  4. அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.
  5. அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
  6. ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
  7. சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
  8. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
  9. மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets