சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில்!
புதன், 7 மார்ச், 2012
மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ். அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த நான் 13 வயதில் பிழைப்பு தேடி கோவை வந்தேன். ஓட்டல்களில் பல்வேறு வேலைகளை செய்து, பிறகு சமையல் மாஸ்டர் ஆனேன். பிறகு கோவையில் சமோசா தயாரிப்பவர்களிடம் தினசரி ஆயிரம் சமோசாக்களை மொத்தமாக வாங்கி சூலூரில் உள்ள கடைகளில் 3 ஆண்டு விற்றேன். அதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. பின்னர் சமோசா தயாரிக்கும் தொழிலை ரூ.10 ஆயிரத்தில் துவக்கினேன். 10 ஆண்டாக சமோசா தயாரித்து வருகிறேன்.
நானும் எனது மனைவியும் தினசரி 2 ஆயிரம் சமோசா தயாரிக்கிறோம். ஆயிரம் சமோசாவை நேரில் கடைகளுக்கு கொண்டுசென்று விற்கிறேன். மீதி ஆயிரத்தை சிறு வியாபாரிகளுக்கு விற்று விடுகிறேன். எங்களை தவிர சூலூரில் மேலும் ஒருவர் 2 ஆயிரம் சமோசா தயாரித்து சப்ளை செய்கிறார். அந்தளவுக்கு சமோசா தேவை இருக்கிறது. இதுபோல் எல்லா ஊரிலும் சமோசாவுக்கு கிராக்கி உள்ளது. சமோசா தொழிலில் தயாரித்து சப்ளை செய்வது, அதற்குரிய பணத்தை வசூல் செய்வது என வேலைகள் இருக்கும். தரம், சுவை இரு ந்தால் நாம் சப்ளை செய்யும் சமோசாவுக்கு கிராக்கி இருக்கும். டீ கடை, பேக்கரி உரிமையாளர்கள் தேடி வந்து வாங்குவர். சமோசாவுக்கு முக்கிய மூலப்பொருளான வெங்காய விலை கிலோ ரூ.10க்குள் இருந்தால் உற்பத்தி செலவு கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு துண்டுகள் பயன்படுத்தலாம். சுவை மாறுபடுவதால் வாடிக்கையாளர் களுக்கும் அது பிடிக்கும். சமோசா விற்பனை இல்லாத ஊர்களில் நாமே கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
கட்டமைப்பு, முதலீடு
சமையலறை போதுமானது. கடலைத்தோல் அல்லது மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு (ரூ.10 ஆயிரம்). மாவு தேய்க்கும் கடப்பா கல் மேடை, மற்ற உபயோகத்திற்கு ஒரு டேபிள் (தலா ரூ.1000 வீதம் ரூ.2 ஆயிரம்), இரும்பிலான வடை சட்டி 1 ( ரூ.1,800), இரும்பிலான வடை கரண்டி 1 (ரூ.150), எண்ணெய் வடிகட்டி சட்டி 2 (ரூ.400), பாலிதீன் விரிப்பு 1 (ரூ.100), சிறிய கத்தி 2 (ரூ.60), பெரிய கத்தி 1 (ரூ.250), அட்டை பெட்டிகள் 4 (ரூ.40). சப்பாத்தி தேய்க்கும் கட்டை 1 ரூ.50, சப்பாத்தி சுடும் தோசை கல் 1 ரூ.550. மொத்தம் ரூ.15,400 ஆயிரம் தேவை.
ரெடிமேடாக அடுப்பு உள்ளது. அல்லது அதை கட்டி கொடுப்பவர்களும் உள்ளனர். மரத்தூள், கடலை தோல் ஆகியவற்றை எல்லா ஊரிலும் சப்ளை செய்பவர்கள் உள்ளனர். இதர பொருட்களை ஹார்டுவேர்ஸ், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வாங்கி கொள்ளலாம்.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): : 2 ஆயிரம் சமோசா தயாரிக்க 25 கிலோ மைதா மாவு ரூ.540, கல் உப்பு முக்கால் கிலோ ரூ.3, சமையல் எண்ணெய் 8 லிட்டர் ரூ.480, பெரிய வெங்காயம் 25 கிலோ ரூ.250, மிளகாய் பொடி 250 கிராம் ரூ.40, கடலை தோல் அல்லது மரத்தூள் அரை மூட்டை ரூ.50. மின்கட்டணம் ரூ.5, இட வாடகை ரூ.35, வாகன பெட்ரோல் செலவு ரூ.70, இதர செலவுகள் ரூ.100, 2 நபர் கூலி தலா ரூ.250 வீதம் ரூ.500 என ஒரு நாளைக்கு ரூ.2,073.
வருவாய் (ஒரு நாளைக்கு) : டீ கடை மற்றும் பேக்கரிகளுக்கு ஒரு சமோசா ரூ.1.50க்கு விற்கப்படுகிறது. உற்பத்தி செய்பவர் நேரில் கடைகளுக்கு விற்பனை செய்தால் 2 ஆயிரம் சமோசா ரூ.1.50 வீதம் வருவாய் ரூ.3 ஆயிரம். ஒரு நாள் உற்பத்தி செலவு போக லாபம் ரூ.927. சிறு வியாபாரிகளுக்கு விற்றால் ஒரு சமோசா ரூ.1.20க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு வருவாய் ரூ.2,400. லாபம் ரூ.327. இதில் நேரில் விற்பது கூடுதல் லாபத்தை தரக்கூடியது. கூலியாட்களை வைத்து சப்ளை செய்து கூடுதல் லாபத்தை சம்பாதிக்கலாம். சமோசாவில் சற்று பெரிய அளவில் தயாரித்தால் ரூ.2க்கு விற்கலாம். சமோசா பெரிய அளவாக இருந்தால் உற்பத்தி எண்ணிக்கை குறையும். லாபம் குறையாது.
சந்தை வாய்ப்பு : வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை. இதனால் டீ கடை மற்றும் பேக்கரி கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை. வெளியே யாராவது தயாரித்து கொடுத்தால் அதை ரூ.1.50க்கு வாங்கி ரூ.2 முதல் ரூ.2.50 வரை விற்கிறார்கள். சமோசாவிற்கு 50 காசு முதல் ரூ.1 வரை அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் தரமாக, சுவையாக சப்ளை செய்பவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.
தயாரிப்பது எப்படி?
மைதா மாவு 25 கிலோவுக்கு 15 லிட்டர் தண்ணீர், அரை கிலோ உப்பு சேர்த்து பிசைய வேண்டும். மாவை மொத்தமாக திரட்டி எண்ணெய் தடவி, கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவை 80 சிறு, சிறு உருண்டையாக்க வேண்டும். அதை சப்பாத்தி கட்டையால் ஒன்றரை அடி அகலத்துக்கு வட்டமாக மெல்லிதாக தேய்க்க வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். ஒட்டாமல் இருக்க, ஒவ்வொன்றின் மீதும் எண்ணெய் தடவி அடுக்க வேண்டும். இவ்வாறு அடுக்கப்பட்ட 10 வட்டத்தை ஒன்றாக அடுக்கி ஒரு தேய்ப்பு தேய்த்து, பெரிய கல்லில் சுட வேண்டும். அடிப்புறம் வெந்ததும் திருப்பி போட வேண்டும். மேல்புறம் வெந்த பகுதியை தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதற்குள் கீழ்புறம் வெந்துவிடும். அதை புரட்டி போட்டு, பிரித்து எடுக்க வேண்டும். இப்படியே 10 வட்டத்தையும் பிரித்தெடுத்த பின், மீண்டும் ஒன்றாக அடுக்கி, ஒரு சமோசாவுக்கு தேவையான அளவுக்கு (சுமார் 5க்கு2 இஞ்ச் நீள அகலம்) பெரிய கத்தியால் வெட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 80 உருண்டையையும் தேய்த்து சுட்டு எடுத்து, அடுக்கி வெட்டினால் 2 ஆயிரம் துண்டுகள் கிடைக்கும். அதை தனித்தனியாக முக்கோண வடிவில் சுருட்ட வேண்டும். திறப்பிற்குள் உப்பு, மிளகாய்தூள், நறுக்கிய வெங்காய கலவையை போட்டு மூடி, கரைத்து வைத்த மைதா மாவை பசை போல தடவி ஒட்ட வேண்டும். எண்ணெய் சட்டியில் 100 முதல் 150 எண்ணிக்கையிலான சமோசாவை ஒரு நேரத்தில் போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் சமோசா தயார்.