உங்கள் வருகைக்கு நன்றி

கல்வியால் மட்டுமே மாற்றம் வரும்:

திங்கள், 26 மார்ச், 2012

கல்வியால் மட்டுமே மாற்றம் வரும்:
வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி உதவி செய்யும், "நம்மவர்கள்' அமைப்பின் உறுப்பினர் ஜான் ராஜா: வறுமையான சூழலில் வளர்ந்தாலும், படித்து, இன்று நல்ல நிலையில்   இருக்கிறேன். ஏழ்மையில் உள்ள மாணவர்கள் படிக்க, உதவ வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இதை நண்பர்களிடம் கூறினால், என்ன சொல்வார்கள் என்று தயங்கினேன். என் நண்பர்கள் பலரும், இதே எண்ணத்தில் இருப்பது, பிறகு தான் தெரிந்தது. முதலில், 10 பேர் சேர்ந்து, ஆளுக்கு 100 ரூபாய் வீதம், ஆயிரம் ரூபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு, நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தோம். மன நிறைவான அந்த நாள், உற்சாகத்தையும், நிம்மதியையும் தந்தது. எங்களின் இந்தப் பணியை, சிலர் வெளிப்படையாகவே ஏளனம் செய்தனர். அதை, நாங்கள் பொருட்படுத்தவில்லை. இன்று, பல நிறுவனங்களில் பணிபுரியும், 86 பேர் நம்மவர்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, நான் உட்பட யாருக்கும் எந்தப் பதவியும் இல்லை. வட சென்னைப் பகுதியில், நன்றாகப் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள,15 மாணவர்களைத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் என்ன படிக்க விரும்பினாலும், அதற்கான முழுச் செலவையும், எங்கள் அமைப்பு ஏற்றுக் கொள்ளும். உதவி தேவைப்படும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும், எங்களுக்குத் தகவல் தரலாம். தகவல் கிடைத்ததும், மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கும், அவர்களின் வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, விவரங்களைச் சேகரித்து, உதவி பெறத் தகுதியான மாணவர் என்றால், உடனே, தேவையானவற்றை செய்வோம். எங்களின் அமைப்பைப் பற்றி அறிந்த வெளிநாட்டு நண்பர்கள் பலர், உதவ முன்வந்துள்ளனர். இதையெல்லாம் விட, எங்கள் பெற்றோர் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். கல்வியால் மட்டுமே, சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில், உறுதியாக உள்ளோம். அதனால், கல்வியை அடிப்படையாக வைத்தே, எங்கள் செயல்பாடுகள் இருக்கும். கற்றறிந்த சமூகத்தை உருவாக்குவதே, எங்களின் லட்சியம்.

படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்தேன்!
குழந்தை தொழிலாளியாக இருந்து, இன்று அமெரிக்காவில் அனிமேஷன் படிக்கச் செல்லும் முகமது ஷெரீப்: என் அப்பாவிற்கு, பிளம்பிங் வேலை. போதிய வருமானம் இல்லாவிட்டாலும், என்னை கஷ்டப்பட்டு, படிக்க வைத்தார். ஒரு கட்டத்தில், வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் அளவிற்கு கஷ்டம். அந்தக் கஷ்டத்தை, என்னிடம் அவர்கள் சொல்லவே இல்லை. அப்போது, நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலுள்ள வறுமை எனக்கு புரிய ஆரம்பித்தது. பள்ளிக்குப் போவ தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றால், அதில் கிடைக்கும் வருமானத்தை, வீட்டில் கொடுக்கலாம் என்று நினைத்து, புக் பைண்டிங் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் வேலைக்குப் போவது, வீட்டில் தெரிந்து, திட்டினர். இந்த நேரத்தில், "அருணோதயா' என்ற தொண்டு நிறுவனம் நடத்தும் சம்மர் கேம்பிற்கு, நண்பர்கள் என்னை அழைத்துச் சென்றனர். அங்கு, குழந்தைகள் உரிமைகள் குறித்து பேசினர். மூன்று நாள் கேம்பில், நிறைய கற்றுக் கொண்டேன். என் ஓவியத் திறமையையும், நடனத் திறமையையும் பார்த்து, என்னை ஊக்குவித்தனர். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். கடந்த, 2008 மற்றும் 2009ல் நடந்த இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் நான், பரிசு பெற்றிருக்கிறேன். வரும் வருமானத்தை, எங்கள் படிப்புச் செலவிற்கு பயன்படுத்தினோம். இடையில், பிலிம் எடிட்டிங் மற்றும் பிலிம் மேக்கிங் குறித்த, ஆறு மாத சான்றிதழ் படிப்பை படித்தேன். சினிமா துறையில், அனிமேட்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. அமெரிக்காவில் அனிமேஷன் படிப்பை இலவசமாக படிக்க, டோபல் என்ற தேர்வை எழுதி தேர்வானேன். மொத்தம், 14 மாதப் படிப்பு. விமானச் செலவு உட்பட அனைத்தையும், அந்தக் கல்வி நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. இந்தப் பயிற்சிக்குப் பின், அனிமேஷன் துறையில், பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets