வானம் பார்த்த பூமியில், மாபெரும் மாற்றம்!
வியாழன், 1 மார்ச், 2012
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மகாராஷ்டிர மாநிலம் ஒüரங்கபாத் மாவட்டத்திலுள்ள வாகேகான் என்ற கிராமத்தில். சுமார் 1000 ஏக்கர் மானாவாரி தரிசு நிலமே கொண்ட அந்த வானம் பார்த்த பூமியில், மோசமான நிலத்தடி நீரால் ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் வறண்டு போய்விட்டன. விவசாயிகள் பிழைக்க வழி தேடி அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. ஆனால் ஆண்டு சராசரி மழையின் அளவு 700 மி.மீ. என்று இருந்தாலும், மழைத்தண்ணீர் வேகமாக அடித்துச் செல்லப்பட்டதே ஒழிய கிராமத்துக்கு எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் மழைக்காலத்தில் மட்டும் ஒரே ஒரு மானாவாரி பயிர் செய்து திருப்தியடைந்தனர்.
ஆனால் இன்று மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு தனியார் நிறுவனமும், ஓர் சமுதாய ஒருங்கிணைப்புக் கழகமும் சேர்ந்து பணியாற்றிய விளைவுதான் அது. 2009-ல் இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீர் பெருக்கத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டன. அதன்படி கிராமத்தைச் சுற்றி ஓடிய இரண்டு ஓடைகளில் தடுப்பு அணைகள் கட்டப்பட்டன. இதனால் பூமியின் நிலத்தடி நீர் உயர்ந்து வழிந்தது. 40 அடி ஆழ ஆழ்துளைக் கிணறுகள் கூட நிரம்பி வழிய ஆரம்பித்தன.
விவசாயிகள் மழைக்காலத்தில் ஆரஞ்சு மற்றும் பல வண்ண ரோஜா மலர்ச்செடிகளையும், பருத்தி மற்றும் ஊடுபயிராக வெள்ளைப் பூண்டும் பயிரிட ஆரம்பித்தனர்.
சொட்டு நீர்ப் பாசனம் போன்ற புதிய உத்திகளையும் விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர். ஆண்டு முழுவதும் தொடர்ந்து விவசாயம் நடைபெறுவதால், ஒரு ஏக்கரில் வருமானம் போய் ஒன்றரையிலிருந்து இரண்டரை லட்சமாக உயர ஆரம்பித்துள்ளது. அமோக விளைச்சல்தான் இதற்குக் காரணம். இதற்காகப் பெறப்பட்ட கடனையும் அடைத்து லாபமும் பெறத் தொடங்கிவிட்டனர் விவசாயிகள். உச்சகட்டமாக இந்த ஆண்டிலிருந்து பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.500 பரிசு தருவதாக வாகேகான் ஊராட்சி அறிவித்துள்ளது.
வாகேகான் போன்று முன்னேறத் துடிக்கும் கிராமங்கள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ளன. பொது சேவை தொண்டு நிறுவனங்கள் இவற்றைத் தத்து எடுக்க வேண்டும். அந்தந்த கிராம இருப்பிடத்தைப் பொறுத்து புதுப்புது உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மழை சரியாகப் பெய்யாத பகுதிகளில் காடுகளை மரங்களை வளர்த்துச் செழிக்க ஆவன செய்ய வேண்டும்.