ஆண்களுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. பெண்கள்தான் சிக்கிக்கொள்கிறார்கள்.
சனி, 17 டிசம்பர், 2011
மீண்டும் ஒரு இன்டர்நெட் காதல் மோசடி, சந்தி சிரித்துள்ளது. நேரில் பார்க்காமல் பேஸ்புக்கில் அறிமுகமாகி இரவு பகலாக சாட்டிங் செய்து எண்ணங்களை பரிமாறிக்கொண்டு காதலை வளர்த்த ஜோடி பஞ்சாயத்தில் முடிந்துள்ளது. ரியல் எஸ்டேட் அதிபருக்கும் மருத்துவ கல்லூரி மாணவிக்கும் மலர்ந்த காதல், மிரட்டி பணம் பறிக்கும் வழக்காக மாற, மருத்துவ மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். தான் நிரபராதி என கோர்ட் வளாகத்தில் மாணவி கதறி புரண்டு அழுதிருக்கிறார். அவரை மகளிர் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். சென்னையில் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தவர் அனுஷா. இவருக்கும் திருச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முருகனுக்கும் இன்டர்நெட் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பணம் பறிக்கும் நோக்கில் அனுஷா திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மிரட்டுவதாக போலீசில் முருகன் புகார் செய்தார். ‘‘இருவரும் காதலித்தோம். நான் கர்ப்பமானபோது திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முருகன் கருக்கலைப்பு செய்தார். திருமணம் செய்யாமல் தவிர்க்க இப்போது பொய் பேசுகிறார். திருமணம் பற்றி பேசலாம் என என்னை வரவழைத்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பிரச்னை செய்யாமல் ஓடிவிடு என மிரட்டுகிறார். நான் ஒப்புக்கொள்ளாததால் போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார்.
நாங்கள் காதலிக்கும்போது எடுத்த போட்டோக்கள், செல்போனில் பேசிய பேச்சுக்களின் பதிவுகள் அவர் அனுப்பிய ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் என அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன’’ என கூறி இருக்கிறார் அனுஷா. முருகன் கொடுத்த புகாரின்பேரில் அனுஷாவை கைது செய்த போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்துள்ளனர். தான் நிரபராதி என கூறி கோர்ட் வளாகத்தில் தரையில் உருண்டு புரண்டு கதறி இருக்கிறார் அனுஷா. பேஸ்புக்கில் போட்டோ மற்றும் அதில் உள்ள விவரங்களை பார்த்துவிட்டு ஆரம்பிக்கும் காதல் உண்மை தெரியவந்ததும் ஒதுங்க ஆரம்பிக்கிறது. அதற்குள் ஆணோ, பெண்ணோ பிரியமுடியாத நிலைக்கு வந்துவிடுகின்றனர். அப்போதுதான் மிரட்டல் ஆரம்பிக்கிறது. போலீஸ், கேஸ் என முடிகிறது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் ஆண்களுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. பெண்கள்தான் சிக்கிக்கொள்கிறார்கள். மீண்டு வர முடியாமல் தவிக்கிறார்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டால் பிழைத்துக் கொள்வார்கள்.