வறுமையின் உச்சத்தை பார்த்தவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும்.
சனி, 3 டிசம்பர், 2011
சிறு வயதில் தந்தையை இழந்த ஏழை மாணவன், கல்லூரிகளில் இரவு நேர செக்யூரிட்டி வேலை செய்து, தனது இரண்டு தம்பிகளை படிக்க வைத்து வருகிறார்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன் நான். எனக்கு இரண்டு தம்பிகள். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். கண் பார்வை குறைந்த அம்மா, விவசாய கூலி வேலை பார்த்து எங்களை வளர்க்கிறார். உறவினர் எவரும் உதவவில்லை. தெரு விளக்கில் படிப்பதைக் கண்டு ஊரார் கிண்டல் செய்வர். இதனால், எப்படியும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென மனதுக்குள் வைராக்கியம் வந்தது. குடும்ப வறுமை காரணமாக, படிக்கும் போது அம்மாவுடன் கூலி வேலைகளுக்கு சென்று தினமும் 20 ரூபாய் சம்பாதிப்பேன். கட்டட வேலைக்கு சென்றால் 40, 50 ரூபாய் கிடைக்கும்.
கூலி வேலைக்கு சென்றதால் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. படித்தே ஆக வேண்டும் என்ற என் அம்மாவின் வற்புறுத்தலால், நெல்லையில் உள்ள கிறிஸ்தவ அன்பு இல்லத்தில் தங்கி படித்தேன். அங்கு புழு, வண்டு கலந்த உணவு வழங்கப்பட்டாலும், குடும்ப நிலைமைக்காக சகித்துக் கொண்டு படித்தேன். கப்பல் பொறியாளர் மதிவாணன், பாதிரியார் பிரான்சிஸ் ஆகியோரின் உதவியால் 924 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 பாஸ் செய்தேன். ஆனால், வேளாண் பல்கலை, பல் மருத்துவர் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் சேர முடியவில்லை. இன்று கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' இறுதியாண்டு படிக்கிறேன். வளாக நேர்காணலில் 8,000 ரூபாய் சம்பளம் பெற தேர்வு பெற்று விட்டேன்.
எனது இரண்டாவது தம்பியை இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி., டிப்ளமோவும், மூன்றாவது தம்பியை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவதும் படிக்க வைக்கிறேன். இங்குள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கிறோம். கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தனியார் கல்லூரிகளில் இரவு நேர 'செக்யூரிட்டி' பணி, பேப்பர் போடுவது, கூரியர், ஓட்டல், பேன்சி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து சம்பாதிக்கிறேன். தேர்வு நாட்களில் பணியில் இருந்து நின்று விடுவேன்.
செக்யூரிட்டி பணியில் அமைதியாக இரவில் படிக்க முடியும் என்பதால் அப்பணிகளில் அதிக நாட்கள் ஈடுபட்டேன். இப்படி சம்பாதித்து தான் எங்கள் கல்வி செலவுகளை சமாளிக்கிறோம். சிரமத்துக்கு மத்தியில் தனியாக 'ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்' படிப்பையும் முடித்துள்ளேன். வறுமையின் உச்சத்தை பார்த்த எங்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். இன்று எங்கள் அம்மாவுக்கு 53 வயது. இன்னும் கிராமத்தில் கூலி வேலை தான் செய்கிறார். சீக்கிரம் வேலையில் சேர்ந்து, அவருக்கு கண் பார்வையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அவரை கடைசி வரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். எங்கள் குடும்பத்தை கேலி செய்தவர்கள் முன்னிலையில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்.
நம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன்படி, ஒழுக்கமான குணங்களுடன் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறேன். நல்ல வேலைக்கு சென்ற பின், நிறைய ஏழைகள் படிக்க உதவ வேண்டும்; அதற்கான சக்தியை கடவுள் எனக்கு தர வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.
அவரது உருக்கமான, தன்னம்பிக்கை தெறிக்கும் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர். ரமேஷின் பேச்சைக் கேட்ட அயல்நாட்டு கல்வி ஆலோசகர் பால் செல்லக்குமார், மாணவருக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக மேடையில் அறிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் 5,000 ரூபாயும், சுகந்தி என்பவர் 1,001 ரூபாயும் வழங்கி, மாணவரின் தளராத தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.