உங்கள் வருகைக்கு நன்றி

மன அழுத்தம் குறைய வேண்டுமா

புதன், 28 டிசம்பர், 2011

பரபரப்பான இன்றைய சூழலில் காலையில் எழுந்தது முதல் நிற்க கூட நேரமில்லாமல் எப்பொழுதும்   ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. விடுமுறை நாளில் கொஞ்சமாவது ஓய்வெடுக்கச்சொல்லி உடல் கெஞ்சினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.   விளைவு, மனஅழுத்தம், பயம், அதனால் ஆரோக்கிய சீர்கேட்டில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. எனவே ஓய்வின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். ஓய்வு என்பது கண்ணை மூடி உறங்குவது மட்டுமல்ல. ஓய்வு குறித்து மருத்துவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்கள் 

அதிகாலை விழிப்பது

வைகறைத் துயில் எழு என்றனர் நம் முன்னோர்கள். அதிகாலை சுபுஹுக்கு எழுந்து வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் எந்தவித பதற்றமோ, படபடப்போ இருக்காது. அன்றைய பணிகளை அமைதியாக திட்டமிட அந்த நிமிடங்கள் ஏற்றவை. அதுவும் கூட ஒருவித ஓய்வுதான்.

தொழுகை அவசியம்

தொழுகை போன்றவை மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக்கும். உடற்பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே அது பற்றிய புத்தகங்களை படிப்பது. அது தொடர்பான சி.டி பார்ப்பது சற்று ஓய்வான மனநிலையை தரும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்வது மனத்தையும் உடலையும் நல்ல ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லும். 

நடனமாடுவது லேசாக்கும்

மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது, வாய்விட்டு பாடுவது மனதை லேசாக்கும். அதேபோல் விருப்பமான பாடலுக்கு நடனமாடுவது உடலையும், உள்ளத்தையும் வானத்தில் பறக்கவைக்கும். இதன்மூலம் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தெம்பு கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் அதனால்தான் ஆடல்நாயகனான சிவபெருமான் அழித்தல் தொழிலை கையில் வைத்திருந்தாலும் ரிலாக்ஸ்சாக தாண்டவம் ஆடியவாறு காட்சி தருகிறார். இறைவன் உணர்த்தும் தத்துவமும் அதுதான்.

நகைச்சுவை உணர்வு

நகைச்சுவை என்பது மிகப்பெரிய ஓய்வு நிலையை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் செய்யும் வேலையில் உள்ள சுமைகளை குறைப்பதில் நகைச்சுவைக்கு பங்குண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் பேசி சிரிப்பது ஒரு ஓய்வு மனநிலையை தரும். பணி சுமையை குறைக்கும். வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியில் அழுகுனி சீரியல்களைப் பார்க்காமல்,   டிவிடியில் காமெடியான   சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.

விடுமுறை மாற்றங்கள்

விடுமுறை நாட்களில் சற்றே மாற்றமாக சமையலில் உதவி செய்வது, துணி துவைப்பது என வீட்டு வேலைகளில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய ஓய்வினை தரும். மாலை நேரங்களில் காற்றாட   நடப்பதும். அமைதியான ரெஸ்டாரென்டுக்கு சென்று மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்தோடு சாப்பிடுவதும் சோர்வை நீக்கி உற்சாகத்தை தரும்.

இரவு நேர பிரார்த்தனை

இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். அப்புறம் சோர்வு எங்கே எட்டிப்பார்க்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம்கையில்தான் இருக்கிறது. ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். ஓய்வின் மூலம் நோயை விரட்டி ஆரோக்கியத்தை அடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets