இறைவனின் அருட்க் கொடையான தாய்ப்பால்
செவ்வாய், 6 டிசம்பர், 2011
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.
எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது - நீங்கள் தயாரா?' என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.
பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.
இந்த நவீன எலக்ட்ரானிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.
வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி 'சிசு" பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர, பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விசயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகிறது.
எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர். எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம்.
அதற்குத் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.
சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.
பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.
இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. புன்னியாமீன்
தாய்ப்பால் கொடுத்தால் ரத்த அழுத்தம் வராது!
நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால் அழகு கெட்டு விடும் என்ற தவறான நம்பிக்கை பல பெண்களிடம் உள்ளது. அப்படிப்பட்டவர்கள், தாங்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.
இதனால்தான், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இதையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் இளம் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், தொடர்ந்து தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாது என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், தாய்ப்பால் கொடுக்க எந்த இளம் தாயும் தயக்கம் காண்பிக்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
------------------------------------------------------------------------------------------------
17:23. 'என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
17:24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!251 'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!' என்று கேட்பீராக!
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/banoo-israyeel/
17:24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!251 'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!' என்று கேட்பீராக!
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/banoo-israyeel/