+2 பாடத்தைத் தேர்வு செய்வதில் தெளிவான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்
திங்கள், 11 ஜூன், 2012
பள்ளிப் பருவத்தில் முக்கியமான
காலகட்டம் 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கும்
மேல்நிலைக் கல்விதான். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
அரசு இரு வாய்ப்புகளை அளிக்கிறது. முதலாவதாக பொதுக் கல்வி. இரண்டாவதாக
தொழில்கல்வி. இதில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் மாணவர்களுக்கு இருக்கும்.
பொதுக் கல்வியில் கணிதம் சார்ந்த படிப்புகள், அறிவியல் சார்ந்த படிப்புகள், கணக்கு பதிவியல், வணிகவியல், வரலாறு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த படிப்புகள் என 28 வகையான பொதுப் பாடப்
பிரிவுகள்உள்ளன.
பொதுக் கல்வியைத் தேர்வு
செய்யும் மாணவர்கள், உயர்கல்வியில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர
வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்தால் அதற்கேற்ற பாடங்கள் எவை என்பதை அறிந்து
சேர வேண்டும். பொதுவாக, கணிதம் சார்ந்த படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
பொறியியல் பட்டப் படிப்பு படிக்கச் செல்ல முடியும். அறிவியல்
சார்ந்த படிப்பில் ஆர்வம்
காட்டும் மாணவர்கள் மருத்துவம் சார்ந்த உயர்கல்வியைப் பெற முடியும்.
வணிகவியல் சார்ந்த படிப்பை
மேற்கொள்ளும் மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பை பெற
முடியும். இன்றைய பெற்றோர் பலரும் இதில் மிகுந்த விழிப்புணர்வு கொண்டவர்களே!
இருப்பினும் சில நேரங்களில் அவர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படுவதுண்டு. இத்தகைய
சூழலில் தங்களுக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை அணுகி சரியான
வழிகாட்டுதலைப் பெறலாம்.
தொழில்கல்விக்கு எதிர்காலம்
தொழில்கல்வி பயிலும்
மாணவர்களுக்கும்கூட நல்ல எதிர்காலம் உண்டு. தொழில்கல்வியில் விவசாயம்,வணிகமும் வியாபாரமும், பொறியியலும் தொழில்நுட்பமும், சுகாதாரம், தையல் கலை, கணினி அறிவியல் உள்ளிட்ட 12 வகையான தொழில்கல்வி பாடங்கள்
உள்ளன. தொழில்கல்வி படிப்பும் பிளஸ் 2 போல் இரு ஆண்டுகள் கால
அளவுள்ளதுதான். இதைத் தொடர்ந்து இளங்கலை பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, விவசாயம் சார்ந்த பட்டப்
படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.
தொழில்கல்வியை முடித்து, பொறியியல் பட்டப் படிப்பில்
சேருவதெனில் பி.இ. மெக்கானிக்கல்,எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளில் சேரலாம்.
பொதுக் கல்வியை போன்றே தொழில்கல்வியை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
இலவசமாகப் பெற முடியும். பாடப் புத்தகங்களும் இலவசம்.
பொதுக் கல்வியா? தொழில்கல்வியா? என்பதை இனி நீங்கள்தான் முடிவு
செய்ய வேண்டும்.