விதம்விதமான தோரணங்கள் விற்பனை வாய்ப்புகள்
வியாழன், 28 ஜூன், 2012
களையே இல்லாத
வீடும் வாசலும் பண்டிகை நாட்களில் அழகாகின்றன. காரணம், வாசலையும் வீட்டையும் அலங்கரிக்கிற
மாவிலைத் தோரணம். அதற்குக் கூட நேரமில்லாத காரணத்தினால் பலரும் பிளாஸ்டிக்கில்
ரெடிமேடாக கிடைக்கிற மாவிலையை வாங்கி வாசலில் கட்டிவிடுகிறார்கள்.
சுற்றுச்சூழலுக்குக் கேடு உண்டாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த மணிமேகலை ‘இகோ ஃப்ரெண்ட்லி’ தோரணங்களை டிசைன் செய்கிறார். பி.எஸ்சி பட்டதாரியான இவர், இன்று முழுநேர கைவினைக் கலைப் பயிற்சியாளர். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களில் இருந்தும், ரீசைக்கிள் செய்யக் கூடிய பொருள்களில் இருந்தும் ஏராளமான பயனுள்ள அயிட்டங்களை உருவாக்க முடியும் என்கிற மணிமேகலை, விதம்விதமான தோரணங்கள் செய்வதில் ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘சணல்தான் பிரதானம். சணல்லயே கலர் கலரா கிடைக்குது. அது கிடைக்காதவங்க, பிளெயின் சணலை வாங்கி, அதுல கலர் பண்ணிக்கலாம். ஃபேப்ரிக் கலர், 3டி கிளிட்டர், மணிகள், கண்ணாடி, சமிக்கிகள், அலங்காரப் பொருள்கள், லெதர் லேஸ், பசை, வளையம்னு எல்லாத்துக்கும் சேர்த்து 750 ரூபாய்லேர்ந்து ஆயிரம் வரைக்கும் முதலீடு.’’
எத்தனை மாடல்? ஒரு நாளைக்கு எத்தனை?
‘‘வாசலுக்குக் கட்டறதுக்கு மாவிலை டிசைன். மத்த இடங்களுக்கு ஹார்ட்டின், மாம்பழ டிசைன்கள் அழகா இருக்கும். வரவேற்பறைகளுக்கு கண்ணாடி வச்ச தோரணம் அழகு. குழந்தைங்க ரூமுக்கு கார்ட்டூன் டிசைன்... கற்பனைக்கேத்தபடி எப்படி வேணா வெட்டி டிசைன் பண்ணலாம். ஒரு நாளைக்கு 6 தோரணம் வரை போடலாம்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கிரஹப்ரவேசம், கல்யாணம்னு எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்கக்கூடியது. 100 ரூபாய்லேருந்து, 275 ரூபாய் வரைக்கும் டிசைனைப் பொறுத்து விலை வைக்கலாம். 50 சதவீதத்துக்கும் மேலான லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களோட சேர்த்து 250 ரூபாய் கட்டணம்.’’