உங்கள் வருகைக்கு நன்றி

நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

புதன், 13 ஜூன், 2012


லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.
மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.
கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.
உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.
கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''
திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.
நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.
இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.
இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.
அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets