ரேஷன் கார்டு முதல் வங்கி கணக்கு வரை, அவசியம் வேணும் ஆதார் கார்டு
செவ்வாய், 26 ஜூன், 2012
ஏழை மக்களுக்காகவும், நடுத்தர வர்த்தக்கத்தை சேர்ந்தவர்களுக்காவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை
கொண்டு வருகிறது. ஆனால், உரிய ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகள் சிலரால் நலத்திட்டங்களை பெற
முடிவதில்லை. அவர்களால் வங்கி கணக்குகூட தொடங்க முடிவதில்லை. குடும்ப அட்டை வாங்க
முடிவதில்லை. இன்னும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதே போல, வேலை விஷயமாக வெளி
மாநிலங்களுக்கு குடிபெயரும் போது, குடும்ப அட்டை, வங்கி
கணக்கு தொடங்க அடிப்படை ஆதாரம் இல்லாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ‘ஆதார் கார்டு‘ திட்டத்தை
கொண்டு வந்துள்ளது.
ஏழைகளின் அத்தியாவசிய தேவை உணவு, மருத்துவம், கல்வி.
இவற்றை வழங்க அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், போலி குடும்ப அட்டை போன்ற
காரணங்களால் ஏழைகளுக்கு முழுப் பயனும் கிடைக்காமல் போகிறது. ஏழைகளுக்கு கிடைக்க
வேண்டியவை, போலிகளால் சுரண்டப்படுகிறது. இதற்கு ஆதார் கார்டு மூலம் தீர்வு காண முடியும்.
ஆதார் கார்டு என்றால் என்ன?
ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டை.
இது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக
இந்தியா முழுவதும் செல்லுபடியாகக் கூடியது.
ஆதார் பெயர் காரணம் என்ன?
ஆதார் என்றால் ஆதாரம் என்று பொருள். பொதுவாக, இந்தியாவில்
உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட
ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளிதாக இருப்பதால் அடையாள அட்டைக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆதாரில் அடங்கியவை...
இதில் மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.
அதில், உங்களது
ரத்த வகை, விழி
அமைப்பு, இடது
மற்றும் வலது கை விரல் ரேகை, பிறந்த தேதி, தாய், தந்தை
ஊர், மாவட்டம், மாநிலம்
மற்றும் உங்கள் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து வைக்கப்படும்.
இதன் தனித்துவம் என்ன?
இந்த 12 இலக்க எண் உங்களுக்கே
உரித்தானது. இது ஒரு ரேண்டம் எண். ஆதார் கார்டு ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே
வழங்கப்படும். இதில் போலிகளை உருவாக்குவது இயலாத காரியம்.
எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கு துவக்கலாம்.
தொலைபேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளை பெற அடையாள
சான்றாக பயன்படுத்தலாம்.
எப்படி பெறுவது?
தபால் நிலையங்கள் மூலம் ஆதார் கார்டு
வழங்கப்படுகிறது. சென்னையில் கடந்த மாதம் 24ம் தேதி ஆதார் கார்டு
விண்ணப்பிக்கும் பணி அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் துவங்கியது.
விண்ணப்பித்தவர்களுக்கு தற்காலிக எண் வழங்கப்படும். அதன் பிறகு 60&90 நாட்களில்
ஆதார் கார்டு உங்கள் வீடு தேடி வரும். தற்காலிக எண்ணை வைத்து உங்களின் ஆதார்
விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வயது வரம்பே கிடையாது.
எவ்வளவு செலவாகும்?
இத்திட்டத்திற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக்
கொள்கிறது. இது ஒரு இலவச திட்டமாகும்.