உங்கள் வருகைக்கு நன்றி

அந்த அந்த வயசில் அதை அதை அனுபவிக்கனுங்க !

திங்கள், 11 ஜூன், 2012


நாற்பது வயதுக்கு மேல் மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியாது; இளமையில்தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் என்ற கருத்து சரியல்ல என்று புதிய ஆய்வு கூறுகிறது. வேலையில் இருந்து ஓய்வு பெறும் காலத்தில்தான் மனிதர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. வாழ்க்கையின் கடைசி காலத்தில் & 80 வயதுக்கு அப்புறம் &இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்ற விரக்தி மேலிடுகிறதாம். 

குயின்ஸ்லாந்தில் இரு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வு இது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அறுபதாயிரம் பேரிடம் பத்தாண்டுகளாக சேகரித்த தகவல்களை அலசியதில், 55 வயதில் இருந்து 75 வயது வரையிலான காலகட்டத்தில் மக்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் வாழ்கின்றனர் என்பது தெரிய வந்தது. எப்போதும் சந்தோஷத்தில் மிதப்பது இளைஞர்கள் என்ற கருத்து தவறானது. 


முழுமையான மகிழ்ச்சிக்கு 10 மார்க் போடலாம் என்றால் உனது மகிழ்ச்சிக்கு என்ன மார்க் கொடுப்பாய் என்று 18 வயது ஆண்,பெண்களிடம் கேட்டபோது கிடைத்த சராசரி பதில் 7.ஜெர்மனியில் 65 வயதை தாண்டியவர்கள் இதே மார்க் கொடுத்தனர். ஆஸ்திரேலிய பெரியவர்கள் 7.3 சராசரி. பிரிட்டனில் 70 வயதுக்காரர்கள் வாழ்க்கை அட்டகாசமாக போகிறது என்று 7.2 மார்க் கொடுத்துள்ளனர். 20 வயதில் அனுபவிக்கும் சந்தோஷங்கள் படிப்படியாக அதிகரித்து 70களில் உச்சத்தை எட்டுவதாக கூறலாம். ரிடையர்மென்டுக்கு பிறகு வாழ்க்கை கசக்கும் என்ற கருத்து இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. 


மகிழ்ச்சி குறைவது எதனால் என்று யோசித்தால் சூட்சுமம் புலப்படும். இளம் வயதில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். நிறைய கனவுகள். அனைத்தும் பலிப்பதில்லை. அதனால் ஏமாற்றம். வயது ஏறும்போது மனம் முதிர்ச்சி அடைகிறது. சாத்தியமானதை மட்டுமே எதிர்பார்க்கிறது. ஏமாற்றம் குறைகிறது. அதனால் தன்னம்பிக்கை வலுக்கிறது. இழந்ததை எண்ணி கவலைப்படாமல் இருப்பதை பார்த்து திருப்தி அடைகிறது. அதில் மகிழ்ச்சி நிறைகிறது. எத்தனை ஆய்வுகள் நடத்தினாலும் இறுதி முடிவு ஒன்றுதான்: மனம், வாக்கு, செயல் மூன்றும் நேர்கோட்டில் இருந்தால் வாழ்க்கை இனிக்கும். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் ஏமாற்றம் மிஞ்சும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets