உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதும், சத்தான உணவுகளும்

சனி, 2 ஜூன், 2012


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் அவர்கள் சொல்லும் காரணத்தை நம்மால் கேட்கவே முடியாது. அப்படி ஒரு காரணத்தை சொல்வார்கள் அவர்கள். ஏனெனில் அவர்களுக்கு பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் அவ்வளவு சந்தோஷம். இதற்காகவே இவர்கள் நிறைய சுட்டித்தனமான காரணங்களை சொல்வார்கள். அப்படி அவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தால் சாதாரணமாக நினைக்காமல் அவர்களது மனநிலையை மாற்றி, பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி அவர்கள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க அடிக்கடி சொல்லும் 4 காரணங்கள் என்னென்னவென்றும், பெற்றோர்கள் எவ்வாறு உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

1. 'அம்மா எனக்கு வயிறு வலிக்குது!/தலை வலிக்குது!/கால் வலிக்குது!/முதுகு வலிக்குது!/பல் வலிக்குது!' என்று சொல்வார்கள். இது ரொம்ப பழைய காரணங்கள் தான். ஆனால் இப்படி சொன்னால் எந்த தாய் தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாள். இதைத் தெரிந்து கொண்டு தான் குழந்தைகள் அவ்வாறு சொல்கிறார்கள். ஆகவே பெற்றோர்களே ஏமாறாமல், தங்கள் குழந்தைகளது உடல் நிலையை தினமும் கவனமாக கவனித்து வாருங்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும், நீங்கள் பயப்படாமல் அவர்களை பள்ளிக்கு அனுப்பலாம்.


2. 'எனக்கு டீச்சரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. அவர் என்னை எப்போதும் திட்டுகிறார்' என்று சொல்வது. இதையும் அடிக்கடி அவர்கள் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொன்னால் அதை அலட்சியமாக நினைக்காமல், உடனே விசாரித்து விடுங்கள். ஏனென்றால் சிலசமயம் அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கலாம். ஆகவே விசாரிப்பது நல்லது.


3. 'எனக்கு எந்த நண்பர்களும் அந்த ஸ்கூலில் இல்லை' என்று புதுவிதமாக சொல்வது. இது நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு புதிய காரணமாக இருக்கிறதா? ஆம், அவர்களால் என்ன காரணங்கள் சொல்ல முடியுமோ அதைத் தானே அவர்கள் சொல்ல முடியும்.


4. 'எனக்கு தூக்கமா வருகிறது. கண் விழிக்க முடியவில்லை, எனக்கு கண் எரிகிறது' என்றெல்லாம் சொல்வார்கள். பெற்றோர்கள் இரவில் 
குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வைக்க வேண்டும். அப்படி அவர்கள் தூங்கினால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இதை வைத்து நீங்கள் அவர்களது உடல் நிலையை தெரிந்து கொள்ளலாம்.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள் :

1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.


2. நிமோனிக்ஸ் (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.


3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.


4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.


5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.


6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் இருந்து, லாங்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் .


ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க.
 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets