உங்கள் வருகைக்கு நன்றி

தன் உயிரை விடவும் தயாராகி விடுவது ஏன் ?

ஞாயிறு, 24 ஜூன், 2012


பணம்... பணம்! இதற்காகவே பாடு படுகின்றனர் மக்கள். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நகர்புறங்களுக்கு வந்து விடுகின்றனர் கிராமவாசிகள். எப்படியாவது பணம் சேர்த்து, குடும்பத்துக்கு கொடுத்து விட வேண்டும் என்று விரும்பு கின்றனர். இதற்காக, தன் உயிரை விடவும் தயாராகி விடுவதுண்டு. ஒருவர் விமானத்தில் பயணம் செய்கிறார்... "விமானம் விபத்துக்குள்ளானால், அது உங்களுக்கு ஆபத்தில்லையா?' என்று கேட்டால், "விபத்தில் நான் போய் விட்டாலும், குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கிடைக்குமே...' என்கிறார். 
ராணுவத்தில் சேர்ந்து கண் காணாத இடத்துக்கு போகிறார் ஒருவர்... "ராணுவத்தில் உயிருக்குக் கூட ஆபத்து வருமே?' என்றால், "அதனால் என்ன? குடும்பத்துக்கு பணம் வருமே...' என் கிறார். எப்படியும் பண ஆசை விடுவதில்லை. ஒருவன், தலையில் பண மூட்டை, ஒரு கையில் குழந்தை, ஒரு கையில் மனைவி, இப்படியாக ஒரு ஆற்றைக் கடக்க முயன்றான். ஆற்றில் வெள்ளம்; அவனால் ஆற்றை கடக்க முடியவில்லை.
அவனை பார்த்து, "உன்னிடம் உள்ளதை விட்டு விட்டால், ஆற்றை கடக்கலாம்...' என்றார் ஆற்றங் கரையில் இருந்த பெரியவர் ஒருவர். உடன் அவன் கையில் பிடித்திருந்த குழந்தையை விட்டு விட்டான். அது ஆற்றோடு போய் விட்டது; அப்படியும் அவனால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. கைப்பிடித் திருந்த மனைவியையும் விட்டு விட்டான். அப்படியும் ஆற்றை கடக்க முடியவில்லை அவனால். பெரியவர், "உன் தலையில் உள்ள மூட்டையையும் விட்டு விடு...' என்றார். அதற்கு அவன், "அது மட்டும் முடியாது. அது, நான் கஷ்டப் பட்டு சேர்த்து வைத்த பணம். அதை நான் எப்படி விட முடியும்...' என்று சொல்லி, தலையில் பண மூட்டையுடன் ஆற்றைக் கடக்க முயன்றான்.
ஆற்று வெள்ளம் அவனையும், பண மூட்டை யுடன் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதாவது மனைவி, பிள்ளைகள் போனாலும் பரவாயில்லை; பணம் மட்டும் போகக் கூடாது. இப்படி ஒரு பண ஆசை. இந்தப் பணம் எத்தனை நாள் இவனோடு இருக்கப் போகிறது? இவன் தான் எத்தனை நாள் இந்தப் பணத்தோடு இருக்கப் போகிறான். என்றாவது ஒரு நாள், இவனும் இருக்கப் போவதில்லை; பணமும் இருக்கப் போவதில்லை. 
வாழ்க்கையே நிரந்தரமில்லாத போது, பணமோ, மனைவி - மக்களோ என்ன சாசு வதம்? என்றும் இருப்பவன் இறைவன் ஒருவன் மட்டும்தான். பணம், மனைவி - மக்களை நம்பி, அவர்கள் மீது அன்பும், பாசமும் வைப்பதைவிட, இறைவனை அதிகமாக நேசிக்க வேண்டும். என்றும் உள்ள இறைவனுக்கு பயந்து அவன்  ஏவியவைகளை செயல் படுத்தி மக்கள் மீது அன்பு வைக்கலாமே! அது தான் கிடையாது. பணத்தின் மீது தான் ஆசை. பணம் எத்தனை நாட்களுக்கு காப்பாற்றும்? ஏமாந்தால் திருடன் கொண்டு போய் விடலாம். இறந்தால் உறவினர் பங்கு போட்டுக் கொள்வர். பின் இவனுக்கு என்று எது உள்ளது?  இறைவனை வழிபட்டால் போதும்! அவன், அவனது துன்பங்களை போக்கி, நல்வழி காட்டி நற்கதி அடையச் செய்வான்; அது தானே முக்கியம். யோசிக்க வேண்டும்!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets